Saturday, February 19, 2011

ஆக்ரோஷமாக விளையாடுங்கள் தோனி! கபில் "அட்வைஸ்"

புதுடில்லி: ""உலக கோப்பை தொடரில் பழைய தோனியை பார்க்க விரும்புகிறேன். முன்பு மாதிரி அதிரடியாக "பேட்' செய்ய வேண்டும். தவிர, ஆக்ரோஷமான கேப்டனாக செயல்பட வேண்டும்,'' என, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 1983ல் இந்திய அணிக்கு உலக கோப்பை பெற்று தந்தார் கபில் தேவ். இதற்கு பின் நம்மவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. வரும் 19ம் தேதி துவங்கும் உலக கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதற்கு, தோனியிடம் நிறைய மாற்றம் ஏற்பட வேண்டுமென கபில் தேவ் விரும்புகிறார். இது குறித்து கபில் அளித்த பேட்டி:
சமீப காலமாக பேட்டிங்கில், தோனியின் அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது. இவர், கிரிக்கெட்டில் நுழைந்த காலத்தில் அதிரடியாக பேட் செய்தார். கொஞ்சம் கூட கருணை காட்டாமல் எதிரணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். தற்போது பந்தை அங்கும் இங்கும் தட்டி விட்டு ரன் எடுக்கிறார். காலப் போக்கில் வீரர்களின் பேட்டிங் "ஸ்டைல்' மாறும். ஆனாலும் படுவேகமாக ரன் எடுக்கும் முறையை தக்க வைக்க வேண்டும். எனவே, உலக கோப்பை தொடரின் போது தோனி அதிரடியாக ஆட வேண்டும்.
கேப்டன் என்ற முறையில் தலைமை பண்புக்கு தேவையான அனைத்து விஷயங்களும் தோனியிடம் உண்டு. மிகவும் துணிச்சலாக செயல்படுகிறார். இக்கட்டான தருணங்களை திறம்பட கையாள்கிறார். ஆனால் "மிஸ்டர் கூல்' என்று இவரை அழைப்பதை விரும்பவில்லை. ஏனென்றால், கேப்டன் என்பவர் இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக மிகுந்த மன வலிமையுடன் திகழவேண்டும். நெருக்கடியான தருணங்கள் மற்றும் "மீடியா'விடம் "கூலாக' இருக்கலாம். ஆனால், வீரர்களின் "டிரஸ்சிங் ரூம்' மற்றும் களத்தில் தோனி மிகவும் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும்.
தற்போதைய உலக கோப்பை தொடரில் கூடுதலாக ஒரு விக்கெட் கீப்பர் இடம் பெறாததது கவலை அளிக்கிறது. தோனிக்கு காயம் ஏற்பட்டால் என்ன செய்வார்கள்? கடந்த 1983ல் யஷ்பால் சர்மா மற்றும் சமீப காலமாக டிராவிட் பகுதி நேர கீப்பராக திறம்பட செயல்பட்டனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பேட்டிங் பலம்:
இந்திய அணியின் பலம் பேட்டிங் தான். யூசுப் பதான், தோனி, சேவக் போன்றவர்கள் போட்டியின் போக்கை மாற்றக் கூடியவர்கள். இவர்களுக்கு பக்கபலமாக விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா போன்ற இளம் வீரர்கள் உள்ளனர். தவிர, அணியின் முதுகெலும்பாக சச்சின் இருக்கிறார். 6 பேட்ஸ்மேன்கள் இருப்பதால், எதிரணியின் பந்துவீச்சை எளிதில் துவம்சம் செய்யலாம். பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் சற்று பலவீனமாக இருந்தாலும், அதனை வலிமையான பேட்டிங் இருப்பதால் சமாளித்து விடலாம். ஏனென்றால், ஒரு நாள் போட்டி என்பது பேட்ஸ்மேன்களுக்கானது தான்.
பந்துவீச்சில் நமது அணியில் பிரட் லீ அல்லது டேல் ஸ்டைன் போன்ற வேகங்கள் இல்லை. ஆனாலும், உலக கோப்பையில் ஆடிய அனுபவம் வாய்ந்த பவுலர்கள் இருப்பது நல்லது. பேட்டிங்கிலும் அசத்தக் கூடிய இரண்டு "ஸ்பின்னர்'கள் இருக்கின்றனர்.
இந்திய அணி கோப்பை வெல்லும் என்று என் இதயம் சொல்கிறது. ஆனால், இது எளிதான காரியம் அல்ல என்று மனம் சொல்கிறது. வெற்றிக்காக வீரர்கள் கடினமாக உழைக்க வேண்டும். சொந்த மண்ணில் நடப்பதால், கோப்பை வெல்ல வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆடுகளம் மற்றும் சூழ்நிலையை நமது வீரர்கள் நன்கு அறிந்து இருப்பர். இதனால் 6 பேட்ஸ்மேன்களில் மூன்று பேர் சிறப்பாக விளையாடினால் கூட 300 ரன்களை எளிதில் எட்டி விடலாம். இத்தகைய "ஸ்கோர்', இந்திய துணை கண்டத்தில் சாதிக்க போதுமானது.
கடந்த 1983ல் எங்கள் மீது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. இதனால் மிகுந்த ஆர்வத்துடன் விளையாடினோம். அனைவரும் தங்களது பங்களிப்பை நூறு சதவீதம் அளிக்க, கோப்பை வென்றோம். தற்போதைய வீரர்களும் நாட்டுக்காக விளையாடுவதை பெருமையாக கருதுகின்றனர். இவர்களிடம் ஆர்வமும் உள்ளது. கோப்பை வென்றால் இவர்களது வாழ்க்கை மாறும்.
சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணிக்கு நெருக்கடி இல்லை. தொழில்ரீதியான வீரர்கள் என்பதால், நெருக்கடியை எவ்வாறு கையாள வேண்டும் என்பது நன்கு தெரியும். நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக விளையாடும் அணிக்கே உலக கோப்பை வசப்படும்.
இவ்வாறு கபில் கூறினார்.

No comments:

Post a Comment