Tuesday, February 22, 2011

பாகிஸ்தானை சமாளிக்குமா கென்யா?

அம்பாந்தோட்டை: உலக கோப்பை லீக் போட்டியில் இன்று பாகிஸ்தான் அணி, பலம் குன்றிய கென்யாவை சந்திக்கிறது. இதில், சுலப வெற்றி பெற பாகிஸ்தான் தயாராக உள்ளது.
இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று அம்பாந்தோட்டையில் (இலங்கை) நடக்கும் "ஏ' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு), பாகிஸ்தான், கென்யா அணிகள் மோதுகின்றன.
சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் அணி, இம்முறை சாதிக்க வாய்ப்பு உள்ளது. பயிற்சி போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்திய போதும், இங்கிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
சூப்பர் கூட்டணி:
தற்போதைய பாகிஸ்தான் அணியில் இளம் மற்றும் அனுபவ வீரர்கள் இடம் பெற்றிருப்பது பலம். யூனிஸ் கானின் அனுபவம், அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகிக்கும். பயிற்சி போட்டியில் சதம் கடந்து அசத்திய மிஸ்பா, "மிடில்-ஆர்டரில்' சாதிக்கலாம். நல்ல "பார்மில்' உள்ள முகமது ஹபீஸ், அகமது ஷெசாத் உள்ளிட்ட இளம் வீரர்கள், சூப்பர் துவக்கம் அளிக்கும் பட்சத்தில், வலுவான இலக்கை அடையலாம். கம்ரான், <உமர் அக்மல், விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனாக அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. "ஆல்-ரவுண்டராக' கேப்டன் அப்ரிதி, அப்துல் ரசாக் கைகொடுக்க வாய்ப்பு உள்ளது.
அசத்தல் வேகம்:
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சு அசுர பலத்துடன் காட்சி அளிக்கிறது. இரண்டு உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள அக்தர், 16 போட்டியில் 27 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இவருடன் "சூப்பர் பார்மில்' உள்ள உமர் குல், வகாப் ரியாஸ், அப்துல் ரசாக் உள்ளிட்டோர் இணைவது வேகத்தின் பலத்தை அதிகரித்துள்ளது. உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடி, உலக கோப்பை அணியில் இடம் பிடித்த இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜுனாய்டு கான், அதிர்ச்சி அளிக்க வாய்ப்பு உள்ளது. சுழலில் அனுபவ அப்ரிதியுடன், சயீத் அஜ்மல், அப்துல் ரெஹ்மான் உள்ளிட்டோர் இணைவது சிறப்பம்சம்.
கட்டாய எழுச்சி:
நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 69 ரன்களுக்கு சுருண்ட கென்ய அணி, இன்று எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முந்தைய உலக கோப்பை தொடர்களில் வெஸ்ட் இண்டீஸ் (1996), இலங்கை (2003), வங்கதேசம் (2003) உள்ளிட்ட முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி அளித்த கென்ய அணியில், இம்முறை எட்டு புதுமுக வீரர்கள் இடம் பெற்றிருப்பது பின்னடைவான விஷயம். முந்தைய உலக கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ள கேப்டன் ஜிம்மி கமன்டே, காலின்ஸ் ஒபயா, டேவிட் ஒபயா, ஸ்டீவ் டிக்காலோ, பீட்டர் ஆன்கோண்டா, தாமஸ் ஒடாயோ உள்ளிட்டோர் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினால், பாகிஸ்தான் அணிக்கு சவால் அளிக்கலாம். நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதம் கடந்த வாட்டர்ஸ், இன்றைய போட்டியில் அசத்த வாய்ப்பு உள்ளது.
பாக்., ஆதிக்கம்
உலக கோப்பை அரங்கில், பாகிஸ்தான்-கென்யா அணிகள் மோதுவது இதுவே முதன்முறை. ஆனால் சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில், இவ்விரு அணிகள் ஐந்து முறை மோதி உள்ளன. இதில் அனைத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று, ஆதிக்கம் செலுத்துகிறது.
அப்ரிதி எச்சரிக்கை
பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி கூறுகையில், ""முந்தைய உலக கோப்பை தொடர்களில், பாகிஸ்தான் அணி சில அதிர்ச்சி தோல்விகளை சந்தித்துள்ளது. உதாரணமாக கடந்த 2007ல் அயர்லாந்துக்கு எதிராக தோல்வி அடைந்ததன்மூலம், முதல் சுற்றோடு வெளியேற நேரிட்டது. எனவே எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடாமல், ஒவ்வொரு போட்டியிலும் முழுதிறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற போராட வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment