Saturday, February 12, 2011

மீண்டும் சாதித்த வெஸ்ட் இண்டீஸ்

இங்கிலாந்து மண்ணில் இரண்டாவது உலக கோப்பை தொடர் 1979ல் நடந்தது. இம்முறை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதல் தொடரை போலவே 60 ஓவர்கள், வீரர்களுக்கு வெள்ளை நிற உடை, சிவப்பு பந்து, பகல் ஆட்டங்கள் போன்றவை தொடர்ந்தன. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. ஈஸ்ட் ஆப்ரிக்கா தகுதி பெற தவறியது. இதற்கு பதில் கனடா வாய்ப்பு பெற்றது.
இந்தியா பரிதாபம்:
"பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கையிடம் வரிசையாக தோல்வி அடைய, அரையிறுதி வாய்ப்பை இழந்தது. கடந்த முறை பைனல் வரை முன்னேறிய ஆஸ்திரேலிய அணியும் ஏமாற்றம் அளித்தது. பரபரப்பான அரையிறுதியில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை வீழ்த்தியது. இதே போல வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானை வென்றது.
சரிவிலிருந்து மீண்டது:
பைனலில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி கிரினிட்ஜ், ஹெய்ன்ஸ், காலிச்சரண், கேப்டன் கிளைவ் லாய்டு உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்களை விரைவில் இழந்தது. இதையடுத்து நான்கு விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து திணறியது. பின் விவியன் ரிச்சர்ட்ஸ்(138), கோலிஸ் கிங்(86) கைகொடுக்க சரிவில் இருந்து மீண்டது. 60 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது.
மீண்டும் சாம்பியன்:
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியினர் ஏதோ டெஸ்ட் போல படுமந்தமாக ஆடினர். துவக்க வீரர்களான மைக் பிரியார்லி(130 பந்தில் 64 ரன்), ஜெப் பாய்காட்(105 பந்தில் 57 ரன்) நிதானமாக பேட் செய்தனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 38 ஓவரில் 129 ரன்கள் எடுத்து வீழ்ச்சிக்கு வித்திட்டனர். இதற்கு பின் ஜோயல் கார்னர்(5 விக்கெட்), கோலின் கிராப்ட்(3 விக்கெட்) "வேகத்தில்' இங்கிலாந்து அணி சரிந்தது. 2 விக்கெட்டுக்கு 183 ரன்கள் என்ற நிலையில் இருந்த அணி, எஞ்சிய விக்கெட்டுகளை வெறும் 11 ரன்களுக்கு இழக்க, தோல்வியின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை. இங்கிலாந்து அணி 60 ஓவரில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கிளைவ் லாய்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.
-------------
அதிரடி நாயகன் ரிச்சர்ட்ஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரராக இம்முறை விவியன் ரிச்சர்ட்ஸ் ஜொலித்தார். இங்கிலாந்துக்கு எதிரான பைனலில் அபாரமாக பேட் செய்த இவர், 138 ரன்கள்(11 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஒரு நாள் அரங்கில் புரட்சி ஏற்படுத்தினர். பைனலில் அசத்திய இவர், அணிக்கு கோப்பை பெற்று தந்ததோடு, ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

No comments:

Post a Comment