Saturday, February 19, 2011

ஐ.சி.சி., புதிய அறிவிப்பு

தாகா: "உலக கோப்பை தொடரை நடத்தும் நாடுகள் காலிறுதிக்கு முன்னேறினால், அந்த போட்டிகளை தங்கள் சொந்த மண்ணில் விளையாடலாம்,' என, ஐ.சி.சி., அறிவித்துள்ளது.
உலக கோப்பை தொடரின் காலிறுதி போட்டிகள் வங்கதேசத்தில் 2, இந்தியா, இலங்கையில் தலா ஒன்று என்று நடக்க இருந்தன. இதன்படி இந்திய அணி இடம் பெற்றுள்ள "பி' பிரிவில், புள்ளிப்பட்டியலில் 3வது இடம் பிடித்தால் தான், ஆமதாபாத்தில் விளையாட முடியும். மாறாக முதலிடம் பெற்றால் கொழும்புவிலும், 2, 4வது இடம் பெற்றால் வங்கதேசத்திலும் சென்று, காலிறுதி போட்டியை விளையாட வேண்டியது வரும்.
இதற்கு தீர்வு காணும் வகையில் ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹாருன் லார்கட் கூறியது:
ஒருநாள் கிரிக்கெட் என்பது அதிக திறமையுடன் விளையாட வேண்டிய போட்டி. இது சிறந்த அணிகளுக்குத் தான் பொருந்தும். இதனால் அடுத்த உலக கோப்பை தொடரில் தற்போது டெஸ்ட் விளையாடாத கென்யா, நெதர்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட அணிகள் நீக்கப்பட்டு, "டாப்-10' அணிகள் மட்டும் பங்கேற்கும். "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் 12 அணிகளுக்குப் பதிலாக, 16 அணிகள் பங்கேற்கும்.
இந்த தொடரில் போட்டியை நடத்தும் நாடுகள் காலிறுதிக்கு முன்னேறினால், அந்த அணிகளின் சொந்த மண்ணில் விளையாட அனுமதிக்கப்படும். ஒருவேளை, இந்தியா-இலங்கை, வங்கதேசம்-இலங்கை என, இந்த அணிகளுக்குள் விளையாடும் நிலை ஏற்பட்டால், லீக் போட்டியில் பெற்ற வெற்றியின் அடிப்படையில், முடிவு செய்யப்படும்.
இவ்வாறு லார்கட் கூறினார்.

No comments:

Post a Comment