Wednesday, February 16, 2011

இந்திய அணி சாதிக்கும்: இம்ரான் கான்

மும்பை:""தோனி தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பை வென்று சாதிக்கும்,'' என, முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி துவங்குகிறது. இதில் எந்த அணி கோப்பை வென்று சாதிக்கும் என முன்னாள், இந்நாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கடந்த 1992ல் பாகிஸ்தான் அணிக்கு கோப்பை வென்று சாதித்த இம்ரான் கான் கூறியதாவது: இம்முறை உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு தோனி தலைமையிலான இந்திய அணிக்கு அதிகம் இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் இந்திய அணி, பலமான பேட்டிங் வரிசை கொண்டிருக்கிறது. சிறந்த "ஆல்-ரவுண்டர்கள்' அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியின் சமீபத்திய செயல்பாடுகள் திருப்தி அளிக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக சொந்த மண்ணில் நடக்கும் ஒருநாள் தொடரில், இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உலக கோப்பை தொடரிலும் சொந்த மண்ணில் விளையாட இருப்பது சாதகமான விஷயம். ஹர்பஜன் உள்ளிட்ட திறமையான சுழற்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சில் சீனியர் வீரர் ஜாகிர் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது அனுபவம் இந்திய அணிக்கு நிச்சயம் கைகொடுக்கும்.
மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இருப்பது மிகப் பெரிய பலம். இவருக்கு இது கடைசி உலக கோப்பை தொடராக அமையலாம் என்பதால், அபார ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பார். இவரது "பார்ம்' இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகிக்கும்.
முன்னதாக, கடந்த 1992ல் நடந்த உலக கோப்பை தொடரில் விளையாட முடிவு செய்யவில்லை. பின்னர் கேன்சர் நோயால் பாதிக்கப்படுவோர்களுக்கு நிதி கொடுப்பதற்காக விளையாட முடிவு செய்தேன். இதனால் உலக கோப்பை தொடரின் பைனல், எனக்கு கடைசி போட்டியாக அமைந்தது. இதில் கோப்பை வென்று சாதித்தது என்றும் மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
உ<லக கோப்பை தொடரில், ஒவ்வொரு அணியும் சுமார் ஆறு நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்த போட்டியில் விளையாடுகின்றன. இது வரவேற்கத்தக்க ஒன்று. இதன்மூலம் முன்னணி வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில், அடுத்த போட்டிக்குள் விரைவில் குணமாகிவிடலாம். இது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல பலன் அளிக்கும். முன்னதாக நாங்கள் விளையாடிய காலகட்டத்தில், இதுபோன்ற நீண்ட ஓய்வு கிடைக்காது. இதனால் சில நேரங்களில் அதிக சிரமத்திற்கு ஆளானோம்.
இவ்வாறு இம்ரான் கான் கூறினார்.

No comments:

Post a Comment