Saturday, February 12, 2011

அசைக்க முடியாத ஆஸி.,

நான்காவது உலக கோப்பை தொடரை 1987ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்தின. வழக்கம் போல் 8 அணிகள் பங்கேற்றன. ஓவர்கள் 60ல் இருந்து, 50 ஆக குறைக்கப்பட்டன.
இத்தொடரில் "திரில்' வெற்றிகளுக்கு பஞ்சமில்லை. சென்னையில் நடந்த பரபரப்பான லீக் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதே போல பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதனால், அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
இந்தியா "அவுட்':
முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து, வெளியேறியது. மும்பையில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை சந்தித்தது. மனிந்தர் சிங் உள்ளிட்ட இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை தனது "ஸ்வீப் ஷாட்' மூலம் திணறடித்த கிரகாம் கூச்(115) சதம் அடித்தார். மறுபக்கம் மைக் கேட்டிங்(56) அரைசதம் அடிக்க, இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய இந்திய அணிக்கு அசார்(64) கைகொடுத்தார். ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தது. ஆனால், கடைசி 5 விக்கெட்டுகள் வெறும் 15 ரன்களுக்கு பறிபோக, இந்திய அணி 45.3 ஓவரில் 219 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதையடுத்து போட்டியை நடத்திய இந்தியா மற்றும் பாகிஸ்தான், பைனலுக்கு முன்னேற முடியவில்லை.
ஆஸி., ஆதிக்கம்:
கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த பைனலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் பூன்(75) கைகொடுக்க, 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியால், வெற்றியை வசப்படுத்த முடியவில்லை. கிரகாம் கூச்(35), பில்(58), கேட்டிங்(41), லாம்ப்(45) ஆகியோரது போராட்டம் வீணானது. 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. கடைசி வரை பதட்டப்படாமல் ஆடிய, ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்று, முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
ஆட்ட நாயகனாக பூன் தேர்வு செய்யப்பட்டார்.
---------
"ஹாட்ரிக்' நாயகன் சேட்டன்
உலக கோப்பை வரலாற்றில் "ஹாட்ரிக்' சாதனை படைத்த முதல் வீரர் இந்தியாவின் சேட்டன் சர்மா. கடந்த 1987ல் நாக்பூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் "வேகத்தில்' மிரட்டிய இவர், தொடர்ந்து மூன்று பந்துகளில் கென் ரூதர்போர்டு, இயன் ஸ்மித், ஈவன் சாட்பீல்டை போல்டாக்கினார். இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

No comments:

Post a Comment