Saturday, February 12, 2011

பட்டம் வென்ற பாண்டிங்

எட்டாவது உலக கோப்பை தொடர் ஆப்ரிக்க கண்டத்தில் முதல் முறையாக நடந்தது. தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா இணைந்து போட்டிகளை நடத்தின. மொத்தம் 14 அணிகள் பங்கேற்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெறும் அணிகள் "சூப்பர்-6' சுற்றுக்கு முன்னேறின.
சர்ச்சை அதிகம்:
இத்தொடரில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. "ஜிம்பாப்வேயில் ஜனநாயகம் செத்து விட்டது' என்று கூறிய அந்நாட்டு வீரர்கள் ஆன்டி பிளவர், ஹென்ரி ஒலங்கா "கறுப்பு பட்டை' அணிந்து விளையாடினர். ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகோபேயின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு சென்று விளையாட இங்கிலாந்து மறுத்தது. இதே போல பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கென்யா சென்று விளையாட நியூசிலாந்து மறுத்தது.
பாக்., தோல்வி:
லீக் சுற்றில் கென்ய அணி, இலங்கையை வீழ்த்தி அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியது. அரையிறுதியில் கங்குலி சதம்(111) அடிக்க இந்திய அணி(270/4), கென்யாவை(179) வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை வென்றது.
வீணான வாய்ப்பு:
ஜோகனஸ்பர்க், வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த பைனலில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. மழை காரணமாக ஆடுகளத்தில் ஈரப்பதம் காணப்பட, "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் கங்குலி முதலில் "பீல்டிங்' செய்வது என்று சர்ச்சைக்குரிய முடிவை எடுத்தார். இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட ஆஸ்திர÷லிய அணி ரன் மழை பொழிந்தது. துவக்கத்தில் கில்கிறிஸ்ட்(57), ஹைடன்(37) அதிரடியாக ரன் சேர்த்தனர். பின் ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்ட கேப்டன் பாண்டிங் சதம் அடித்தார். 8 சிக்சர்கள் விளாசிய இவர் 140 ரன்கள் எடுத்தார். டேமியன் மார்ட்டின் 88 ரன்கள் எடுக்க, 50 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்தது.
இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணி தடுமாறியது. சச்சின்(4), கங்குலி(24), டிராவிட்(47) ஏமாற்றினர். சேவக்(82) மட்டும் ஆறுதல் அளித்தார். 39.2 ஓவரில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. 125 ரன்கள் வித்தியாசத்தில் "மெகா' வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, மூன்றாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி சாதித்தது.
---------
ரன் சாதனையில் சச்சின்
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் இம்முறை அசத்தினார். "ரன் மெஷினாக' திகழ்ந்த இவர், அணியை பைனல் வரை அழைத்துச் சென்றார். 11 போட்டிகளில் 1 சதம், 6 அரைசதம் உட்பட 673 ரன்கள்( சராசரி 61.88) எடுத்தார். இதன் மூலம் ஒரே உலக கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனை படைத்தார். இவரே தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

No comments:

Post a Comment