Saturday, February 12, 2011

கனவை நனவாக்கிய கபில்

மூன்றாவது உலக கோப்பை தொடர் இந்திய அணிக்கு மிக இனிமையானதாக அமைந்தது. 1983ல் மீண்டும் இங்கிலாந்தில் நடந்த இத்தொடரில், கபில்தேவ் தலைமையிலான அணி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இத்தொடரிலும் 8 அணிகள் பங்கேற்றன. கனடாவுக்கு பதில் ஜிம்பாப்வே அறிமுக அணியாக கலந்து கொண்டது. அதே 60 ஓவர்கள், சிவப்பு பந்து போன்றவை பயன்படுத்தப்பட்டன. அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. இம்முறை லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் இரண்டு முறை மோத வேண்டும் என்பது மட்டும் புதிய விஷயம்.
லீக் சுற்றில் அதிர்ச்சி முடிவுகளுக்கு பஞ்சமில்லை. முதல் லீக் போட்டியில் "கத்துக்குட்டி' ஜிம்பாப்வேயிடம், ஆஸ்திரேலியா வீழ்ந்தது. பின் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி திணறல் வெற்றி பெற்றது.
இந்தியா சாம்பியன்:
பரபரப்பான பைனலில்(25.6.1983) இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிளைவ் லாய்டு "பீல்டிங்' தேர்வு செய்தார். ராபர்ட்ஸ், மார்ஷல், ஜோயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங் உள்ளிட்ட "வேகங்கள்' போட்டுத் தாக்க, இந்திய அணி ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டது. கவாஸ்கர்(2), யஷ்பால் சர்மா(11), கேப்டன் கபில் தேவ்(15) உள்ளிட்டோர் விரைவில் வெளியேறினர். ஸ்ரீகாந்த்(28), சந்தீப் படேல்(27), மதன் லால்(17) ஓரளவுக்கு கைகொடுக்க, 54.4 ஓவரில் 183 ரன்கள் மட்டும் எடுத்தது.
பின் சுலப இலக்கை விரட்டிய "நடப்பு சாம்பியன்' வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மதன் லால், மொகிந்தர் அமர்நாத் இணைந்து "ஷாக்' கொடுத்தனர். கிரீனிட்ஜ்(1), ஹெய்ன்ஸ்(13) விரைவில் அவுட்டாகினர். மற்றவர்களும் சோபிக்க தவற, 52 ஓவரில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 43 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றி, வரலாறு படைத்தது. தவிர, வெஸ்ட் இண்டீஸ் அணி "ஹாட்ரிக்' பட்டம் வெல்லும் என்ற கணிப்புகளையும் தூள் தூளாக்கியது. ஆல்-ரவுண்டராக ஜொலித்த மொகிந்தர் அமர்நாத்(3 விக்கெட் +26 ரன்கள்) ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இம்முறையும் தொடர் நாயகன் விருது வழங்கப்படவில்லை.

---------
கனவை நனவாக்கிய கபில்
"கபில் டெவில்ஸ்' என்று வர்ணிக்கப்பட்ட இந்திய அணி, 1983ல் நடந்த உலக கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்தியது. இதற்கு, கேப்டன் கபில் தேவ் முக்கிய காரணம். ஜிம்பாப்வேக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்து தவித்தது. இந்த நேரத்தில் களமிறங்கிய கபில்தேவ் 72 பந்துகளில் சதம் அடித்து, வெற்றி தேடி தந்தார். 175 ரன்கள்(138 பந்து, 16 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்த இவர் அவுட்டாகாமல் இருந்தார். பைனலில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரிச்சர்ட்ஸ் கொடுத்த "கேட்ச்சை' சுமார் 60 அடி தூரம் ஓடிச் சென்று பிடித்து, கோப்பை கனவை நனவாக்கினார்.

No comments:

Post a Comment