Monday, February 21, 2011

வெற்றியுடன் துவக்குமா இங்கிலாந்து: இன்று நெதர்லாந்துடன் மோதல்

நாக்பூர்: உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில், அனுபவ இங்கிலாந்து அணி சுலப வெற்றி பெற காத்திருக்கிறது.
இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று நாக்பூரில் நடக்கும் பி' பிரிவில் லீக் போட்டியில்(பகலிரவு) இங்கிலாந்து அணி, பலம்குன்றிய நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
வெற்றி உற்சாகம்:
உலக கோப்பை பயிற்சி போட்டியில் கனடா, பாகிஸ்தான் அணிகளை வென்ற உற்சாகத்தில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. மூன்று முறை (1979, 87, 92) உலக கோப்பை பைனலுக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி, ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை. இந்த குறையை இம்முறை நீக்க காத்திருக்கிறது.
வலுவான பேட்டிங்:
இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. கேப்டன் ஸ்டிராசுடன், நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன் துவக்க வீரராக களமிறங்கலாம். "சூப்பர் பார்மில்' உள்ள பீட்டர்சனுக்கு ஐ.பி.எல்., தொடரில் கிடைத்த அனுபவம் கூடுதல் பலம். பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய "ஆல்-ரவுண்டர்' கோலிங்வுட், லீக் சுற்றிலும் கைகொடுக்க வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு டிராட், இயான் பெல், ரவி போபரா, மட் பிரையர் உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
மிரட்டல் வேகம்:
இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சு அசுர பலத்துடன் காட்சி அளிக்கிறது. அனுபவ ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு சமீபத்திய ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியதே காரணம். இவர் 137 ஒருநாள் போட்டியில் 186 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இரண்டு பயிற்சி போட்டியில் 10 விக்கெட் வீழ்த்திய மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், லீக் சுற்றிலும் சாதிக்க வாய்ப்பு உள்ளது. இவர்களுடன் டிம் பிரஸ்னன், லூக் ரைட், கோலிங்வுட் உள்ளிட்ட வேகங்கள் இருப்பது கூடுதல் பலம். சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் சுவான், மைக்கேல் யார்டி அசத்தலாம்.
பதிலடி வாய்ப்பு:
கடந்த 2009ல் இங்கிலாந்தில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்து அணி, இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி அலை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு கிடைத்துள்ளது. அதேவேளையில் அப்போது விளையாடிய பீட்டர் போரன், ஜுய்டெரன்ட், பீட்டர் சீலார், டாட் டி குரூத், கெர்வெஜீ, டசட்டே உள்ளிட் ஆறு நெதர்லாந்து வீரர்கள் இருப்பதால், இங்கிலாந்து அணியினர் மிகுந்த கவனமுடன் விளையாட வேண்டும்.
நான்காவது முறை:
இதுவரை மூன்று முறை (1996, 2003, 07) உலக கோப்பை தொடரில் விளையாடி உள்ள நெதர்லாந்து அணி 14 போட்டியில் இரண்டு வெற்றி மட்டுமே பெற்றது. கடந்த 2003ல் நமீபியா அணியை வீழ்த்திய நெதர்லாந்து அணி, 2007ல் ஸ்காட்லாந்து அணியை தோற்கடித்தது. சமீபத்தில் நடந்த பயிற்சி போட்டியில் ஜிம்பாப்வே, இலங்கை அணிகளிடம் தோல்வி அடைந்தது. எனவே இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்த கடுமையாக போராட வேண்டும். கடந்த 2007 உலக கோப்பை தொடரில் விளையாடிய கேப்டன் பீட்டர் போரன், அடீல் ராஜா, ரியான் டென் டசட்டே உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில், இங்கிலாந்து அணிக்கு சவால் கொடுக்கலாம்.
இங்கிலாந்து ஆதிக்கம்
சர்வதேச கிரிக்கெட் மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் அரங்கில், இங்கிலாந்து-நெதர்லாந்து அணிகள் இரண்டு போட்டியில் மோதியுள்ளன. இதில் இரண்டிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த 1996, 2003ல் நடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி, நெதர்லாந்து அணியை வீழ்த்தியது.
* கடந்த 1996ல் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்து, நெதர்லாந்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதேபோட்டியில் 6 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்த நெதர்லாந்து அணி, இங்கிலாந்துக்கு எதிரான அதிகபட்ச ஸ்கோரை பெற்றது.
* நெதர்லாந்துக்கு எதிராக அதிக ரன் சேர்த்த இங்கிலாந்து வீரர்கள் வரிசையில், கிரீம் ஹிக் (104 ரன்கள்) முன்னிலை வகிக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன் எடுத்த நெதர்லாந்து வீரர்கள் வரிசையில், டிம் டி லீடு (99 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.
* நெதர்லாந்துக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து பவுலர்கள் வரிசையில் ஆண்டர்சன் (4 விக்கெட்) முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய நெதர்லாந்து பவுலர்கள் வரிசையில் டான் வான் புங்கி (3 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார்.

No comments:

Post a Comment