Saturday, February 19, 2011

அசத்தல் வெற்றி பெறுமா நியூசிலாந்து!: சென்னையில் இன்று கென்யாவுடன் மோதல்

சென்னை: உலக கோப்பை தொடரில் இன்று சென்னையில் நடக்கும் லீக் போட்டியில், நியூசிலாந்து அணி, கென்யாவை சந்திக்கிறது. இதில் நியூசிலாந்து முதல் அசத்தல் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் இணைந்து உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் "ஏ' பிரிவு லீக் போட்டியில் அனுபவ நியூசிலாந்து அணி, கென்யாவை சந்திக்கிறது.
பயிற்சி ஏமாற்றம்:
நியூசிலாந்து அணி சமீபத்திய ஒரு நாள் போட்டிகளில் பெரிதாக எந்த வெற்றியும் பெறவில்லை. வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான மோசமான தோல்வியால் துவண்டு கிடக்கிறது. உலக கோப்பை பயிற்சி போட்டியிலும், அயர்லாந்தை மட்டும் வென்ற இந்த அணி, இந்தியாவிடம் மோசமாக தோற்றது.
இருப்பினும், அணியின் முன்னணி வீரர் கப்டில், ரைடர், ரோஸ் டெய்லர், பிராங்ளின் ஆகிய "டாப் ஆர்டர்' வீரர்கள் நல்ல "பார்மில்' உள்ளனர். இவர்களுடன் பிரண்டன் மெக்கலம், நாதன் மெக்கலமும் ரன் சேர்க்க முயற்சிக்கலாம்.
வருவாரா வெட்டோரி:
வேகப்பந்து வீச்சில் மில்ஸ், பென்னட், டிம் சவுத்தி கைகொடுக்கலாம். "ஆல்- ரவுண்டர்கள்' ஜேக்கப் ஓரம், ஸ்காட் ஸ்டைரிஸ் போன்றவர்களும் எதிரணியின் ரன்குவிப்புக்கு அணையிடலாம். பயிற்சி போட்டிகளில் களமிறங்காத வெட்டோரி இன்று களமிறங்குவார் என தெரிகிறது.
அதிர்ச்சி தருமா?
கடந்த 2003 உலக கோப்பை தொடரில் அதிர்ச்சி மேல், அதிர்ச்சிகளை தந்து அரையிறுதிக்கு முன்னேறியது கென்யா. இதனால் இவர்களை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. இதற்கேற்ப, நான்கு உலக கோப்பை பயிற்சி ஆட்டங்களில் 2ல் வென்றுள்ளது, இவர்களது பலத்தை காட்டுகிறது. இதில் ஸ்டீவ் டிகாலோ, வாட்டர்ஸ் இருவரும் சதம் அடித்துள்ளனர். ராகேப் படேல், காலின்ஸ் ஒபுயா, ஜாய்ஸ் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர்.
பவுலிங்கில் ஜிம்மி கமான்டே, ஜேம்ஸ் நிகோகே, நெகேமையா, தாமஸ் ஒடாயோ போன்றவர்கள் பயிற்சி ஆட்டங்களில் அசத்தியுள்ளனர். இருப்பினும் அணியில் இடம் பெற்றுள்ள 7 பேர் புதுமுகம் என்பதால், நியூசிலாந்தை சமாளிப்பது மிகவும் கடினம்.

No comments:

Post a Comment