Tuesday, February 22, 2011

இங்கிலாந்து திணறல் வெற்றி! *நெதர்லாந்து வீரர் டசாட்டே சதம் வீண்

நாக்பூர்: உலக கோப்பை லீக் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திணறல் வெற்றி பெற்றது. நெதர்லாந்து வீரர் டசாட்டேயின் அதிரடி சதம் வீணானது.
பத்தாவது உலக கோப்பை தொடர் இந்திய துணைக்கண்டத்தில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் "பி' பிரிவு லீக் போட்டியில் நேற்று, இங்கிலாந்து அணி பலவீனமான நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. "டாஸ்' வென்ற நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன், பேட்டிங் தேர்வு செய்தார்.
துணிச்சல் துவக்கம்:
நெதர்லாந்து அணிக்கு கெர்வெஜீ, பாரெசி இருவரும் துணிச்சலான துவக்கம் கொடுத்தனர். பிராட் ஓவரில் மூன்று பவுண்டரி விளாசி மிரட்டினார் பாரெசி. கெர்வெஜீ 16 ரன்களில் திரும்பினார். அடுத்து வந்த கூப்பர், பிரஸ்னன் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். இந்நிலையில் பாரெசி (29) சுவான் சுழலில் சிக்கினார்.
கூப்பர் ஏமாற்றம்:
பின் கூப்பருடன், டசாட்டே இணைந்தார். இந்த ஜோடி இங்கிலாந்து பவுலிங்கை எளிதாக எதிர்கொண்டது. கோலிங்வுட் பந்தில் 2 பவுண்டரி விளாசிய டசாட்டே, பீட்டர்சன் பந்தில் சிக்சர் அடித்து அசத்தினார். நீண்ட நேரம் தாக்குப்பிடித்த கூப்பர் (47) அரைசத வாய்ப்பை இழந்தார்.
டசாட்டே சதம்:
மறுமுனையில் அதிரடியாக ரன்குவித்துக் கொண்டிருந்தார் டசாட்டே. குரூத் தன்பங்கிற்கு 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். பிரஸ்னன் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்த டசாட்டே, சர்வதேச அரங்கில் 4வது சதம் கடந்தார். கேப்டன் போரன், ஆண்டர்சன் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். 110 பந்துகளில் 119 ரன்கள் (3 சிக்சர், 9 பவுண்டரி) எடுத்த டசாட்டே, பிராட் வேகத்தில் வீழ்ந்தார்.
நெதர்லாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்தது. போரன் (35), புகாரி (6) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் பிராட், சுவான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சூப்பர் துவக்கம்:
கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், பீட்டர்சன் அபார துவக்கம் கொடுத்தனர். பீட்டர்சன் நிதானமாக விளையாட, ஸ்டிராஸ் முதல் ஓவரில் 3 பவுண்டரி அடித்து வெளுத்து வாங்கினார். முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில் பீட்டர்சன் (39) பெவிலியன் திரும்பினார்.
ஸ்டிராஸ் அபாரம்:
ஸ்டிராசுடன் டிராட் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டிராஸ், தனது 27வது அரைசதம் கடந்தார். இவர் 88 ரன்களுக்கு அவுட்டானார்.
இங்கிலாந்து வெற்றி:
அடுத்து டிராட், இயான் பெல் இணைந்து ஸ்கோரை சீராக உயர்த்தினர். ஒரு நாள் அரங்கில் 7வது அரைசதம் அடித்த டிராட், 62 ரன்களுக்கு அவுட்டானார். பெல் 33 ரன்களுக்கு வெளியேற சிக்கல் ஏற்பட்டது.
கடைசி கட்டத்தில் கோலிங்வுட் (30*), போபரா (30*) பொறுப்பாக ஆடி, வெற்றியை <உறுதி செய்தனர். இங்கிலாந்து அணி 48.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி தனது இரண்டாவது போட்டியில் (பிப். 27 ) இந்தியாவை சந்திக்கிறது.

அம்பயர்கள் அதிரடி
நேற்று 49வது ஓவரை ஸ்டூவர்ட் பிராட் வீசினார். 3வது பந்தில் நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன் போல்டானார். உடனே பெவிலியன் நோக்கி நடந்தார். ஆனால், இங்கிலாந்து அணி "பீல்டிங்' விதிமுறையை பின்பற்றாததால், அது "நோ-பாலாக' அறிவிக்கப்பட்டு, போரனை திரும்ப அழைத்தனர் அம்பயர்கள். விதிமுறைப்படி நான்கு வீரர்கள் உள்வட்டத்துக்குள் நிற்க வேண்டும். அந்த தருணத்தில், இங்கிலாந்து தரப்பில் 3 வீரர்கள் மட்டுமே இருந்தனர். அம்பயர்களின் அதிரடி நடவடிக்கையால் போரன்(35) கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

அதிக ரன்கள்
டெஸ்ட் போட்டிகள் விளையாடும் அணிக்கு எதிரான, ஒருநாள் போட்டிகளில், நேற்று நெதர்லாந்து அணி அதிகபட்ச ஸ்கோரை (292/6) பதிவு செய்தது. 15 ஆண்டுகளுக்கு முன், இங்கிலாந்துக்கு எதிராக 230 ரன்கள் எடுத்ததே அதிகமாக இருந்தது.

மோசமான பீல்டிங்
நேற்று நெதர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்களின் பீல்டிங், படு சொதப்பலாக இருந்தது. நான்கு எளிதான "கேட்ச்' வாய்ப்புகளை கோட்டைவிட்ட இங்கிலாந்து அணியினர், ரன் அவுட் வாய்ப்புகளையும் வீணடித்தனர். இதை நன்கு பயன்படுத்திக் கொண்ட நெதர்லாந்து அணி, 292 ரன்கள் குவித்தது.

யார் இந்த டசாட்டே
தென் ஆப்ரிக்காவில் பிறந்த டசாட்டே (30), நெதர்லாந்து அணிக்காக 27 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதுவரை 4 சதம், 8 அரைசதங்கள் அடித்துள்ள இவர், பவுலிங்கிலும் 48 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தவிர, சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச (71.21) சராசரி வைத்துள்ள, உலகின் முதல்வீரர் இவர் தான். தென் ஆப்ரிக்காவின் ஆம்லா (59.88) 2வது இடத்தில் உள்ளார். நான்காவது ஐ.பி.எல்., தொடரில் இவர் கோல்கட்டா அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

ஸ்கோர்போர்டு
நெதர்லாந்து
கெர்வெஜீ(கே)பிரையர்(ப)பிரஸ்னன் 16(25)
பாரெசி(ஸ்டம்டு)பிரையர்(ப)சுவான் 29(25)
கூப்பர்(கே)ஆண்டர்சன்(ப)கோலிங்வுட் 47(73)
டசாட்டே(கே)போபரா(ப)பிராட் 119(110)
ஜுய்டெரன்ட்(கே)கோலிங்வுட்(ப)சுவான் 1(10)
குரூத்(ப)பிராட் 28(31)
போரன்-அவுட் இல்லை- 35(24)
புகாரி-அவுட் இல்லை- 6(5)
உதிரிகள் 11
மொத்தம் (50 ஓவரில் 6 விக்.,) 292
விக்கெட் வீழ்ச்சி: 1-36(கெர்வெஜீ), 2-58(பாரெசி), 3-136(கூப்பர்), 4-149(ஜுய்டெரன்ட்), 5-213(குரூத்), 6-274(டசாட்டே).
பந்து வீச்சு: ஆண்டர்சன் 10-0-72-0, ஸ்டூவர்ட் பிராட் 10-2-65-2, பிரஸ்னன் 10-0-49-1, சுவான் 10-0-35-2, கோலிங்வுட் 8-0-46-1, பீட்டர்சன் 2-0-19-0.
இங்கிலாந்து
ஸ்டிராஸ்(கே)கூப்பர்(ப)புகாரி 88(83)
பீட்டர்சன்(கே)போரன்(ப)சீலார் 39(61)
டிராட்(ஸ்டம்டு)பாரெசி(ப)டசாட்டே 62(65)
பெல்(ப)டசாட்டே 33(40)
கோலிங்வுட்-அவுட் இல்லை- 30(23)
போபரா-அவுட் இல்லை- 30(20)
உதிரிகள் 14
மொத்தம் (48.4 ஓவரில் 4 விக்.,) 296
விக்கெட் வீழ்ச்சி: 1-105(பீட்டர்சன்), 2-166(ஸ்டிராஸ்), 3-224(டிராட்), 4-241(பெல்).
பந்து வீச்சு: முடாசர் புகாரி 9-0-54-1, வெஸ்டிஜிக் 7-0-41-0, லூட்ஸ் 9.4-0-74-0, சீலார் 10-0-54-1, டசாட்டே 10-0-47-2, கூப்பர் 3-0-23-0.

No comments:

Post a Comment