Saturday, February 19, 2011

வங்கத்தை துவம்சம் செய்த சேவக்!: இந்தியா அபார ‌வெற்றி!

மிர்புர்: உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றிகரமாக துவக்கியது. நேற்றைய லீக் போட்டியில் வங்கதேச பந்துவீச்சை அடித்து நொறுக்கிய சேவக் அதிரடியாக சதம்(175 ரன்) கடந்தார். இவருக்கு பக்கபலமாக ஆடிய விராத் கோஹ்லியும் சதம் (100) விளாச, இந்திய அணி, வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் "சூப்பராக' வீழ்த்தியது.
பத்தாவது உலக கோப்பை தொடர் இந்திய துணை கண்டத்தில் நடக்கிறது. நேற்று மிர்புரில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில்(பகலிரவு) இந்தியா, வங்கதேச அணிகள் மோதின.
ரெய்னா இல்லை:
இந்திய அணியில் முதுகு வலி காரணமாக நெஹ்ரா இடம் பெறவில்லை. சுரேஷ் ரெய்னா, அஷ்வினும் வாய்ப்பு பெற இயலவில்லை. வங்கதேச அணியில் அனுபவ அஷ்ரபுல் வாய்ப்பு பெறாதது ஆச்சரியமாக இருந்தது. "டாஸ்' வென்ற வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசன், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
அதிரடி துவக்கம்:
இந்திய அணிக்கு சச்சின், சேவக் இணைந்து அதிரடி துவக்கம் தந்தனர். ஷபியுல் இஸ்லாம் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு பறக்க விட்டார் சேவக். இதே ஓவரில் இன்னொரு பவுண்டரி அடித்த இவர், 12 ரன்கள் விளாசினார். பின் ஷபியுல் வீசிய இரண்டாவது ஓவரில் சச்சின் தன் பங்குக்கு இரண்டு பவுண்டரி அடித்தார். இவர்கள் வேகப்பந்துவீச்சை வெளுத்து வாங்க, சுழல் வீரரான அப்துர் ரசாக்கை அழைத்தார் கேப்டன் சாகிப்.
சச்சின் பாவம்:
ரசாக் பந்தை தட்டி விட்ட சச்சின் ஒரு ரன்னுக்காக ஓடினார். மறுமுனையில் சேவக் மறுத்தார். இதையடுத்து சச்சின்(28) பரிதாபமாக ரன் அவுட்டானார். அடுத்து வந்த காம்பிர் "கம்பெனி' கொடுக்க சேவக் தனது அதிரடியை தொடர்ந்தார். அப்துர் ரசாக் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்து அரைசதம் எட்டினார். காம்பிர் 39 ரன்களுக்கு அவுட்டானார். பின் மகமதுல்லா பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட சேவக் 94 பந்துகளில் 100 ரன்களை எட்டினார். இது உலக கோப்பை அரங்கில் இவரது 2வது சதம். ஒரு நாள் அரங்கில் 14வது சதமாக அமைந்தது. மறுமுனையில், இவருக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்த விராத் கோஹ்லியும் அசத்தலாக ஆடினார். நயீம் இஸ்லாம் வீசிய போட்டியின் 33வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். சதம் கடந்த பின் தசைப்பிடிப்பால் சேவக் அவதிப்பட்டார். இதையடுத்து இவருக்கு "ரன்னராக' காம்பிர் செயல்பட்டார்.
சேவக் 175 ரன்:
கொஞ்சம் கூட கருணை காட்டாமல் வங்கதேச பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சேவக், அப்துர் ரசாக் வீசிய போட்டியின் 37வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு இமாலய சிக்சர் விளாசினார். இவர் 175 ரன்களுக்கு ( 14 பவுண்டரி, 5 சிக்சர்) சாகிப் அல் ஹசன் பந்தில் போல்டானார்.
அறிமுக சதம்:
தனது அறிமுக உலக கோப்பை தொடரில் அசத்திய விராத் கோஹ்லி, கடைசி ஓவரில் சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு நாள் அரங்கில் இவரது 5வது சதம். யூசுப் பதான் 8 ரன்களுக்கு வெளியேறினார். இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 370 ரன்கள் எடுத்தது. கோஹ்லி(100) அவுட்டாகாமல் இருந்தார்.
முனாப் மிரட்டல்:
கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணி முனாப் வேகத்தில் திணறியது. ஸ்ரீசாந்த் தயவில், துவக்கத்தில் மட்டும் அதிவிரைவாக ரன் சேர்த்தது. பின் முனாப் பந்தில் இம்ருல் கைஸ்(34) வெளியேறியதும், ரன் வேகம் குறைந்தது. சித்திக்(37) தாக்குப்பிடிக்கவில்லை. சொந்த மண்ணில், துணிச்சலாக போராடிய தமிம் இக்பால் அரைசதம் கடந்தார். இவர் 70 ரன்களுக்கு முனாப் பந்தில் வீழ்ந்தார். கேப்டன் சாகிப் அல் ஹசன் 55 ரன்கள் எடுத்தார். முஷ்பிகுர்(25) ஏமாற்றினார். வங்கதேச அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 283 ரன்கள் மட்டும் எடுத்து, தோல்வி அடைந்தது.
அபாரமாக பந்துவீசிய முனாப் 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை இந்திய வீரர் சேவக் தட்டிச் சென்றார்.
வரும் 27ல் பெங்களூருவில் நடக்கும் இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
தப்பினார் யூசுப்
நேற்று 9வது ஓவரை முனாப் வீசினார். 3வது பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்தார் ஜுனாய்த் சித்திக். இதனை பிடிக்க ஓடிய யூசுப் பதான், பவுண்டரி பகுதியில் இருந்த விளம்பர பலகையில் மோதி கீழே விழுந்தார். அப்போது வலது காலில் அடிபட வலியால் துடித்தார். நல்லவேளை ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. இதிலிருந்து விரைவாக மீண்ட, இவர் மீண்டும்"பீல்டிங்' செய்ய களமிறங்கினார்.
பழிதீர்த்தது
கடந்த 2007ல் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்திடம் வீழ்ந்தது. இதற்கு, நேற்றைய வெற்றியின் மூலம் இந்தியா பழிதீர்த்தது.
முதன் முறையாக...
உலக கோப்பை இம்முறை முதன் முதலில்...
முதல் டாஸ் வென்றவர் வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசன்.
* முதல் பந்தை சபியுல் இஸ்லாம் வீச, இந்தியாவின் சேவக் எதிர்கொண்டார்.
* முதல் பவுண்டரி, முதல் சிக்சர், முதல் அரை சதம், சதம் அடித்தவர் என்ற சாதனையை இந்தியாவின் சேவக் தட்டிச் சென்றார்.
* முதல் உதிரி ரன், ரூபல் ஹொசைனின் "வைடு' மூலம் கிடைத்தது.
* முதல் ரன் அவுட்டாக சச்சினின் "அவுட்' அமைந்தது.
* வங்கதேச விக்கெட் கீப்பர் முஜிபுர் ரகிம், முதல் "கேட்ச்' (யூசுப் பதான்) செய்தார்.
* உலககோப்பை தொடரில் முதன் முறையாக அம்பயர் மறுபரிசீலனை முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்ரீசாந்த் பந்தில் தமிம் இக்பாலுக்கு எல்.பி.டபிள்யு., "அவுட்' தரமறுத்தார் அம்பயர் தர்மசேனா (இலங்கை). இதை எதிர்த்து தோனி, முதன் முறையாக அப்பீல் செய்தார். ஆனால் இது தவறானது.
* இந்தியா சார்பில் முதல் ஓவரின் முதல் பந்தை ஸ்ரீசாந்த் வீசினார்.
* முதல் விக்கெட்டை இந்தியா சார்பில் முனாப் படேல் கைப்பற்றினார்.
கபில் சாதனை சமன்
வங்கதேச அணிக்கு எதிராக 140 பந்தில் 175 ரன்கள் எடுத்த இந்திய அதிரடி துவக்க வீரர் சேவக், முன்னாள் இந்திய ஜாம்பவான் கபில்தேவ் சாதனையை சமன் செய்தார். கடந்த 1983ல் நடந்த உலக கோப்பை தொடரில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில், கபில்தேவ் 138 பந்தில் 175 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் சேவக், உலக கோப்பை அரங்கில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ஐந்தாவது இடம் பிடித்தார்.
இவ்வரிசையில் "டாப்-5' வீரர்கள்:
வீரர் ரன் எதிரணி ஆண்டு
கிறிஸ்டன் (தெ.ஆ.,) 188* யு.ஏ.இ., 1996
கங்குலி (இந்தியா) 183 இலங்கை 1999
ரிச்சர்ட்ஸ் (வெ.இ.,) 181 இலங்கை 1987
கபில்தேவ் (இந்தியா) 175* ஜிம்பாப்வே 1983
சேவக் (இந்தியா) 175 வங்கதேசம் 2011
மூன்றாவது அதிகபட்சம்
வங்கதேச அணிக்கு எதிராக 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 370 ரன்கள் குவித்த இந்திய அணி, உலக கோப்பை அரங்கில் தனது மூன்றாவது சிறந்த அதிகபட்ச ரன்களை பதிவு செய்தது. முன்னதாக 413/5 (2007, எதிர்-பெர்முடா), 373/6 (1999, எதிர்-இலங்கை) ரன்கள் எடுத்திருந்தது. இது உலக கோப்பை அரங்கில் பதிவு செய்யப்பட்ட ஐந்தாவது சிறந்த அதிகபட்ச ரன்கள்.
இவ்வரிசையில் "டாப்-5' அதிகபட்சம்:
அணி ரன் எதிரணி ஆண்டு
இந்தியா 413/5 பெர்முடா 2007
இலங்கை 398/5 கென்யா 1996
ஆஸ்திரேலியா 377/6 தென் ஆப்ரிக்கா 2007
இந்தியா 373/6 இலங்கை 1999
இந்தியா 370/4 வங்கதேசம் 2011
முதல் போட்டியில் அதிகம்
வங்கதேச அணிக்கு எதிராக 4 விக்கெட்டுக்கு 370 ரன்கள் குவித்த இந்திய அணி, உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற பெருமை பெற்றது. முன்னதாக கடந்த 1975ல் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
முதல் இந்தியர்
நேற்றைய போட்டியில் சதம் கடந்த இளம் வீரர் விராத் கோஹ்லி, உலக கோப்பை அரங்கில் அறிமுக போட்டியில் சதம் கடந்த முதல் இந்தியர் என்ற புதிய வரலாறு படைத்தார். தவிர, சர்வதேச அளவில் இச்சாதனை படைத்த 13வது வீரர் ஆனார்.
* இப்போட்டியில் 83 பந்தில் சதம் கடந்த இவர், உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் கடந்த மூன்றாவது இந்தியர் மற்றும் 8வது சர்வதேச வீரர் என்ற பெருமை பெற்றார்.
ஐந்தாவது முறை
நேற்று, சேவக்-கோஹ்லி ஜோடி 3வது விக்கெட்டுக்கு 203 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் உலக கோப்பை அரங்கில் 5வது முறையாக இந்திய ஜோடிகள் 200 ரன்களுக்கு மேல் சேர்த்தது. முன்னதாக கங்குலி-டிராவிட் (318 ரன்கள்), சச்சின்-கங்குலி (244 ரன்கள்), டிராவிட்-சச்சின் (237 ரன்கள்), கங்குலி-சேவக் (202 ரன்கள்) உள்ளிட்ட இந்திய ஜோடிகள் 200 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர்.
ஸ்ரீசாந்த் சொதப்பல்
நேற்று இந்தியாவின் ஸ்ரீசாந்த் படுமேசாமாக பந்துவீசினார். போட்டியின் 5வது ஓவரை வீசிய இவர், மூன்று பவுண்டரி, ஒரு "நோ-பால்', ஒரு "வைடு' (பவுண்டரி) உட்பட 23 ரன்களை வாரி வழங்கினார்.
ஸ்கோர்போர்டு
இந்தியா
சேவக்(ப)சாகிப் 175(140)
சச்சின்-ரன் அவுட் (சாகிப்/முஷ்பிகுர்) 28(29)
காம்பிர்(ப)மகமதுல்லா 39(39)
கோஹ்லி-அவுட் இல்லை- 100(83)
யூசுப்(கே)முஷ்பிகுர்(ப)ஷபியுல் 8(10)
உதிரிகள் 20
மொத்தம் (50 ஓவரில் 4 விக்.,) 370
விக்கெட் வீழ்ச்சி: 1-69(சச்சின்), 2-152(காம்பிர்), 3-355(சேவக்), 4-370(யூசுப்).
பந்து வீச்சு: ஷபியுல் இஸ்லாம் 7-0-69-1, ரூபல் ஹொசைன் 10-0-60-0, அப்துர் ரசாக் 9-0-74-0, சாகிப் அல் ஹசன் 10-0-61-1, நயீம் இஸ்லாம் 7-0-54-0, மகமதுல்லா 7-0-49-1.
வங்கதேசம்
இக்பால்(கே)யுவராஜ்(ப)முனாப் 70(86)
இம்ருல்(ப)முனாப் 34(29)
சித்திக்(ஸ்டம்)தோனி(ப)ஹர்பஜன் 37(52)
சாகிப்(கே)ஹர்பஜன்(ப)முனாப் 55(50)
முஷ்பிகுர்(கே)சப்ஸ்(ரெய்னா)(ப) ஜாகிர் 25(30)
ரகிபுல்-அவுட் இல்லை- 28(28)
மகமதுல்லா(ப)முனாப் 6(6)
நயீம் இஸ்லாம் எல்.பி.டபிள்யு.,(ப)முனாப் 2(8)
அப்துர் ரசாக் எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 1(5)
ஷபியுல் இஸ்லாம் -ரன் அவுட்-(ஹர்பஜன்) 0(1)
ருபெல் ஹொசைன் -அவுட் இல்லை- 1(6)
உதிரிகள் 24
மொத்தம் (50 ஓவர், 9 விக்.,) 283
விக்கெட் வீழ்ச்சி: 1-56(இம்ருல்), 2-129(சித்திக்), 3-188(தமிம் இக்பால்), 4-234(சாகிப்), 5-248(முஷ்பிகுர்), 6-261(மகமதுல்லா), 7-275(நயீம் இஸ்லாம்), 8-279(அப்துர் ரசாக்), 9-280(ஷபியுல் இஸ்லாம்).
பந்து வீச்சு: ஸ்ரீசாந்த் 5-0-53-0, ஜாகிர் கான் 10-0-40-2, முனாப் 10-0-48-4, ஹர்பஜன் 10-0-41-1, யூசுப் பதான் 8-0-49-1, யுவராஜ் 7-0-42-0.

No comments:

Post a Comment