Sunday, February 20, 2011

ஆஸி., வேட்டை ஆரம்பம்!: இன்று ஜிம்பாப்வேயுடன் மோதல்

ஆமதாபாத்: உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி, தனது வெற்றிப் பயணத்தை இன்று துவக்குகிறது. லீக் போட்டியில் பலவீனமான ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது.
இந்திய துணைக்கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் "ஏ' பிரிவில் இன்று நடக்கும் லீக் போட்டியில், "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது.
கடந்த மூன்று தொடர்களில் தொடர்ந்து கோப்பை வென்று "ஹாட்ரிக்' பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, சமீபகாலமாக திணறி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை மட்டும், 6-1 என்ற கணக்கில் வென்றது.
இம்முறை உலக கோப்பை பயற்சி போட்டிகளில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணியிடம் மோசமாக தோற்றது. இதனை இன்றைய லீக் போட்டியில் அசத்தல் வெற்றி பெற காத்திருக்கிறது. கேப்டன் பாண்டிங், மைக்கேல் கிளார்க் தவிர, வாட்சன், டேவிட் ஹசி, காமிரான் ஒயிட், பிராட் ஹாடின் என பேட்ஸ்மேன்கள் எழுச்சி பெறலாம். பவுலிங்கில் பிரட் லீ, டெய்ட், கிரெஜ்ஜா, ஸ்டீவன் ஸ்மித் ஆகிய வீரர்கள் இருப்பதால், குறைந்த ஸ்கோருக்கு சுருட்ட முயற்சிக்கலாம்.
ஜிம்பாப்வே சமாளிக்குமா?
சமீப காலமாக ஜிம்பாப்வே அணியில் இருந்து விலகிச்சென்ற வீரர்கள் பயிற்சியாளர்கள்,தேர்வாளர்கள் என மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது உற்சாகமான செய்திதான். கேப்டன் சிகும்புரா, கவன்ட்ரி, கிரீமர், எர்வின், ரே பிரைஸ், மசகட்சா போன்ற வீரர்கள் கைகொடுக்க முயற்சிக்கலாம். அனுபவ தைபு, சீன் வில்லியம்ஸ் ஆகியோரும் அசத்தலாம்.
இன்றைய போட்டி குறித்து ஜிம்பாப்வே வீரர் உட்செயா கூறுகையில்,"" ஆஸ்திரேலிய அணி பலமான அணி என்பது எங்களுக்குத் தெரியும். இருப்பினும், எங்களது பலம் சுழற் பந்து வீச்சு. இதைக்கொண்டு அவர்களை குறைந்த ஸ்கோருக்கு கட்டுப்படுத்த முயற்சிப்போம்,'' என்றார்.
23வது வெற்றி?
உலக கோப்பை தொடரில் 2003, 2007 தொடரில் தொடர்ந்து 22 போட்டிகளில் தோல்வியடையாமல் வலம் வருகிறது ஆஸ்திரேலிய அணி. இன்று ஜிம்பாப்வேயை வீழ்த்தி 23 வது வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸி., அதிகம்
ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் 25 போட்டிகளில் ஆஸ்திரேலியா, ஒரு போட்டியில் ஜிம்பாப்வே வென்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவில்லை.
* உலக கோப்பை தொடரில் இரு அணிகள் சந்தித்த 8 போட்டிகளில் 7ல் ஆஸ்திரேலியா, ஒன்றில் ஜிம்பாப்வே வென்றுள்ளது.
சாதனை நோக்கி பாண்டிங்
உலக கோப்பை கிரிக்கெட் அரங்கில், அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், மெக்ராத் முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் இருவரும் தலா 39 போட்டியில் பங்கேற்றுள்ளனர். இம்முறை மெக்ராத் இல்லாததால், இன்றைய போட்டியில் விளையாட உள்ள பாண்டிங், அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறுகிறார்.
இப்பட்டியலில் "டாப்-5' வீரர்கள்:
வீரர் போட்டி
மெக்ராத் (ஆஸி.,) 39
பாண்டிங் (ஆஸி.,) 39
ஜெயசூர்யா (இலங்கை) 38
அக்ரம் (பாக்.,) 38
சச்சின் (இந்தியா) 37
அதிர்ச்சி அளிப்போம்
கடந்த 1983ல் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, அதிர்ச்சி கொடுத்தது. இதே போல் இம்முறையும் அசத்த வாய்ப்பு இருப்பதாக ஜிம்பாப்வே பயிற்சியாளர் ஆலன் புட்சர் தெரிவித்தார். இது குறித்து இவர் கூறுகையில்,""ஆஸ்திரேலிய அணியில் நான்கு "வேகங்கள்' உள்ளனர். இவர்கள் பந்துவீசும் முறை பற்றி நன்கு தெரியும். எங்கள் தரப்பில் "ஸ்பின்னர்களை' அதிகம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். அணி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திக் காட்டலாம்,''என்றார்.
ஜிம்பாப்வே எல்டன் கேப்டன் சிகும்பரா கூறுகையில்,""கடந்த ஐந்து வாரங்களாக சிறப்பான பயிற்சி மேற்கொண்டுள்ளோம். அணி வீரர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் <உள்ளனர். ஒவ்வொரு வீரரும் தனக்கு அளிக்கப்பட்ட பணியை கச்சிதமாக செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்,''என்றார்.
மீண்டும் சாதிப்போம்
ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் கூறுகையில்,""ஜிம்பாப்வேயை வீழ்த்தி, உலக கோப்பை தொடரை வெற்றிகரமாக துவக்குவோம். அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களிடமும், கோப்பை கைப்பற்ற தேவையான திறமை உள்ளது. மீண்டும் ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்று சாதிப்போம். 1999, 2003ல் நாங்கள் தான் கோப்பை வெல்வோம் என கணித்தார்கள். ஆனால், 2007ல் அவ்வாறு கருதவில்லை. ஆனாலும், சாதித்துக் காட்டினோம். எனவே, கோப்பை வெல்லக்கூடிய அணியாக எங்களை கருதுகிறார்களா என்பது பற்றி எல்லாம் கவலை இல்லை. காயத்தில் இருந்து பிரட் லீ மீண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அனுபவ இவர் தான் அணியின் பந்துவீச்சை வழிநடத்திச் செல்ல உள்ளார்,''என்றார்.

No comments:

Post a Comment