Wednesday, February 23, 2011

தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை: உலக கோப்பையில் இன்று விறுவிறு

புதுடில்லி: உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றியுடன் துவக்க இரு அணிகளும் ஆயத்தமாக உள்ளன.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில், இன்று நடக்கும் "பி' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
காலிஸ் நம்பிக்கை:
சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் களமிறங்கும் தென் ஆப்ரிக்க அணி, பயிற்சி போட்டியில் ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி இருப்பது கூடுதல் பலம். இந்த அணி, நட்சத்திர வீரரான "ஆல்-ரவுண்டர்' காலிசை முழுமையாக நம்பி உள்ளது. "சூப்பர் பார்மில்' உள்ள இவர், தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகிப்பார். கேப்டன் ஸ்மித், ஆம்லா ஜோடி நல்ல துவக்கம் கொடுக்கும் பட்சத்தில், இமாலய இலக்கை பதிவு செய்யலாம். இவர்களை தவிர டிவிலியர்ஸ், டுமினி, டு பிளசிஸ், இங்ராம் உள்ளிட்டோரும் பேட்டிங்கில் அசத்தலாம்.
ஸ்டைன் மிரட்டல்:
தென் ஆப்ரிக்க அணியின் மிகப் பெரிய பலம் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டைன். உலகின் "நம்பர்-1' பவுலரான இவர், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார் என்பதில் சந்தேகமில்லை. இவருடன் மற்றொரு "வேகப்புயல்' மார்னே மார்கல் இணைவது கூடுதல் பலம். இவர்கள் இருவரும், ஐ.பி.எல்., தொடரில் விளையாடி இருப்பது சிறப்பம்சம். இவர்களை தவிர காலிஸ், டிசோட்சபே, பார்னல், இம்ரான் தாகிர் உள்ளிட்ட வேகங்களும் மிரட்டலாம். சுழலில் அனுபவ ஜோகன் போத்தாவுடன், இளம் ராபின் பீட்டர்சன் சாதிக்கலாம்.
பலமான பேட்டிங்:
பயிற்சி போட்டியில் கென்யாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, இலங்கை அணியிடம் தோல்வி அடைந்தது. வால்ஷ், அம்புரோஸ் உள்ளிட்ட பிரபல வேகப்பந்துவீச்சாளர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, இம்முறை அதன் பேட்டிங் வரிசைதான் பலம். அனுபவ வீரர்களான சந்தர்பால், சர்வான் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பயிற்சி போட்டியில் சதம் கடந்து அசத்திய சர்வான், <லீக் சுற்றிலும் சாதிக்கலாம். கிறிஸ் கெய்ல், போலார்டு, டுவைன் பிராவோ உள்ளிட்டோர் சிறந்த "ஆல்-ரவுண்டராக' வலம்வர வாய்ப்பு உள்ளது. இவர்கள் மூவரும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடி இருப்பது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. துவக்க வீரர் அட்ரியன் பரத், காயம் காரணமாக வெளியேறியது பின்னடைவான விஷயம்.
ரசல் எதிர்பார்ப்பு:
பயிற்சி போட்டியில் சாதித்த ஆன்ட்ரூ ரசல், கீமர் ரோச் <உள்ளிட்ட வேகங்கள், லீக் சுற்றிலும் விக்கெட் வேட்டை நடத்தலாம். கேப்டன் டேரன் சமி, சுலைமான் பென், ரவி ராம்பால், டேரன் பிராவோ உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் "மிடில்-ஓவரில்' நம்பிக்கை அளிக்க வாய்ப்பு உள்ளது. சுழலில் மில்லர், கெய்ல் அசத்தலாம்.
இன்றைய போட்டியில் சமபலத்துடன் உள்ள இரு அணிகள் மோத இருப்பதால், சுவாரஸ்யமான ஆட்டத்தை ரசிகர்கள் கண்டு ருசிக்கலாம்.
ஐந்தாவது முறை
உலக கோப்பை அரங்கில், தென் ஆப்ரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஐந்தாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக நான்கு போட்டியில் விளையாடிய இவ்விரு அணிகள், தலா இரண்டு வெற்றி கண்டன.
* கடந்த 1992ல் நடந்த உலக கோப்பை தொடரில், தென் ஆப்ரிக்க அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. இதற்கு 1996ல் நடந்த காலிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பதிலடி கொடுத்தது. பின்னர் 2003ல் நடந்த தொடரின் லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் வெற்றி பெற்றது. இதற்கு 2007ல் நடந்த தொடரின் "சூப்பர்-8' சுற்றில் தென் ஆப்ரிக்க அணி பதிலடி கொடுத்தது.
* கடந்த 2007ல், 4 விக்கெட்டுக்கு 356 ரன்கள் குவித்த தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக உலக கோப்பை அரங்கில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதேபோட்டியில் 9 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது.
* கடந்த 1992ல், 8 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக உலக கோப்பை அரங்கில் குறைந்த பட்ச ஸ்கோரை பெற்றது. இதேபோட்டியில் 136 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக குறைந்த பட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வரிசையில் லாரா (257 ரன்கள்) முன்னிலை வகிக்கிறார். தென் ஆப்ரிக்கா சார்பில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் டிவிலியர்ஸ் (146 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.
* தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் வரிசையில் ஹார்பர் (4 விக்.,) முதலிடத்தில் உள்ளார். தென் ஆப்ரிக்கா சார்பில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில் பிரிங்கிள் (4 விக்.,) முன்னிலை வகிக்கிறார்.

No comments:

Post a Comment