Saturday, February 12, 2011

சாதித்துக் காட்டிய ஸ்டீவ் வாக்

ஏழாவது உலக கோப்பை தொடர் 1999ல் நடந்தது. இம்முறை பெரும்பாலான போட்டிகள் இங்கிலாந்தில் நடந்தன. ஒரு சில போட்டிகள் அயர்லாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, நெதர்லாந்தில் நடந்தன. மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. காலிறுதிக்கு பதிலாக "சூப்பர்-6' முறை அறிமுகமானது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் "சூப்பர்-6' சுற்றுக்கு முன்னேறும். இச்சுற்றில் பெறும் புள்ளி மற்றும் ரன் விகிதம் அரையிறுதியிலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்ற விதிமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
லீக் சுற்றில் அதிர்ச்சி தோல்விகள் அரங்கேறின. பலம்குன்றிய ஜிம்பாப்வே அணி, இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இதே போல வங்கதேச அணி, பாகிஸ்தானை வென்றது.
இந்தியா "அவுட்':
"சூப்பர்-6' சுற்றுக்கு இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் முன்னேறின. இதில், இந்திய அணி(227/6), பாகிஸ்தானை(180) வீழ்த்தியது. ஆனால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து, அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
"டை' பரபரப்பு:
முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி, பைனலுக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா மோதிய இரண்டாவது அரையிறுதியில் "டென்ஷன்' எகிறியது. முதலில் பேட் செய்த ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 213 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் டொனால்டு ரன் அவுட்டாக, தென் ஆப்ரிக்காவும் 213 ரன்கள் எடுத்தது. இதையடுத்து போட்டி "டை' ஆனது. ஆனால், "சூப்பர்-6' பிரிவில் பெற்ற அதிக "ரன் ரேட்' அடிப்படையில் ஆஸ்திரேலியா பைனலுக்கு முன்னேறியது.
பாக்., சொதப்பல்:
லார்ட்சில் நடந்த பைனலில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 39 ஓவரில் வெறும் 132 ரன்களுக்கு சுருண்டது. அன்வர்(15), அப்ரிதி(13), இன்சமாம்(15) உள்ளிட்ட அனைவரும் சொதப்பினர். பின் சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கில்கிறிஸ்ட்(54) கைகொடுத்தார். 20.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.
-------------
"ஹீரோ' குளூஸ்னர்
உலக கோப்பை வரலாற்றில், தென் ஆப்ரிக்க வீரர் குளூஸ்னர் மிகச் சிறந்த "ஆல்-ரவுண்டராக' ஜொலிக்கிறார். 1999ல் நடந்த தொடரில் அதிரடியாக ஆடிய இவர் 9 போட்டிகளில் 2 அரைசதம் உட்பட 281 ரன்(சராசரி 140.50) எடுத்தார். இதன் "ஸ்டிரைக் ரேட்' 122.17. தவிர, 17 விக்கெட்டுகளையும் சாய்த்தார். இவரே, தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

No comments:

Post a Comment