Friday, February 18, 2011

தாக்கும் இந்தியா: தாங்குமா வங்கம்!: இன்று உலக கோப்பையில் முதல் சவால்

மிர்புர்: உலக கோப்பை தொடரில், இன்றைய முதல் சவாலில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதில், தோனி தலைமையிலான இந்திய அணி அசத்தல் வெற்றி பெற காத்திருக்கிறது. சொந்த மண்ணில் களமிறங்கும் வங்கதேச அணியும் எளிதில் விட்டுக் கொடுக்காது என்பதால், ஆக்ரோஷமான மோதலை எதிர்பார்க்கலாம்.
இந்திய துணை கண்டத்தில், பத்தாவது உலக கோப்பை தொடர்(பிப்., 19-ஏப்., 2) நடக்கிறது. இதில், பங்கேற்கும் 14 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. மிர்பூரில் உள்ள ஷேரி பங்களா தேசிய மைதானத்தில் இன்று நடக்கும் "பி' பிரிவு லீக் போட்டியில்(பகலிரவு) இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன.
பேட்டிங் பலம்:
இந்திய அணியை பொறுத்தவரை ஒரு நாள் போட்டிகளில் மகத்தான எழுச்சி கண்டுள்ளது. உள்ளூர் தவிர, அன்னிய மண்ணிலும் வெற்றிக் கொடி நாட்டியுள்ளது. சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 5-0 என வென்றது. இதன் மூலம் ஒரு நாள் போட்டிக்கான ரேங்கிங் பட்டியலில் இரண்டாவது இடத்தை(119 புள்ளி) தக்க வைத்துக் கொண்டது. பேட்டிங் தான் அணியின் மிகப் பெரும் பலம். துவக்கத்தில் அதிரடி காட்ட சேவக் உள்ளார். இவர் விளாச துவங்கி விட்டால், எளிதில் கட்டுப்படுத்த முடியாது. மறுமுனையில் அனுபவ சச்சின் மீண்டும் ஒரு முறை அசத்த உள்ளார். ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரிலும் பங்கேற்கும் இவர், மீண்டும் ரன் மழை பொழியலாம். இந்த முறையாவது இவரது கோப்பை கனவு நனவாக வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. கவுதம் காம்பிர் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். யுவராஜ் சிங் "சிக்சர் மன்னனாக' தன்னை அடையாளம் காட்ட வேண்டும். இவர்களை தவிர சுரேஷ் ரெய்னா, யூசுப் பதானும் "சூப்பர் பார்மில்' உள்ளனர். நியூசிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் அதிரடி சதம் அடித்து யூசுப், தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.
தோனி அபாரம்:
நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை பயிற்சி போட்டியில் மின்னல் வேக சதம் அடித்த தோனி, இழந்த "பார்மை' மீட்டுள்ளார். அணியில் மாற்று கீப்பர் இல்லாததால், பேட்டிங், கீப்பிங், கேப்டன் என மூன்று பணிகளையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மிக நீண்ட பேட்டிங் வரிசை இருப்பதும், ஒரு விதத்தில் சிக்கலை ஏற்படுத்துகிறது. கோஹ்லியை நீக்குவதா, யுவராஜை தேர்வு செய்வதா போன்ற குழப்பம் காணப்படுகிறது.
ஹர்பஜன் பலம்:
பந்துவீச்சு பற்றி கவலைப்படத் தேவையில்லை. அனுபவ ஜாகிர், நெஹ்ரா, ஹர்பஜன் அசத்தலாம். அணியில் இடம் பிடிக்க முனாப், ஸ்ரீசாந்த் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதே போல சுழல் வீரர்களான அஷ்வின், பியூஸ் சாவ்லா இடையேயும் போட்டி உள்ளது. பயிற்சி போட்டிகளில் சாவ்லா கலக்கினார். ஆனால், தமிழக வீரர் அஷ்வின் மீது கேப்டன் தோனி நிறைய நம்பிக்கை வைத்துள்ளார். சரியான வீரர்களை தேர்வு செய்யும்பட்சத்தில் இந்திய அணி, வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தி, தொடரை வெற்றிகரமாக துவக்கலாம்.
வங்கதேசம் வளர்ச்சி:
கடந்த 2007, உலக கோப்பைக்கு பின் வங்கதேச அணி அசுர வளர்ச்சி கண்டுள்ளது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-0 என வென்றது. ஒரு நாள் போட்டிக்கான ரேங்கிங் பட்டியலில் 8வது இடத்தில்(66 புள்ளி) உள்ளது. பேட்டிங்கில், தமிம் இக்பாலை தான் பெரிதும் சார்ந்துள்ளது. கனடாவுக்கு எதிரான உலக கோப்பை பயிற்சி போட்டியில் 50 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார். இவர் வெளியேறிவிட்டால் ஒட்டுமொத்த அணியும் ஆட்டம் காண்பது தான் மிகப் பெரும் பலவீனம். இம்ருல் கைஸ், அனுபவ அஷ்ரபுல், நபீஸ் நம்பிக்கை தருகின்றனர். முழங்கால் காயம் காரணமாக மொர்டசா இடம் பெறாதது பின்னடைவு. ஆனாலும், வேகத்தில் மிரட்ட ருபல் ஹூசைன், நஸ்மல் ஹூசைன் உள்ளனர்.
"சுழல் பலம்':
சுழலில் அசத்த கேப்டன் சாகிப் அல் ஹசன், அப்துர் ரசாக், சித்திக், ரகிபுல் ஹசன் என நிறைய பேர் இருக்கின்றனர். இதில்,பேட்டிங்கிலும் அசத்தக்கூடிய கேப்டன் சாகிப் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இவருக்கு மற்றவர்கள் கைகொடுக்கும்பட்சத்தில் வங்தேசம் சவால் கொடுக்கலாம்.
யாருக்கு வாய்ப்பு?
வலிமையான இந்திய அணியாடு இளம் வங்கதேச அணியை ஒருபோதும் ஒப்பிட முடியாது. ஆனாலும், எதிரணியை குறைத்து மதிப்படக் கூடாது என்பதே வரலாறு சொல்லும் பாடம். இதனை உணர்ந்து இந்திய அணி கவனமாக விளையாட வேண்டும். "தொட்டதெல்லாம் பொன்னாகும்' திறன்படைத்த கேப்டன் தோனி இருப்பதால், நம்மவர்கள் எளிதில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
இதுவரை...
ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இந்தியா-வங்கதேசம் அணிகள் 22 முறை மோதி உள்ளன. இதில் இந்தியா 20, வங்கதேசம் 2 போட்டியில் வெற்றி கண்டன.
* உலக கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகள் ஒரே ஒரு முறை மோதியுள்ளன. இதில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. கடந்த 2007ல் நடந்த இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 191 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 5 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்து, வென்றது.
* உலக கோப்பை அரங்கில், வங்கதேச அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில், கங்குலி (66 ரன்), யுவராஜ் சிங் (47 ரன்) உள்ளனர். வங்கதேசம் சார்பில் முஸ்பிகுர் ரஹிம் (56*), கேப்டன் சாகிப் அல் ஹசன் (53), தமிம் இக்பால் (51) ஆகியோர் உள்ளனர்.
* உலக கோப்பை தொடரில், வங்கதேச அணிக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் முனாப் படேல், சேவக் தலா 2 விக்கெட் வீழ்த்தி முன்னிலை வகிக்கின்றனர். வங்கதேசம் சார்பில் மொர்டசா 4, அப்துர் ரசாக், முகமது ரபிக் தலா 3 விக்கெட் வீழ்த்தி உள்ளனர்.
ராசியான மைதானம்
மிர்பூரில் உள்ள ஷேரி பங்களா தேசிய மைதானத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் 5 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
* இம்மைதானத்தில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் வரிசையில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. கடந்த 2008ல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 330 ரன்கள் குவித்தது.
* கடந்த 2010ல் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் 6 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்த வங்கதேச அணி, தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* இங்கு அதிக ரன்கள் சேர்த்துள்ள வீரர்கள் வரிசையில் வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசன் முதலிடம் வகிக்கிறார். இதுவரை 34 போட்டியில் 2 சதம் உட்பட 1094 ரன்கள் எடுத்துள்ளார். இவரை தொடர்ந்து தமிம் இக்பால் (868 ரன்கள்), முகமது அஷ்ரபுல் (700 ரன்கள்) உள்ளிட்ட வங்கதேச வீரர்கள் உள்ளனர்.
* இந்தியா சார்பில் இங்கு அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் காம்பிர் (469 ரன்கள்), கேப்டன் தோனி (399 ரன்கள்), சேவக் (303 ரன்கள்), விராத் கோஹ்லி (275) ஆகியோர் உள்ளனர்.
* இங்கு அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் அப்துர் ரசாக் (55 விக்.,), சாகிப் அல் ஹசன் (48 விக்.,), மொர்டசா (36 விக்.,) உள்ளிட்ட வங்கதேச பவுலர்கள் "டாப்-3' இடம் பிடித்தனர்.
* இந்தியா சார்பில் பியுஸ் சாவ்லா (8 விக்.,), யுவராஜ் சிங் (7 விக்.,), ஹர்பஜன் சிங் (6 விக்.,) உள்ளிட்டோர் அதிக விக்கெட் வீழ்த்தி உள்ளனர்.
மழை வருமா
இன்று போட்டி நடக்கும் மிர்புரில் வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்சம் 26, குறைந்த பட்சம் 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். மழை வருவதற்கு வாய்ப்பு இல்லை.

No comments:

Post a Comment