Saturday, February 19, 2011

வெஸ்ட் இண்டீசுக்கு "முதல்' கோப்பை

ஐந்து நாட்கள் ஜவ்வாக இழுக்கும் டெஸ்ட் போட்டிக்கு மாற்றாக தான் ஒரு நாள் போட்டிகள் உருவாகின. இதில், உடனுக்குடன் "ரிசல்ட்' தெரிந்து விட, ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இவ்வகை போட்டிகளுக்கு மவுசு அதிகரிக்க, உலக கோப்பை தொடர் அறிமுகமானது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலக கோப்பை தொடர், முதன் முதலில் 1975ல் இங்கிலாந்தில் நடந்தது. போட்டிகள் 60 ஓவர்கள் கொண்டதாக நடந்தன. பாரம்பரிய வெள்ளை நிற உடையில் வீரர்கள் பங்கேற்றனர். சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்பட்டன. அனைத்தும் பகல் ஆட்டங்களாக நடந்தன.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, ஈஸ்ட் ஆப்ரிக்கா ஆகிய 8 அணிகள் பங்கேற்றன. இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதியில் மோதின.
இந்திய அணி, தனது முதலாவது போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில், இரண்டு விஷயங்களை மறக்க முடியாது. ஒன்று டெனிஸ் அமிஸ் அடித்த சதம். இது தான் உலக கோப்பை வரலாற்றின் முதல் சதம். அடுத்து இந்தியாவின் கவாஸ்கரின் ஆமை வேக ஆட்டம். இப்போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி டெனிஸ் அமிஸ் சதம்(137) அடிக்க, 60 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 334 ரன்கள் குவித்தது.
"ஆமை வேக' கவாஸ்கர்:
பின் களமிறங்கிய இந்திய அணியின் ஆட்டம் வேடிக்கையாக இருந்தது. டெஸ்ட் போட்டி போல படுமந்தமாக ஆடிய துவக்க வீரர் கவாஸ்கர் 174 பந்துகளில் 36 ரன்கள்(1 பவுண்டரி) மட்டும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி 60 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து, 202 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. "ஏ' பிரிவில் இந்தியா 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பெற்றதால், அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
முதல் கோப்பை:
பரபரப்பான பைனலில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 60 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 291 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, கெய்த் பாய்ஸ் "வேகத்தில்' அதிர்ந்தது. 58.4 ஓவரில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலாவது உலக கோப்பையை தட்டிச் சென்றது.
------------
லார்ட்ஸ் "கிங்' லாய்டு
வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பை கைப்பற்ற கேப்டன் கிளைவ் லாய்டு முக்கிய காரணம். லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த பைனலில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்த இவர் 85 பந்துகளில் அதிரடியாக சதம்(102 ரன், 12 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். பின் வேகப்பந்துவீச்சிலும் அசத்திய இவர், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரரான டக் வால்டர்ஸ் விக்கெட்டை வீழ்த்தி, அணியின் வெற்றி நாயகனாக ஜொலித்தார்.

No comments:

Post a Comment