Wednesday, February 23, 2011

தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை: உலக கோப்பையில் இன்று விறுவிறு

புதுடில்லி: உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றியுடன் துவக்க இரு அணிகளும் ஆயத்தமாக உள்ளன.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில், இன்று நடக்கும் "பி' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
காலிஸ் நம்பிக்கை:
சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் களமிறங்கும் தென் ஆப்ரிக்க அணி, பயிற்சி போட்டியில் ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி இருப்பது கூடுதல் பலம். இந்த அணி, நட்சத்திர வீரரான "ஆல்-ரவுண்டர்' காலிசை முழுமையாக நம்பி உள்ளது. "சூப்பர் பார்மில்' உள்ள இவர், தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகிப்பார். கேப்டன் ஸ்மித், ஆம்லா ஜோடி நல்ல துவக்கம் கொடுக்கும் பட்சத்தில், இமாலய இலக்கை பதிவு செய்யலாம். இவர்களை தவிர டிவிலியர்ஸ், டுமினி, டு பிளசிஸ், இங்ராம் உள்ளிட்டோரும் பேட்டிங்கில் அசத்தலாம்.
ஸ்டைன் மிரட்டல்:
தென் ஆப்ரிக்க அணியின் மிகப் பெரிய பலம் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டைன். உலகின் "நம்பர்-1' பவுலரான இவர், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார் என்பதில் சந்தேகமில்லை. இவருடன் மற்றொரு "வேகப்புயல்' மார்னே மார்கல் இணைவது கூடுதல் பலம். இவர்கள் இருவரும், ஐ.பி.எல்., தொடரில் விளையாடி இருப்பது சிறப்பம்சம். இவர்களை தவிர காலிஸ், டிசோட்சபே, பார்னல், இம்ரான் தாகிர் உள்ளிட்ட வேகங்களும் மிரட்டலாம். சுழலில் அனுபவ ஜோகன் போத்தாவுடன், இளம் ராபின் பீட்டர்சன் சாதிக்கலாம்.
பலமான பேட்டிங்:
பயிற்சி போட்டியில் கென்யாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, இலங்கை அணியிடம் தோல்வி அடைந்தது. வால்ஷ், அம்புரோஸ் உள்ளிட்ட பிரபல வேகப்பந்துவீச்சாளர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, இம்முறை அதன் பேட்டிங் வரிசைதான் பலம். அனுபவ வீரர்களான சந்தர்பால், சர்வான் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பயிற்சி போட்டியில் சதம் கடந்து அசத்திய சர்வான், <லீக் சுற்றிலும் சாதிக்கலாம். கிறிஸ் கெய்ல், போலார்டு, டுவைன் பிராவோ உள்ளிட்டோர் சிறந்த "ஆல்-ரவுண்டராக' வலம்வர வாய்ப்பு உள்ளது. இவர்கள் மூவரும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடி இருப்பது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. துவக்க வீரர் அட்ரியன் பரத், காயம் காரணமாக வெளியேறியது பின்னடைவான விஷயம்.
ரசல் எதிர்பார்ப்பு:
பயிற்சி போட்டியில் சாதித்த ஆன்ட்ரூ ரசல், கீமர் ரோச் <உள்ளிட்ட வேகங்கள், லீக் சுற்றிலும் விக்கெட் வேட்டை நடத்தலாம். கேப்டன் டேரன் சமி, சுலைமான் பென், ரவி ராம்பால், டேரன் பிராவோ உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் "மிடில்-ஓவரில்' நம்பிக்கை அளிக்க வாய்ப்பு உள்ளது. சுழலில் மில்லர், கெய்ல் அசத்தலாம்.
இன்றைய போட்டியில் சமபலத்துடன் உள்ள இரு அணிகள் மோத இருப்பதால், சுவாரஸ்யமான ஆட்டத்தை ரசிகர்கள் கண்டு ருசிக்கலாம்.
ஐந்தாவது முறை
உலக கோப்பை அரங்கில், தென் ஆப்ரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஐந்தாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக நான்கு போட்டியில் விளையாடிய இவ்விரு அணிகள், தலா இரண்டு வெற்றி கண்டன.
* கடந்த 1992ல் நடந்த உலக கோப்பை தொடரில், தென் ஆப்ரிக்க அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. இதற்கு 1996ல் நடந்த காலிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பதிலடி கொடுத்தது. பின்னர் 2003ல் நடந்த தொடரின் லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் வெற்றி பெற்றது. இதற்கு 2007ல் நடந்த தொடரின் "சூப்பர்-8' சுற்றில் தென் ஆப்ரிக்க அணி பதிலடி கொடுத்தது.
* கடந்த 2007ல், 4 விக்கெட்டுக்கு 356 ரன்கள் குவித்த தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக உலக கோப்பை அரங்கில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதேபோட்டியில் 9 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது.
* கடந்த 1992ல், 8 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக உலக கோப்பை அரங்கில் குறைந்த பட்ச ஸ்கோரை பெற்றது. இதேபோட்டியில் 136 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக குறைந்த பட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வரிசையில் லாரா (257 ரன்கள்) முன்னிலை வகிக்கிறார். தென் ஆப்ரிக்கா சார்பில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் டிவிலியர்ஸ் (146 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.
* தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் வரிசையில் ஹார்பர் (4 விக்.,) முதலிடத்தில் உள்ளார். தென் ஆப்ரிக்கா சார்பில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில் பிரிங்கிள் (4 விக்.,) முன்னிலை வகிக்கிறார்.

இடது கையில் சச்சின் பயிற்சி

பெங்களூரு: இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், இடது கையில் பேட்டிங் பயிற்சி எடுத்தது, எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய துணைக்கண்டத்தில் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்றுள்ளன. "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இருந்தது. இரண்டாவது போட்டியில் வரும் பிப். 27 அன்று இங்கிலாந்தை சந்திக்கிறது.
இதற்காக இந்திய வீரர்கள் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில், கடந்த இரண்டு நாட்களாக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த மூன்று மணி நேரத்துக்கும் அதிகமான பயிற்சியில் பேட்டிங்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.
துவக்க வீரர் சேவக், தமிழகத்தின் அஷ்வின், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் இதில் பங்கேற்கவில்லை. யுவராஜ் சிங் பேட்டிங் பயிற்சிக்குப் பதிலாக, 20 நிமிடம் பவுலிங் செய்தார். காம்பிர், கேப்டன் தோனி, விராத் கோஹ்லி, யூசுப் பதான் ஆகியோர் அரை மணி நேரம் பேட்டிங் பயிற்சி செய்தனர்.
ஜாகிர் கான், ஹர்பஜன் இருவரும் முதலில் சிறிது நேரம் பந்து வீச்சில் ஈடுபட்டனர். பின் வழக்கத்துக்கு மாறாக, பேட்ஸ்மேன்களை விட அதிக நேரம் பேட்டிங் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, இவர்கள் செயல்பட்டது வித்தியாசமாக இருந்தது. பயிற்சியாளர் கிறிஸ்டன் இவர்களின் பேட்டிங்கிற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். இடுப்பு வலியால் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்காத ஆஷிஸ் நெஹ்ரா லேசான உடற்பயிற்சியில் ஈடுபட்டார்.
இடது கை பயிற்சி:
முழங்காலில் ஏற்பட்ட வலி காரணமாக, முதல் நாளில் லேசான பயிற்சியில் ஈடுபட்ட சச்சின், நேற்று "கிளவுஸ்' அணியாமல் இடது கையில் சிறப்பான முறையில் பந்தை எதிர்கொண்டு, பேட்டிங் பயிற்சி செய்தார். இவருக்கு சில இந்தியா, உள்ளூர் பவுலர்கள் பவுலிங் செய்தனர். சச்சினின் இந்த முயற்சி எல்லோருக்கும் வித்தியாசமாக இருந்தது.

பாண்டிங்கிற்கு தண்டனை உறுதி

புதுடில்லி: வீரர்கள் அறையில் இருந்த "டிவி' யை <உடைத்த பாண்டிங், தண்டனையில் இருந்து தப்பமுடியாது எனத் தெரிகிறது.
ஆமதாபாத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வேயை வென்றது. இப்போட்டியில் ரன் அவுட்டான ஆத்திரத்தில் இருந்த பாண்டிங், வீரர்களின் "டிரஸ்சிங்' அறையில் இருந்த 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள "டிவி'யை உடைத்தார். பின் தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டார்.
ஆனால் பாண்டிங் செயல் குறித்து, குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் (ஜி.சி.ஏ.,) சார்பில் இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) புகார் தரப்பட, அதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.,) அனுப்பியது.
இதுகுறித்து ஐ.சி.சி., செய்தித்தொடர்பாளர் காலின் கிப்சன் கூறுகையில்,"" எங்களிடம் புகார் வந்தது உண்மைதான். பாண்டிங்கின் செயல் கிரிக்கெட் விதிகளை மீறிய செயல் தான். தற்போது ஆஸ்திரேலிய வீரர்கள் பயணத்தில் உள்ளனர். இதனால் அவர்களிடம் தொடர்பு கொள்ளும் வரை, புகார் குறித்த எந்தவிபரமும் தெரிவிக்க முடியாது,'' என்றார்.

பாகிஸ்தான் அபார வெற்றி! *அப்ரிதி சுழலில் சிக்கியது கென்யா

அம்பாந்தோட்டை: கென்யா அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி 205 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. சுழலில் அசத்திய அப்ரிதி 5 விக்கெட் கைப்பற்றினார். பேட்டிங்கில் சொதப்பிய கென்ய அணி, இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் நடக்கிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் "ஏ' பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான், கென்யா அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி பேட்டிங் தேர்வு செய்தார்.
திணறல் துவக்கம்:
பாகிஸ்தான் அணிக்கு ஷெசாத், ஹபீஸ் துவக்கம் கொடுத்தனர். கென்யா அணியின் ஒடாயோ, ஒடியனோ இணைந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்த, பாகிஸ்தான் வீரர்கள் ரன்சேர்க்க திணறினர். ஹபீஸ் 9 (20 பந்து), ஷெசாத் 1 (18 பந்து) இருவரும் அடுத்தடுத்து திரும்பினர். பாகிஸ்தான் அணி முதல் 9 ஓவரில் 24 ரன்கள் மட்டும் எடுத்தது.
கம்ரான் அபாரம்:
பின் கம்ரான் அக்மல், அனுபவ யூனிஸ் கான் இணைந்து அணியின் "ரன்ரேட்டை' உயர்த்தினர். நெகேமையா ஓவரில் யூனிஸ் கான் 3 பவுண்டரி அடித்தார். அவ்வப்போது பவுண்டரி அடித்த கம்ரான் அக்மல், தனது 9வது அரைசதம் அடித்து (55) அவுட்டானார். சிக்சர் அடித்து ரன்கணக்கை துவக்கிய மிஸ்பாவும், யூனிஸ் கானுக்கு "சூப்பர் கம்பெனி' கொடுத்தார். யூனிஸ் கான், சர்வதேச அரங்கில் 40 வது அரைசதம் (50) எடுத்து வெளியேறினார்.
உமர் அசத்தல்:
அடுத்து மிஸ்பாவுடன் இளம் உமர் அக்மல் இணைய, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்நிலையில் மிஸ்பா 65 ரன்களில் அவுட்டானார். மறுமுனையில் ஒடியனோ ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி உட்பட நான்கு பவுண்டரிகள் விளாசினார். பவுண்டரி மழையாக பொழிந்த உமர் அக்மல் 71 (52 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்களுக்கு ஒபுயாவிடம் பிடிகொடுத்தார்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் அப்ரிதி (7) ஏமாற்றினார். பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்தது. அப்துல் ரசாக் (8), அப்துர் ரெஹ்மான் (5) அவுட்டாகாமல் இருந்தனர். கென்யா சார்பில் ஒடாயோ 3 விக்கெட் வீழ்த்தினார்.
சொதப்பல் பேட்டிங்:
இமாலய இலக்கை விரட்டிய கென்ய அணிக்கு இம்முறை மவுரிஸ், வாட்டர்ஸ் இணைந்து சுமாரான துவக்கம் தந்தனர். சற்று நேரம் தாக்குப்பிடித்த மவுரிஸ் (16), வாட்டர்ஸ் (17) இருவரும் அடுத்தடுத்து அவுட்டானர்.
தற்காப்பு ஆட்டம்:
பின் கேப்டன் டிகாலோ, ஒபுயா இருவரும் இலக்கை துரத்தி வெற்றி பெறுவதை விட, விக்கெட்டை காப்பாற்றும் வகையில் தற்காப்பு ஆட்டத்தில் இறங்கினர். இதனால் ரன்வேகம் மந்தமானது.
அப்ரிதி எழுச்சி:
பேட்டிங்கில் ஏமாற்றிய அப்ரிதி, பவுலிங்கில் கைகொடுத்தார். இவரது அபாரமான சுழலில் டிகாலோ (13), மிஸ்ரா (7), கமன்டே (2) சிக்கினர். ஒபுயா (47) அரைசத வாய்ப்பை பறித்த அப்ரிதி, சர்வதேச அரங்கில் நான்காவது முறையாக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
பின் வரிசையில் ராகேப் படேல், ஒடாயோ, நிகோகே, நெகேமையா என நான்கு வீரர்களும் வரிசையாக "டக்' அவுட்டாகினர். கென்யா அணி 33.1 ஓவரில் 112 ரன்களுக்கு சுருண்டு, 205 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் சார்பில் அப்ரிதி 5, உமர் குல் 2, ஹபீஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணி வரும் 26ம் தேதி இலங்கையை சந்திக்கிறது.

அதிக உதிரிகள்
நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், கென்ய அணி 46 உதிரி ரன்களை வாரி வழங்கி, சர்வதேச அளவில் நான்காவது இடத்தை பெற்றது. முதல் மூன்று இடங்களில் ஸ்காட்லாந்து (59), இந்தியா (51), பாகிஸ்தான் (47) அணிகள் உள்ளன. இதற்குமுன் இந்தியாவுக்கு எதிரான 1999 உலக கோப்பை தொடரில் 44 உதிரிகளை கென்யா கொடுத்திருந்தது.

ஸ்கோர்போர்டு
பாகிஸ்தான்
ஹபீஸ்(கே)வாட்டர்ஸ்(ப)ஒடியனோ 9(20)
ஷெசாத்(கே)கமன்டே(ப)ஒடாயோ 1(18)
கம்ரான்(ஸ்டம்டு)மவுரிஸ்(ப)நிகோகே 55(67)
யூனிஸ் கான்-எல்.பி.டபிள்யு.,(ப)டிகாலோ 50(67)
மிஸ்பா(கே)ஒடியனோ(ப)கமன்டே 65(69)
<<உமர்(கே)ஒபுயா(ப)ஒடாயோ 71(52)
அப்ரிதி-எல்.பி.டபிள்யு.,(ப)ஒடாயோ 7(4)
ரஜாக்-அவுட் இல்லை- 8(6)
ரெஹ்மான்-அவுட் இல்லை- 5(3)
உதிரிகள் 46
மொத்தம் (50 ஓவரில் 7 விக்.,) 317
விக்கெட் வீழ்ச்சி: 1-11(முகமது ஹபீஸ்), 2-12(அகமது ஷெசாத்), 3-110(கம்ரான் அக்மல்), 4-155(யூனிஸ் கான்), 5-273(மிஸ்பா உல் ஹக்), 6-289(உமர் அக்மல்), 7-289(சாகித் அப்ரிதி).
பந்து வீச்சு: ஒடாயோ 7-2-41-3, ஒடியனோ 9-1-49-1, நெகேமையா 7-0-65-0, நிகோகே 10-0-46-1, கமன்டே 7-0-64-1, டிகாலோ 9-0-44-1, ஒபுயா 1-0-5-0.
கென்யா
மவுரிஸ்(கே)கம்ரான்(ப)குல் 16(37)
வாட்டர்ஸ்-ரன் அவுட்(<உமர் அக்மல்) 17(31)
ஒபுயா(கே)ஷெசாத்(ப)அப்ரிதி 47(58)
டிகாலோ(ப)அப்ரிதி 13(33)
மிஸ்ரா-எல்.பி.டபிள்யு.,(ப)அப்ரிதி 6(16)
ராகேப்(கே)உமர் அக்மல்(ப)ஹபீஸ் 0(6)
கமன்டே-எல்.பி.டபிள்யு.,(ப)அப்ரிதி 2(3)
ஒடாயோ-எல்.பி.டபிள்யு.,(ப)அப்ரிதி 0(8)
நெகேமையா-ரன் அவுட்(ப)யூனிஸ் 0(6)
நிகோகே(ப)உமர் குல் 0(1)
ஒடியனோ-அவுட் இல்லை- 0(1)
உதிரிகள் 11
மொத்தம் (33.1 ஓவரில் ஆல் அவுட்) 112
விக்கெட் வீழ்ச்சி: 1-37(வாட்டர்ஸ்), 2-43(மவுரிஸ்), 3-73(டிகாலோ), 4-79(மிஸ்ரா), 5-85(ராகேப் படேல்), 6-87(கமன்டே), 7-101(ஒடாயோ), 8-112(ஒபுயா), 9-112(நெகேமையா), 10-112(நிகோகே).
பந்து வீச்சு: சோயப் அக்தர் 5-1-10-0, அப்துல் ரஜாக் 5-1-23-0, உமர் குல் 4.1-0-12-2, அப்துர் ரெஹ்மான் 7-1-18-0, அப்ரிதி 8-3-16-5, ஹபிஸ் 4-1-26-1.

Tuesday, February 22, 2011

பாகிஸ்தானை சமாளிக்குமா கென்யா?

அம்பாந்தோட்டை: உலக கோப்பை லீக் போட்டியில் இன்று பாகிஸ்தான் அணி, பலம் குன்றிய கென்யாவை சந்திக்கிறது. இதில், சுலப வெற்றி பெற பாகிஸ்தான் தயாராக உள்ளது.
இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று அம்பாந்தோட்டையில் (இலங்கை) நடக்கும் "ஏ' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு), பாகிஸ்தான், கென்யா அணிகள் மோதுகின்றன.
சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் அணி, இம்முறை சாதிக்க வாய்ப்பு உள்ளது. பயிற்சி போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்திய போதும், இங்கிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
சூப்பர் கூட்டணி:
தற்போதைய பாகிஸ்தான் அணியில் இளம் மற்றும் அனுபவ வீரர்கள் இடம் பெற்றிருப்பது பலம். யூனிஸ் கானின் அனுபவம், அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகிக்கும். பயிற்சி போட்டியில் சதம் கடந்து அசத்திய மிஸ்பா, "மிடில்-ஆர்டரில்' சாதிக்கலாம். நல்ல "பார்மில்' உள்ள முகமது ஹபீஸ், அகமது ஷெசாத் உள்ளிட்ட இளம் வீரர்கள், சூப்பர் துவக்கம் அளிக்கும் பட்சத்தில், வலுவான இலக்கை அடையலாம். கம்ரான், <உமர் அக்மல், விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனாக அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. "ஆல்-ரவுண்டராக' கேப்டன் அப்ரிதி, அப்துல் ரசாக் கைகொடுக்க வாய்ப்பு உள்ளது.
அசத்தல் வேகம்:
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சு அசுர பலத்துடன் காட்சி அளிக்கிறது. இரண்டு உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள அக்தர், 16 போட்டியில் 27 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இவருடன் "சூப்பர் பார்மில்' உள்ள உமர் குல், வகாப் ரியாஸ், அப்துல் ரசாக் உள்ளிட்டோர் இணைவது வேகத்தின் பலத்தை அதிகரித்துள்ளது. உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடி, உலக கோப்பை அணியில் இடம் பிடித்த இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜுனாய்டு கான், அதிர்ச்சி அளிக்க வாய்ப்பு உள்ளது. சுழலில் அனுபவ அப்ரிதியுடன், சயீத் அஜ்மல், அப்துல் ரெஹ்மான் உள்ளிட்டோர் இணைவது சிறப்பம்சம்.
கட்டாய எழுச்சி:
நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 69 ரன்களுக்கு சுருண்ட கென்ய அணி, இன்று எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முந்தைய உலக கோப்பை தொடர்களில் வெஸ்ட் இண்டீஸ் (1996), இலங்கை (2003), வங்கதேசம் (2003) உள்ளிட்ட முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி அளித்த கென்ய அணியில், இம்முறை எட்டு புதுமுக வீரர்கள் இடம் பெற்றிருப்பது பின்னடைவான விஷயம். முந்தைய உலக கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ள கேப்டன் ஜிம்மி கமன்டே, காலின்ஸ் ஒபயா, டேவிட் ஒபயா, ஸ்டீவ் டிக்காலோ, பீட்டர் ஆன்கோண்டா, தாமஸ் ஒடாயோ உள்ளிட்டோர் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினால், பாகிஸ்தான் அணிக்கு சவால் அளிக்கலாம். நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதம் கடந்த வாட்டர்ஸ், இன்றைய போட்டியில் அசத்த வாய்ப்பு உள்ளது.
பாக்., ஆதிக்கம்
உலக கோப்பை அரங்கில், பாகிஸ்தான்-கென்யா அணிகள் மோதுவது இதுவே முதன்முறை. ஆனால் சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில், இவ்விரு அணிகள் ஐந்து முறை மோதி உள்ளன. இதில் அனைத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று, ஆதிக்கம் செலுத்துகிறது.
அப்ரிதி எச்சரிக்கை
பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி கூறுகையில், ""முந்தைய உலக கோப்பை தொடர்களில், பாகிஸ்தான் அணி சில அதிர்ச்சி தோல்விகளை சந்தித்துள்ளது. உதாரணமாக கடந்த 2007ல் அயர்லாந்துக்கு எதிராக தோல்வி அடைந்ததன்மூலம், முதல் சுற்றோடு வெளியேற நேரிட்டது. எனவே எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடாமல், ஒவ்வொரு போட்டியிலும் முழுதிறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற போராட வேண்டும்,'' என்றார்.

மன்னிப்பு கேட்டார் பாண்டிங்

ஆமதாபாத்: ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ரன் அவுட்டான ஆத்திரத்தில், வீரர்கள் அறையில் இருந்த "டிவி'யை தனது பேட்டினால் அடித்து உடைத்திருக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங். இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆமதாபாத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வேயை வென்றது.
இப்போட்டியின் போது ஜிம்பாப்வே வீரர் மபோபுவின் "சூப்பர் த்ரோவில்' பாண்டிங் ரன் அவுட்டானார். இந்த ஆத்திரத்தில் மைதானத்தை விட்டு வெளியேறிய இவர், வீரர்களின் "டிரஸ்சிங்' அறைக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த "டிவி'யில் இவரது ரன் அவுட் திரும்ப, திரும்ப காட்டப்பட்டுள்ளது. இதனால், கோபத்தின் உச்சிக்கே சென்ற இவர், தனது பேட்டினால், "டிவி' யை உடைத்துள்ளார். இது 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளது.
பாண்டிங் மன்னிப்பு:
இச்சம்பவத்தை முதலில் மறுத்த ஆஸ்திரேலிய "மீடியா' மானேஜர் பாட்டர்சன், பின் பாண்டிங் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்ட பின், தனது செயலுக்கு உடனடியாக பாண்டிங் மன்னிப்பு கேட்டார். பின் வேறு "டிவி'யை மாற்றுமாறு கேட்டுக்கொண்டார்,'' என்றார்.
தொடரும் அடாவடி:
ஆஸ்திரேலிய வீரர்களின் அடாவடி தொடர்கிறது. கடந்த 2003 ஆஷஸ் தொடரில் எல்.பி.டபிள்யு., அவுட் ஆன வெறுப்பில், "டிரஸ்சிங் ரூமில்' இருந்த கண்ணாடி கதவை உடைத்து, பின் அபராதம் கட்டினார் ஹைடன். கடந்த அக்டோபரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெங்களூரு டெஸ்டில், சச்சின் இரட்டை சதம் அடிக்க, இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த ஏமாற்றத்தை. காமன்வெல்த் தொடரில் பங்கேற்க டில்லி வந்த ஆஸ்திரேலிய வீரர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, விளையாட்டு கிராமத்தில் இருந்த பொருட்களை உடைத்து, "வாஷிங் மெஷினை' தூக்கி, வெளியே எறிந்தனர். தற்போது பாண்டிங்கும், அடாவடித்தனமான செயலில் இறங்கியுள்ளார்.
அருண் லால் ஆவேசம்
பாண்டிங் செயலுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அருண் லால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" உலக கோப்பை தொடரில் விளையாடுகிறோம் என்பதை பாண்டிங் நினைவில் கொள்ள வேண்டும். இவர் அடுத்து வரும் தலைமுறைக்கு உதாரணமாக இருக்க வேண்டும்,'' என்றார்.
ஐ.சி.சி.,யிடம் புகார்
பாண்டிங் செயல் குறித்து குஜராத் கிரிக்கெட் சங்க (ஜி.சி.ஏ.,) செயலர் ராஜேஷ் படேல் கூறுகையில்,"" பாண்டிங் எல்.சி.டி. "டிவி' யை உடைத்தது உண்மை தான். அவுட்டான ஏமாற்றத்தில் இப்படி நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்திடம் தெரிவித்தோம். தவிர, இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) முறைப்படி புகார் கூறியுள்ளோம். இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும் (ஐ.சி.சி.,) அனுப்பப்பட்டது. அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்,'' என்றார்.

இசைக் கருவிகளுக்கு அனுமதி!

கொழும்பு: கிரிக்கெட் போட்டிகளின் போது, இசைக்கருவிகளைக் கொண்டு வர, இலங்கை கிரிக்கெட் அனுமதி தந்துள்ளது.
இலங்கையில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக இசைக்கருவிகள் உள்ளிட்ட பல பொருட்களை, மைதானத்துக்குள் கொண்டுவர போலீசார் தடை விதித்தனர். இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ரசிகர்கள் வருகையை அதிகரிக்கும் வகையில், இசைக்கருவிகளை கொண்டு வர, இலங்கை விளையாட்டுத் துறை அனுமதி தந்துள்ளது. மற்றபடி, மதுபானங்கள், கூர்மையான பொருட்கள், வர்த்தக ரீதியிலான கேமரா, கண்ணாடி பொருட்களுக்கான தடை தொடரும்.