Saturday, February 12, 2011

வெற்றி வாகை சூடிய இலங்கை

ஆறாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 1996ல் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடந்தது. இம்முறை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, கென்யா ஆகிய அணிகள் அறிமுகமாகின. மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டன.
இத்தொடரின் போது, கொழும்பு குண்டுவெடிப்பு, கோல்கட்டாவில் கலவரம் போன்றவை பெரும் சர்ச்சையை கிளப்பின. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இலங்கை சென்று விளையாட ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மறுத்தன. இப்போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான புள்ளிகள் வழங்கப்பட்டன.
கத்துக்குட்டியாக வந்த கென்ய அணி(166 ரன்), லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை(93 ஆல் அவுட்) வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. மற்றொரு போட்டியில் அதே கென்யாவுக்கு(254/7) எதிராக இலங்கை அணி 398/5 ரன்கள் எடுத்து சாதித்தது.
பாக்., தோல்வி:
பெங்களூருவில் நடந்த காலிறுதியில் சித்து 93 ரன்கள் விளாச, இந்திய அணி(287/8), பாகிஸ்தானை(248/9) வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு காலிறுதியில் தென் ஆப்ரிக்க அணி, வெஸ்ட் இண்டீசிடம் வீழ்ந்தது.
ரசிகர்கள் கலவரம்:
கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த அரையிறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய இந்திய அணிக்கு சச்சின்(65) நல்ல துவக்கம் தந்தார். அடுத்து வந்தவர்கள் வரிசையாக வெளியேற, 34.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து தவித்தது. இதனால், அரங்கில் இருந்த 1 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போட்டி நிறுத்தப்பட்டது. இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தியா சோகத்துடன் வெளியேறியது. மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
அரவிந்தா சதம்:
லாகூரில் நடந்த பைனலில் இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்தது. பின் அரவிந்தா டி சில்வா சதம்(107) அடிக்க, இலங்கை அணி 46.2 ஓவரில் 245 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் முதல் முறையாக உலக கோப்பையை இலங்கை தட்டிச் சென்றது.
ஆட்ட நாயகன் விருதை அரவிந்தா பெற்றார்.
--------------
இது ஜெயசூர்யா "ஸ்டைல்'
முதல் 15 ஓவர்களில் "பீல்டிங்' கட்டுப்பாட்டை பயன்படுத்தி, துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜெயசூர்யா மற்றும் கலுவிதர்னா அதிரடியாக ரன் சேர்த்தனர். இது ஒரு நாள் போட்டிகளில் புதிய பாணியை உருவாக்கியது. தவிர, இலங்கை அணி கோப்பை வெல்லவும் முக்கிய காரணமாக அமைந்தது. 221 ரன்கள், 5 "கேட்ச்' மற்றும் 7 விக்கெட் கைப்பற்றிய ஜெயசூர்யா, தொடர் நாயகன் விருதை பெற்றார்.

No comments:

Post a Comment