Wednesday, February 23, 2011

தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை: உலக கோப்பையில் இன்று விறுவிறு

புதுடில்லி: உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றியுடன் துவக்க இரு அணிகளும் ஆயத்தமாக உள்ளன.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில், இன்று நடக்கும் "பி' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
காலிஸ் நம்பிக்கை:
சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் களமிறங்கும் தென் ஆப்ரிக்க அணி, பயிற்சி போட்டியில் ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி இருப்பது கூடுதல் பலம். இந்த அணி, நட்சத்திர வீரரான "ஆல்-ரவுண்டர்' காலிசை முழுமையாக நம்பி உள்ளது. "சூப்பர் பார்மில்' உள்ள இவர், தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகிப்பார். கேப்டன் ஸ்மித், ஆம்லா ஜோடி நல்ல துவக்கம் கொடுக்கும் பட்சத்தில், இமாலய இலக்கை பதிவு செய்யலாம். இவர்களை தவிர டிவிலியர்ஸ், டுமினி, டு பிளசிஸ், இங்ராம் உள்ளிட்டோரும் பேட்டிங்கில் அசத்தலாம்.
ஸ்டைன் மிரட்டல்:
தென் ஆப்ரிக்க அணியின் மிகப் பெரிய பலம் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டைன். உலகின் "நம்பர்-1' பவுலரான இவர், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார் என்பதில் சந்தேகமில்லை. இவருடன் மற்றொரு "வேகப்புயல்' மார்னே மார்கல் இணைவது கூடுதல் பலம். இவர்கள் இருவரும், ஐ.பி.எல்., தொடரில் விளையாடி இருப்பது சிறப்பம்சம். இவர்களை தவிர காலிஸ், டிசோட்சபே, பார்னல், இம்ரான் தாகிர் உள்ளிட்ட வேகங்களும் மிரட்டலாம். சுழலில் அனுபவ ஜோகன் போத்தாவுடன், இளம் ராபின் பீட்டர்சன் சாதிக்கலாம்.
பலமான பேட்டிங்:
பயிற்சி போட்டியில் கென்யாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, இலங்கை அணியிடம் தோல்வி அடைந்தது. வால்ஷ், அம்புரோஸ் உள்ளிட்ட பிரபல வேகப்பந்துவீச்சாளர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, இம்முறை அதன் பேட்டிங் வரிசைதான் பலம். அனுபவ வீரர்களான சந்தர்பால், சர்வான் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பயிற்சி போட்டியில் சதம் கடந்து அசத்திய சர்வான், <லீக் சுற்றிலும் சாதிக்கலாம். கிறிஸ் கெய்ல், போலார்டு, டுவைன் பிராவோ உள்ளிட்டோர் சிறந்த "ஆல்-ரவுண்டராக' வலம்வர வாய்ப்பு உள்ளது. இவர்கள் மூவரும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடி இருப்பது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. துவக்க வீரர் அட்ரியன் பரத், காயம் காரணமாக வெளியேறியது பின்னடைவான விஷயம்.
ரசல் எதிர்பார்ப்பு:
பயிற்சி போட்டியில் சாதித்த ஆன்ட்ரூ ரசல், கீமர் ரோச் <உள்ளிட்ட வேகங்கள், லீக் சுற்றிலும் விக்கெட் வேட்டை நடத்தலாம். கேப்டன் டேரன் சமி, சுலைமான் பென், ரவி ராம்பால், டேரன் பிராவோ உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் "மிடில்-ஓவரில்' நம்பிக்கை அளிக்க வாய்ப்பு உள்ளது. சுழலில் மில்லர், கெய்ல் அசத்தலாம்.
இன்றைய போட்டியில் சமபலத்துடன் உள்ள இரு அணிகள் மோத இருப்பதால், சுவாரஸ்யமான ஆட்டத்தை ரசிகர்கள் கண்டு ருசிக்கலாம்.
ஐந்தாவது முறை
உலக கோப்பை அரங்கில், தென் ஆப்ரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஐந்தாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக நான்கு போட்டியில் விளையாடிய இவ்விரு அணிகள், தலா இரண்டு வெற்றி கண்டன.
* கடந்த 1992ல் நடந்த உலக கோப்பை தொடரில், தென் ஆப்ரிக்க அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. இதற்கு 1996ல் நடந்த காலிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பதிலடி கொடுத்தது. பின்னர் 2003ல் நடந்த தொடரின் லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் வெற்றி பெற்றது. இதற்கு 2007ல் நடந்த தொடரின் "சூப்பர்-8' சுற்றில் தென் ஆப்ரிக்க அணி பதிலடி கொடுத்தது.
* கடந்த 2007ல், 4 விக்கெட்டுக்கு 356 ரன்கள் குவித்த தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக உலக கோப்பை அரங்கில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதேபோட்டியில் 9 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது.
* கடந்த 1992ல், 8 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக உலக கோப்பை அரங்கில் குறைந்த பட்ச ஸ்கோரை பெற்றது. இதேபோட்டியில் 136 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக குறைந்த பட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வரிசையில் லாரா (257 ரன்கள்) முன்னிலை வகிக்கிறார். தென் ஆப்ரிக்கா சார்பில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் டிவிலியர்ஸ் (146 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.
* தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் வரிசையில் ஹார்பர் (4 விக்.,) முதலிடத்தில் உள்ளார். தென் ஆப்ரிக்கா சார்பில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில் பிரிங்கிள் (4 விக்.,) முன்னிலை வகிக்கிறார்.

இடது கையில் சச்சின் பயிற்சி

பெங்களூரு: இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், இடது கையில் பேட்டிங் பயிற்சி எடுத்தது, எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய துணைக்கண்டத்தில் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்றுள்ளன. "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இருந்தது. இரண்டாவது போட்டியில் வரும் பிப். 27 அன்று இங்கிலாந்தை சந்திக்கிறது.
இதற்காக இந்திய வீரர்கள் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில், கடந்த இரண்டு நாட்களாக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த மூன்று மணி நேரத்துக்கும் அதிகமான பயிற்சியில் பேட்டிங்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.
துவக்க வீரர் சேவக், தமிழகத்தின் அஷ்வின், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் இதில் பங்கேற்கவில்லை. யுவராஜ் சிங் பேட்டிங் பயிற்சிக்குப் பதிலாக, 20 நிமிடம் பவுலிங் செய்தார். காம்பிர், கேப்டன் தோனி, விராத் கோஹ்லி, யூசுப் பதான் ஆகியோர் அரை மணி நேரம் பேட்டிங் பயிற்சி செய்தனர்.
ஜாகிர் கான், ஹர்பஜன் இருவரும் முதலில் சிறிது நேரம் பந்து வீச்சில் ஈடுபட்டனர். பின் வழக்கத்துக்கு மாறாக, பேட்ஸ்மேன்களை விட அதிக நேரம் பேட்டிங் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, இவர்கள் செயல்பட்டது வித்தியாசமாக இருந்தது. பயிற்சியாளர் கிறிஸ்டன் இவர்களின் பேட்டிங்கிற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். இடுப்பு வலியால் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்காத ஆஷிஸ் நெஹ்ரா லேசான உடற்பயிற்சியில் ஈடுபட்டார்.
இடது கை பயிற்சி:
முழங்காலில் ஏற்பட்ட வலி காரணமாக, முதல் நாளில் லேசான பயிற்சியில் ஈடுபட்ட சச்சின், நேற்று "கிளவுஸ்' அணியாமல் இடது கையில் சிறப்பான முறையில் பந்தை எதிர்கொண்டு, பேட்டிங் பயிற்சி செய்தார். இவருக்கு சில இந்தியா, உள்ளூர் பவுலர்கள் பவுலிங் செய்தனர். சச்சினின் இந்த முயற்சி எல்லோருக்கும் வித்தியாசமாக இருந்தது.

பாண்டிங்கிற்கு தண்டனை உறுதி

புதுடில்லி: வீரர்கள் அறையில் இருந்த "டிவி' யை <உடைத்த பாண்டிங், தண்டனையில் இருந்து தப்பமுடியாது எனத் தெரிகிறது.
ஆமதாபாத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வேயை வென்றது. இப்போட்டியில் ரன் அவுட்டான ஆத்திரத்தில் இருந்த பாண்டிங், வீரர்களின் "டிரஸ்சிங்' அறையில் இருந்த 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள "டிவி'யை உடைத்தார். பின் தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டார்.
ஆனால் பாண்டிங் செயல் குறித்து, குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் (ஜி.சி.ஏ.,) சார்பில் இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) புகார் தரப்பட, அதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.,) அனுப்பியது.
இதுகுறித்து ஐ.சி.சி., செய்தித்தொடர்பாளர் காலின் கிப்சன் கூறுகையில்,"" எங்களிடம் புகார் வந்தது உண்மைதான். பாண்டிங்கின் செயல் கிரிக்கெட் விதிகளை மீறிய செயல் தான். தற்போது ஆஸ்திரேலிய வீரர்கள் பயணத்தில் உள்ளனர். இதனால் அவர்களிடம் தொடர்பு கொள்ளும் வரை, புகார் குறித்த எந்தவிபரமும் தெரிவிக்க முடியாது,'' என்றார்.

பாகிஸ்தான் அபார வெற்றி! *அப்ரிதி சுழலில் சிக்கியது கென்யா

அம்பாந்தோட்டை: கென்யா அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி 205 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. சுழலில் அசத்திய அப்ரிதி 5 விக்கெட் கைப்பற்றினார். பேட்டிங்கில் சொதப்பிய கென்ய அணி, இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் நடக்கிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் "ஏ' பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான், கென்யா அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி பேட்டிங் தேர்வு செய்தார்.
திணறல் துவக்கம்:
பாகிஸ்தான் அணிக்கு ஷெசாத், ஹபீஸ் துவக்கம் கொடுத்தனர். கென்யா அணியின் ஒடாயோ, ஒடியனோ இணைந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்த, பாகிஸ்தான் வீரர்கள் ரன்சேர்க்க திணறினர். ஹபீஸ் 9 (20 பந்து), ஷெசாத் 1 (18 பந்து) இருவரும் அடுத்தடுத்து திரும்பினர். பாகிஸ்தான் அணி முதல் 9 ஓவரில் 24 ரன்கள் மட்டும் எடுத்தது.
கம்ரான் அபாரம்:
பின் கம்ரான் அக்மல், அனுபவ யூனிஸ் கான் இணைந்து அணியின் "ரன்ரேட்டை' உயர்த்தினர். நெகேமையா ஓவரில் யூனிஸ் கான் 3 பவுண்டரி அடித்தார். அவ்வப்போது பவுண்டரி அடித்த கம்ரான் அக்மல், தனது 9வது அரைசதம் அடித்து (55) அவுட்டானார். சிக்சர் அடித்து ரன்கணக்கை துவக்கிய மிஸ்பாவும், யூனிஸ் கானுக்கு "சூப்பர் கம்பெனி' கொடுத்தார். யூனிஸ் கான், சர்வதேச அரங்கில் 40 வது அரைசதம் (50) எடுத்து வெளியேறினார்.
உமர் அசத்தல்:
அடுத்து மிஸ்பாவுடன் இளம் உமர் அக்மல் இணைய, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்நிலையில் மிஸ்பா 65 ரன்களில் அவுட்டானார். மறுமுனையில் ஒடியனோ ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி உட்பட நான்கு பவுண்டரிகள் விளாசினார். பவுண்டரி மழையாக பொழிந்த உமர் அக்மல் 71 (52 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்களுக்கு ஒபுயாவிடம் பிடிகொடுத்தார்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் அப்ரிதி (7) ஏமாற்றினார். பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்தது. அப்துல் ரசாக் (8), அப்துர் ரெஹ்மான் (5) அவுட்டாகாமல் இருந்தனர். கென்யா சார்பில் ஒடாயோ 3 விக்கெட் வீழ்த்தினார்.
சொதப்பல் பேட்டிங்:
இமாலய இலக்கை விரட்டிய கென்ய அணிக்கு இம்முறை மவுரிஸ், வாட்டர்ஸ் இணைந்து சுமாரான துவக்கம் தந்தனர். சற்று நேரம் தாக்குப்பிடித்த மவுரிஸ் (16), வாட்டர்ஸ் (17) இருவரும் அடுத்தடுத்து அவுட்டானர்.
தற்காப்பு ஆட்டம்:
பின் கேப்டன் டிகாலோ, ஒபுயா இருவரும் இலக்கை துரத்தி வெற்றி பெறுவதை விட, விக்கெட்டை காப்பாற்றும் வகையில் தற்காப்பு ஆட்டத்தில் இறங்கினர். இதனால் ரன்வேகம் மந்தமானது.
அப்ரிதி எழுச்சி:
பேட்டிங்கில் ஏமாற்றிய அப்ரிதி, பவுலிங்கில் கைகொடுத்தார். இவரது அபாரமான சுழலில் டிகாலோ (13), மிஸ்ரா (7), கமன்டே (2) சிக்கினர். ஒபுயா (47) அரைசத வாய்ப்பை பறித்த அப்ரிதி, சர்வதேச அரங்கில் நான்காவது முறையாக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
பின் வரிசையில் ராகேப் படேல், ஒடாயோ, நிகோகே, நெகேமையா என நான்கு வீரர்களும் வரிசையாக "டக்' அவுட்டாகினர். கென்யா அணி 33.1 ஓவரில் 112 ரன்களுக்கு சுருண்டு, 205 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் சார்பில் அப்ரிதி 5, உமர் குல் 2, ஹபீஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணி வரும் 26ம் தேதி இலங்கையை சந்திக்கிறது.

அதிக உதிரிகள்
நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், கென்ய அணி 46 உதிரி ரன்களை வாரி வழங்கி, சர்வதேச அளவில் நான்காவது இடத்தை பெற்றது. முதல் மூன்று இடங்களில் ஸ்காட்லாந்து (59), இந்தியா (51), பாகிஸ்தான் (47) அணிகள் உள்ளன. இதற்குமுன் இந்தியாவுக்கு எதிரான 1999 உலக கோப்பை தொடரில் 44 உதிரிகளை கென்யா கொடுத்திருந்தது.

ஸ்கோர்போர்டு
பாகிஸ்தான்
ஹபீஸ்(கே)வாட்டர்ஸ்(ப)ஒடியனோ 9(20)
ஷெசாத்(கே)கமன்டே(ப)ஒடாயோ 1(18)
கம்ரான்(ஸ்டம்டு)மவுரிஸ்(ப)நிகோகே 55(67)
யூனிஸ் கான்-எல்.பி.டபிள்யு.,(ப)டிகாலோ 50(67)
மிஸ்பா(கே)ஒடியனோ(ப)கமன்டே 65(69)
<<உமர்(கே)ஒபுயா(ப)ஒடாயோ 71(52)
அப்ரிதி-எல்.பி.டபிள்யு.,(ப)ஒடாயோ 7(4)
ரஜாக்-அவுட் இல்லை- 8(6)
ரெஹ்மான்-அவுட் இல்லை- 5(3)
உதிரிகள் 46
மொத்தம் (50 ஓவரில் 7 விக்.,) 317
விக்கெட் வீழ்ச்சி: 1-11(முகமது ஹபீஸ்), 2-12(அகமது ஷெசாத்), 3-110(கம்ரான் அக்மல்), 4-155(யூனிஸ் கான்), 5-273(மிஸ்பா உல் ஹக்), 6-289(உமர் அக்மல்), 7-289(சாகித் அப்ரிதி).
பந்து வீச்சு: ஒடாயோ 7-2-41-3, ஒடியனோ 9-1-49-1, நெகேமையா 7-0-65-0, நிகோகே 10-0-46-1, கமன்டே 7-0-64-1, டிகாலோ 9-0-44-1, ஒபுயா 1-0-5-0.
கென்யா
மவுரிஸ்(கே)கம்ரான்(ப)குல் 16(37)
வாட்டர்ஸ்-ரன் அவுட்(<உமர் அக்மல்) 17(31)
ஒபுயா(கே)ஷெசாத்(ப)அப்ரிதி 47(58)
டிகாலோ(ப)அப்ரிதி 13(33)
மிஸ்ரா-எல்.பி.டபிள்யு.,(ப)அப்ரிதி 6(16)
ராகேப்(கே)உமர் அக்மல்(ப)ஹபீஸ் 0(6)
கமன்டே-எல்.பி.டபிள்யு.,(ப)அப்ரிதி 2(3)
ஒடாயோ-எல்.பி.டபிள்யு.,(ப)அப்ரிதி 0(8)
நெகேமையா-ரன் அவுட்(ப)யூனிஸ் 0(6)
நிகோகே(ப)உமர் குல் 0(1)
ஒடியனோ-அவுட் இல்லை- 0(1)
உதிரிகள் 11
மொத்தம் (33.1 ஓவரில் ஆல் அவுட்) 112
விக்கெட் வீழ்ச்சி: 1-37(வாட்டர்ஸ்), 2-43(மவுரிஸ்), 3-73(டிகாலோ), 4-79(மிஸ்ரா), 5-85(ராகேப் படேல்), 6-87(கமன்டே), 7-101(ஒடாயோ), 8-112(ஒபுயா), 9-112(நெகேமையா), 10-112(நிகோகே).
பந்து வீச்சு: சோயப் அக்தர் 5-1-10-0, அப்துல் ரஜாக் 5-1-23-0, உமர் குல் 4.1-0-12-2, அப்துர் ரெஹ்மான் 7-1-18-0, அப்ரிதி 8-3-16-5, ஹபிஸ் 4-1-26-1.

Tuesday, February 22, 2011

பாகிஸ்தானை சமாளிக்குமா கென்யா?

அம்பாந்தோட்டை: உலக கோப்பை லீக் போட்டியில் இன்று பாகிஸ்தான் அணி, பலம் குன்றிய கென்யாவை சந்திக்கிறது. இதில், சுலப வெற்றி பெற பாகிஸ்தான் தயாராக உள்ளது.
இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று அம்பாந்தோட்டையில் (இலங்கை) நடக்கும் "ஏ' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு), பாகிஸ்தான், கென்யா அணிகள் மோதுகின்றன.
சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் அணி, இம்முறை சாதிக்க வாய்ப்பு உள்ளது. பயிற்சி போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்திய போதும், இங்கிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
சூப்பர் கூட்டணி:
தற்போதைய பாகிஸ்தான் அணியில் இளம் மற்றும் அனுபவ வீரர்கள் இடம் பெற்றிருப்பது பலம். யூனிஸ் கானின் அனுபவம், அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகிக்கும். பயிற்சி போட்டியில் சதம் கடந்து அசத்திய மிஸ்பா, "மிடில்-ஆர்டரில்' சாதிக்கலாம். நல்ல "பார்மில்' உள்ள முகமது ஹபீஸ், அகமது ஷெசாத் உள்ளிட்ட இளம் வீரர்கள், சூப்பர் துவக்கம் அளிக்கும் பட்சத்தில், வலுவான இலக்கை அடையலாம். கம்ரான், <உமர் அக்மல், விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனாக அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. "ஆல்-ரவுண்டராக' கேப்டன் அப்ரிதி, அப்துல் ரசாக் கைகொடுக்க வாய்ப்பு உள்ளது.
அசத்தல் வேகம்:
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சு அசுர பலத்துடன் காட்சி அளிக்கிறது. இரண்டு உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள அக்தர், 16 போட்டியில் 27 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இவருடன் "சூப்பர் பார்மில்' உள்ள உமர் குல், வகாப் ரியாஸ், அப்துல் ரசாக் உள்ளிட்டோர் இணைவது வேகத்தின் பலத்தை அதிகரித்துள்ளது. உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடி, உலக கோப்பை அணியில் இடம் பிடித்த இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜுனாய்டு கான், அதிர்ச்சி அளிக்க வாய்ப்பு உள்ளது. சுழலில் அனுபவ அப்ரிதியுடன், சயீத் அஜ்மல், அப்துல் ரெஹ்மான் உள்ளிட்டோர் இணைவது சிறப்பம்சம்.
கட்டாய எழுச்சி:
நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 69 ரன்களுக்கு சுருண்ட கென்ய அணி, இன்று எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முந்தைய உலக கோப்பை தொடர்களில் வெஸ்ட் இண்டீஸ் (1996), இலங்கை (2003), வங்கதேசம் (2003) உள்ளிட்ட முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி அளித்த கென்ய அணியில், இம்முறை எட்டு புதுமுக வீரர்கள் இடம் பெற்றிருப்பது பின்னடைவான விஷயம். முந்தைய உலக கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ள கேப்டன் ஜிம்மி கமன்டே, காலின்ஸ் ஒபயா, டேவிட் ஒபயா, ஸ்டீவ் டிக்காலோ, பீட்டர் ஆன்கோண்டா, தாமஸ் ஒடாயோ உள்ளிட்டோர் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினால், பாகிஸ்தான் அணிக்கு சவால் அளிக்கலாம். நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதம் கடந்த வாட்டர்ஸ், இன்றைய போட்டியில் அசத்த வாய்ப்பு உள்ளது.
பாக்., ஆதிக்கம்
உலக கோப்பை அரங்கில், பாகிஸ்தான்-கென்யா அணிகள் மோதுவது இதுவே முதன்முறை. ஆனால் சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில், இவ்விரு அணிகள் ஐந்து முறை மோதி உள்ளன. இதில் அனைத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று, ஆதிக்கம் செலுத்துகிறது.
அப்ரிதி எச்சரிக்கை
பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி கூறுகையில், ""முந்தைய உலக கோப்பை தொடர்களில், பாகிஸ்தான் அணி சில அதிர்ச்சி தோல்விகளை சந்தித்துள்ளது. உதாரணமாக கடந்த 2007ல் அயர்லாந்துக்கு எதிராக தோல்வி அடைந்ததன்மூலம், முதல் சுற்றோடு வெளியேற நேரிட்டது. எனவே எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடாமல், ஒவ்வொரு போட்டியிலும் முழுதிறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற போராட வேண்டும்,'' என்றார்.

மன்னிப்பு கேட்டார் பாண்டிங்

ஆமதாபாத்: ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ரன் அவுட்டான ஆத்திரத்தில், வீரர்கள் அறையில் இருந்த "டிவி'யை தனது பேட்டினால் அடித்து உடைத்திருக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங். இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆமதாபாத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வேயை வென்றது.
இப்போட்டியின் போது ஜிம்பாப்வே வீரர் மபோபுவின் "சூப்பர் த்ரோவில்' பாண்டிங் ரன் அவுட்டானார். இந்த ஆத்திரத்தில் மைதானத்தை விட்டு வெளியேறிய இவர், வீரர்களின் "டிரஸ்சிங்' அறைக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த "டிவி'யில் இவரது ரன் அவுட் திரும்ப, திரும்ப காட்டப்பட்டுள்ளது. இதனால், கோபத்தின் உச்சிக்கே சென்ற இவர், தனது பேட்டினால், "டிவி' யை உடைத்துள்ளார். இது 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளது.
பாண்டிங் மன்னிப்பு:
இச்சம்பவத்தை முதலில் மறுத்த ஆஸ்திரேலிய "மீடியா' மானேஜர் பாட்டர்சன், பின் பாண்டிங் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்ட பின், தனது செயலுக்கு உடனடியாக பாண்டிங் மன்னிப்பு கேட்டார். பின் வேறு "டிவி'யை மாற்றுமாறு கேட்டுக்கொண்டார்,'' என்றார்.
தொடரும் அடாவடி:
ஆஸ்திரேலிய வீரர்களின் அடாவடி தொடர்கிறது. கடந்த 2003 ஆஷஸ் தொடரில் எல்.பி.டபிள்யு., அவுட் ஆன வெறுப்பில், "டிரஸ்சிங் ரூமில்' இருந்த கண்ணாடி கதவை உடைத்து, பின் அபராதம் கட்டினார் ஹைடன். கடந்த அக்டோபரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெங்களூரு டெஸ்டில், சச்சின் இரட்டை சதம் அடிக்க, இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த ஏமாற்றத்தை. காமன்வெல்த் தொடரில் பங்கேற்க டில்லி வந்த ஆஸ்திரேலிய வீரர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, விளையாட்டு கிராமத்தில் இருந்த பொருட்களை உடைத்து, "வாஷிங் மெஷினை' தூக்கி, வெளியே எறிந்தனர். தற்போது பாண்டிங்கும், அடாவடித்தனமான செயலில் இறங்கியுள்ளார்.
அருண் லால் ஆவேசம்
பாண்டிங் செயலுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அருண் லால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" உலக கோப்பை தொடரில் விளையாடுகிறோம் என்பதை பாண்டிங் நினைவில் கொள்ள வேண்டும். இவர் அடுத்து வரும் தலைமுறைக்கு உதாரணமாக இருக்க வேண்டும்,'' என்றார்.
ஐ.சி.சி.,யிடம் புகார்
பாண்டிங் செயல் குறித்து குஜராத் கிரிக்கெட் சங்க (ஜி.சி.ஏ.,) செயலர் ராஜேஷ் படேல் கூறுகையில்,"" பாண்டிங் எல்.சி.டி. "டிவி' யை உடைத்தது உண்மை தான். அவுட்டான ஏமாற்றத்தில் இப்படி நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்திடம் தெரிவித்தோம். தவிர, இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) முறைப்படி புகார் கூறியுள்ளோம். இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும் (ஐ.சி.சி.,) அனுப்பப்பட்டது. அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்,'' என்றார்.

இசைக் கருவிகளுக்கு அனுமதி!

கொழும்பு: கிரிக்கெட் போட்டிகளின் போது, இசைக்கருவிகளைக் கொண்டு வர, இலங்கை கிரிக்கெட் அனுமதி தந்துள்ளது.
இலங்கையில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக இசைக்கருவிகள் உள்ளிட்ட பல பொருட்களை, மைதானத்துக்குள் கொண்டுவர போலீசார் தடை விதித்தனர். இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ரசிகர்கள் வருகையை அதிகரிக்கும் வகையில், இசைக்கருவிகளை கொண்டு வர, இலங்கை விளையாட்டுத் துறை அனுமதி தந்துள்ளது. மற்றபடி, மதுபானங்கள், கூர்மையான பொருட்கள், வர்த்தக ரீதியிலான கேமரா, கண்ணாடி பொருட்களுக்கான தடை தொடரும்.

நியூசி., பூகம்பம்: வீரர்கள் அதிர்ச்சி

சென்னை: நியூசிலாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பூகம்பம், அந்த அணி வீரர்களை அதிகம் பாதித்துள்ளது.
நியூசிலாந்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் கிறைஸ்ட்சர்ச். இங்கு நேற்று திடீரென பூகம்பம் ஏற்பட்டது. இது "ரிக்டர்' அளவு கோலில் 6.5 ஆக பதிவானது. இதனால் அங்கிருந்த கட்டடங்கள் நிலை குலைந்து இடிந்து விழுந்தன. இதில் 65 பேர் பலியாகி உள்ளதாக தெரிகிறது. தவிர, சேதம் அதிகம் என்பதால் பலியானவர்கள் எண்ணிக்கை <உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் உலக கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள அந்நாட்டு வீரர்களை அதிகம் பாதித்துள்ளது.
இதுகுறித்து துவக்க வீரர் மார்டின் கப்டில், தனது "டுவிட்டர்' இணையதளத்தில்,"" கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் பூகம்பம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் இப்படி நடந்தது வருத்தமாக உள்ளது. அங்குள்ள மக்களை நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது,'' என தெரிவித்துள்ளார்.
இதுபற்றி நியூசிலாந்து கிரிக்கெட் வெளியிட்ட செய்தியில்,"நேற்று காலை எழுந்த போது, கிறைஸ்ட்சர்ச்சில் மீண்டும் பூகம்பம் என்ற செய்தி வந்தது. அங்குள்ள அனைவரும் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறோம்,' என, தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து திணறல் வெற்றி! *நெதர்லாந்து வீரர் டசாட்டே சதம் வீண்

நாக்பூர்: உலக கோப்பை லீக் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திணறல் வெற்றி பெற்றது. நெதர்லாந்து வீரர் டசாட்டேயின் அதிரடி சதம் வீணானது.
பத்தாவது உலக கோப்பை தொடர் இந்திய துணைக்கண்டத்தில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் "பி' பிரிவு லீக் போட்டியில் நேற்று, இங்கிலாந்து அணி பலவீனமான நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. "டாஸ்' வென்ற நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன், பேட்டிங் தேர்வு செய்தார்.
துணிச்சல் துவக்கம்:
நெதர்லாந்து அணிக்கு கெர்வெஜீ, பாரெசி இருவரும் துணிச்சலான துவக்கம் கொடுத்தனர். பிராட் ஓவரில் மூன்று பவுண்டரி விளாசி மிரட்டினார் பாரெசி. கெர்வெஜீ 16 ரன்களில் திரும்பினார். அடுத்து வந்த கூப்பர், பிரஸ்னன் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். இந்நிலையில் பாரெசி (29) சுவான் சுழலில் சிக்கினார்.
கூப்பர் ஏமாற்றம்:
பின் கூப்பருடன், டசாட்டே இணைந்தார். இந்த ஜோடி இங்கிலாந்து பவுலிங்கை எளிதாக எதிர்கொண்டது. கோலிங்வுட் பந்தில் 2 பவுண்டரி விளாசிய டசாட்டே, பீட்டர்சன் பந்தில் சிக்சர் அடித்து அசத்தினார். நீண்ட நேரம் தாக்குப்பிடித்த கூப்பர் (47) அரைசத வாய்ப்பை இழந்தார்.
டசாட்டே சதம்:
மறுமுனையில் அதிரடியாக ரன்குவித்துக் கொண்டிருந்தார் டசாட்டே. குரூத் தன்பங்கிற்கு 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். பிரஸ்னன் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்த டசாட்டே, சர்வதேச அரங்கில் 4வது சதம் கடந்தார். கேப்டன் போரன், ஆண்டர்சன் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். 110 பந்துகளில் 119 ரன்கள் (3 சிக்சர், 9 பவுண்டரி) எடுத்த டசாட்டே, பிராட் வேகத்தில் வீழ்ந்தார்.
நெதர்லாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்தது. போரன் (35), புகாரி (6) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் பிராட், சுவான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சூப்பர் துவக்கம்:
கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், பீட்டர்சன் அபார துவக்கம் கொடுத்தனர். பீட்டர்சன் நிதானமாக விளையாட, ஸ்டிராஸ் முதல் ஓவரில் 3 பவுண்டரி அடித்து வெளுத்து வாங்கினார். முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில் பீட்டர்சன் (39) பெவிலியன் திரும்பினார்.
ஸ்டிராஸ் அபாரம்:
ஸ்டிராசுடன் டிராட் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டிராஸ், தனது 27வது அரைசதம் கடந்தார். இவர் 88 ரன்களுக்கு அவுட்டானார்.
இங்கிலாந்து வெற்றி:
அடுத்து டிராட், இயான் பெல் இணைந்து ஸ்கோரை சீராக உயர்த்தினர். ஒரு நாள் அரங்கில் 7வது அரைசதம் அடித்த டிராட், 62 ரன்களுக்கு அவுட்டானார். பெல் 33 ரன்களுக்கு வெளியேற சிக்கல் ஏற்பட்டது.
கடைசி கட்டத்தில் கோலிங்வுட் (30*), போபரா (30*) பொறுப்பாக ஆடி, வெற்றியை <உறுதி செய்தனர். இங்கிலாந்து அணி 48.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி தனது இரண்டாவது போட்டியில் (பிப். 27 ) இந்தியாவை சந்திக்கிறது.

அம்பயர்கள் அதிரடி
நேற்று 49வது ஓவரை ஸ்டூவர்ட் பிராட் வீசினார். 3வது பந்தில் நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன் போல்டானார். உடனே பெவிலியன் நோக்கி நடந்தார். ஆனால், இங்கிலாந்து அணி "பீல்டிங்' விதிமுறையை பின்பற்றாததால், அது "நோ-பாலாக' அறிவிக்கப்பட்டு, போரனை திரும்ப அழைத்தனர் அம்பயர்கள். விதிமுறைப்படி நான்கு வீரர்கள் உள்வட்டத்துக்குள் நிற்க வேண்டும். அந்த தருணத்தில், இங்கிலாந்து தரப்பில் 3 வீரர்கள் மட்டுமே இருந்தனர். அம்பயர்களின் அதிரடி நடவடிக்கையால் போரன்(35) கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

அதிக ரன்கள்
டெஸ்ட் போட்டிகள் விளையாடும் அணிக்கு எதிரான, ஒருநாள் போட்டிகளில், நேற்று நெதர்லாந்து அணி அதிகபட்ச ஸ்கோரை (292/6) பதிவு செய்தது. 15 ஆண்டுகளுக்கு முன், இங்கிலாந்துக்கு எதிராக 230 ரன்கள் எடுத்ததே அதிகமாக இருந்தது.

மோசமான பீல்டிங்
நேற்று நெதர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்களின் பீல்டிங், படு சொதப்பலாக இருந்தது. நான்கு எளிதான "கேட்ச்' வாய்ப்புகளை கோட்டைவிட்ட இங்கிலாந்து அணியினர், ரன் அவுட் வாய்ப்புகளையும் வீணடித்தனர். இதை நன்கு பயன்படுத்திக் கொண்ட நெதர்லாந்து அணி, 292 ரன்கள் குவித்தது.

யார் இந்த டசாட்டே
தென் ஆப்ரிக்காவில் பிறந்த டசாட்டே (30), நெதர்லாந்து அணிக்காக 27 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதுவரை 4 சதம், 8 அரைசதங்கள் அடித்துள்ள இவர், பவுலிங்கிலும் 48 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தவிர, சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச (71.21) சராசரி வைத்துள்ள, உலகின் முதல்வீரர் இவர் தான். தென் ஆப்ரிக்காவின் ஆம்லா (59.88) 2வது இடத்தில் உள்ளார். நான்காவது ஐ.பி.எல்., தொடரில் இவர் கோல்கட்டா அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

ஸ்கோர்போர்டு
நெதர்லாந்து
கெர்வெஜீ(கே)பிரையர்(ப)பிரஸ்னன் 16(25)
பாரெசி(ஸ்டம்டு)பிரையர்(ப)சுவான் 29(25)
கூப்பர்(கே)ஆண்டர்சன்(ப)கோலிங்வுட் 47(73)
டசாட்டே(கே)போபரா(ப)பிராட் 119(110)
ஜுய்டெரன்ட்(கே)கோலிங்வுட்(ப)சுவான் 1(10)
குரூத்(ப)பிராட் 28(31)
போரன்-அவுட் இல்லை- 35(24)
புகாரி-அவுட் இல்லை- 6(5)
உதிரிகள் 11
மொத்தம் (50 ஓவரில் 6 விக்.,) 292
விக்கெட் வீழ்ச்சி: 1-36(கெர்வெஜீ), 2-58(பாரெசி), 3-136(கூப்பர்), 4-149(ஜுய்டெரன்ட்), 5-213(குரூத்), 6-274(டசாட்டே).
பந்து வீச்சு: ஆண்டர்சன் 10-0-72-0, ஸ்டூவர்ட் பிராட் 10-2-65-2, பிரஸ்னன் 10-0-49-1, சுவான் 10-0-35-2, கோலிங்வுட் 8-0-46-1, பீட்டர்சன் 2-0-19-0.
இங்கிலாந்து
ஸ்டிராஸ்(கே)கூப்பர்(ப)புகாரி 88(83)
பீட்டர்சன்(கே)போரன்(ப)சீலார் 39(61)
டிராட்(ஸ்டம்டு)பாரெசி(ப)டசாட்டே 62(65)
பெல்(ப)டசாட்டே 33(40)
கோலிங்வுட்-அவுட் இல்லை- 30(23)
போபரா-அவுட் இல்லை- 30(20)
உதிரிகள் 14
மொத்தம் (48.4 ஓவரில் 4 விக்.,) 296
விக்கெட் வீழ்ச்சி: 1-105(பீட்டர்சன்), 2-166(ஸ்டிராஸ்), 3-224(டிராட்), 4-241(பெல்).
பந்து வீச்சு: முடாசர் புகாரி 9-0-54-1, வெஸ்டிஜிக் 7-0-41-0, லூட்ஸ் 9.4-0-74-0, சீலார் 10-0-54-1, டசாட்டே 10-0-47-2, கூப்பர் 3-0-23-0.

Monday, February 21, 2011

வெற்றியுடன் துவக்குமா இங்கிலாந்து: இன்று நெதர்லாந்துடன் மோதல்

நாக்பூர்: உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில், அனுபவ இங்கிலாந்து அணி சுலப வெற்றி பெற காத்திருக்கிறது.
இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று நாக்பூரில் நடக்கும் பி' பிரிவில் லீக் போட்டியில்(பகலிரவு) இங்கிலாந்து அணி, பலம்குன்றிய நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
வெற்றி உற்சாகம்:
உலக கோப்பை பயிற்சி போட்டியில் கனடா, பாகிஸ்தான் அணிகளை வென்ற உற்சாகத்தில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. மூன்று முறை (1979, 87, 92) உலக கோப்பை பைனலுக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி, ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை. இந்த குறையை இம்முறை நீக்க காத்திருக்கிறது.
வலுவான பேட்டிங்:
இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. கேப்டன் ஸ்டிராசுடன், நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன் துவக்க வீரராக களமிறங்கலாம். "சூப்பர் பார்மில்' உள்ள பீட்டர்சனுக்கு ஐ.பி.எல்., தொடரில் கிடைத்த அனுபவம் கூடுதல் பலம். பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய "ஆல்-ரவுண்டர்' கோலிங்வுட், லீக் சுற்றிலும் கைகொடுக்க வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு டிராட், இயான் பெல், ரவி போபரா, மட் பிரையர் உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
மிரட்டல் வேகம்:
இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சு அசுர பலத்துடன் காட்சி அளிக்கிறது. அனுபவ ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு சமீபத்திய ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியதே காரணம். இவர் 137 ஒருநாள் போட்டியில் 186 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இரண்டு பயிற்சி போட்டியில் 10 விக்கெட் வீழ்த்திய மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், லீக் சுற்றிலும் சாதிக்க வாய்ப்பு உள்ளது. இவர்களுடன் டிம் பிரஸ்னன், லூக் ரைட், கோலிங்வுட் உள்ளிட்ட வேகங்கள் இருப்பது கூடுதல் பலம். சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் சுவான், மைக்கேல் யார்டி அசத்தலாம்.
பதிலடி வாய்ப்பு:
கடந்த 2009ல் இங்கிலாந்தில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்து அணி, இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி அலை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு கிடைத்துள்ளது. அதேவேளையில் அப்போது விளையாடிய பீட்டர் போரன், ஜுய்டெரன்ட், பீட்டர் சீலார், டாட் டி குரூத், கெர்வெஜீ, டசட்டே உள்ளிட் ஆறு நெதர்லாந்து வீரர்கள் இருப்பதால், இங்கிலாந்து அணியினர் மிகுந்த கவனமுடன் விளையாட வேண்டும்.
நான்காவது முறை:
இதுவரை மூன்று முறை (1996, 2003, 07) உலக கோப்பை தொடரில் விளையாடி உள்ள நெதர்லாந்து அணி 14 போட்டியில் இரண்டு வெற்றி மட்டுமே பெற்றது. கடந்த 2003ல் நமீபியா அணியை வீழ்த்திய நெதர்லாந்து அணி, 2007ல் ஸ்காட்லாந்து அணியை தோற்கடித்தது. சமீபத்தில் நடந்த பயிற்சி போட்டியில் ஜிம்பாப்வே, இலங்கை அணிகளிடம் தோல்வி அடைந்தது. எனவே இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்த கடுமையாக போராட வேண்டும். கடந்த 2007 உலக கோப்பை தொடரில் விளையாடிய கேப்டன் பீட்டர் போரன், அடீல் ராஜா, ரியான் டென் டசட்டே உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில், இங்கிலாந்து அணிக்கு சவால் கொடுக்கலாம்.
இங்கிலாந்து ஆதிக்கம்
சர்வதேச கிரிக்கெட் மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் அரங்கில், இங்கிலாந்து-நெதர்லாந்து அணிகள் இரண்டு போட்டியில் மோதியுள்ளன. இதில் இரண்டிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த 1996, 2003ல் நடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி, நெதர்லாந்து அணியை வீழ்த்தியது.
* கடந்த 1996ல் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்து, நெதர்லாந்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதேபோட்டியில் 6 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்த நெதர்லாந்து அணி, இங்கிலாந்துக்கு எதிரான அதிகபட்ச ஸ்கோரை பெற்றது.
* நெதர்லாந்துக்கு எதிராக அதிக ரன் சேர்த்த இங்கிலாந்து வீரர்கள் வரிசையில், கிரீம் ஹிக் (104 ரன்கள்) முன்னிலை வகிக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன் எடுத்த நெதர்லாந்து வீரர்கள் வரிசையில், டிம் டி லீடு (99 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.
* நெதர்லாந்துக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து பவுலர்கள் வரிசையில் ஆண்டர்சன் (4 விக்கெட்) முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய நெதர்லாந்து பவுலர்கள் வரிசையில் டான் வான் புங்கி (3 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார்.

சச்சின் நலமாக உள்ளார்

பெங்களூரு: சச்சினுக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிய அளவில் இல்லை என்றும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாவது உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதில் சச்சின் 28 ரன்கள் எடுத்திருந்த போது, ரன் அவுட்டானார். இரண்டாவது போட்டி வரும் பிப். 27 அன்று பெங்களூருவில் நடக்கிறது.
இதனிடையே நேற்று முன்தினம் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு, இடது முழங்காலில் லேசான வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக, மும்பையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் "எம்.ஆர்.ஐ.,' ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது.
இதுகுறித்து இந்திய அணியின் மானேஜர் ரஞ்சிப் பிஸ்வால் கூறுகையில்,"" முழங்காலில் ஏற்பட்ட வலி, ஏற்கனவே உள்ளது தான். இது லேசான பிரச்னை. இதுகுறித்து அதிக கவலைப்படத் தேவையில்லை. தவிர, "எம்.ஆர்.ஐ.,' ஸ்கேன் அறிக்கையும் தெளிவாக உள்ளது. இதனால் சச்சின் அடுத்த (பிப். 27) போட்டியில் கட்டாயம் பங்கேற்பார்,'' என்றார்.

டிக்கெட் விலை படு வீழ்ச்சி!

கொழும்பு: இலங்கையில் நடக்கும் உலக கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டின் விலை, பல மடங்கு குறைக்கப்பட்டுள்ளது.
இந்திய துணைக்கண்டத்தில் தற்போது பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் பங்கேற்கும் போட்டிகளைத் தவிர, மற்ற ஆட்டங்களுக்கு ரசிர்கர்கள் வருகை குறைவாக உள்ளது. இத்தொடரில் இலங்கையில் மட்டும் 12 போட்டிகள் நடக்கவுள்ளன.
நேற்று முன்தினம் அம்பாந்தோட்டையில் நடந்த இலங்கை, கனடா இடையிலான போட்டியை காண, 35 ஆயிரம் ரசிகர்கள் திரண்டனர். நாளை இங்கு பாகிஸ்தான், கென்யா அணிகள் மோதவுள்ளன. இதற்கும் அதே அளவிலான ரசிகர்கள் வருகையை இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி.,) எதிர்பார்க்கிறது.
இதுகுறித்து எஸ்.எல்.சி., உலக கோப்பை இயக்குனர் சுராஜ் தண்டெனியா கூறியது:
வழக்கமான ரசிகர்களை விட, கூடுதலாக 10 சதவீத ரசிகர்கள் வந்தாலே மகிழ்ச்சி தான் என்று, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தெரிவித்துள்ளது. இது எங்களுக்கு மிகவும் சவாலானது. இதற்காக இலங்கை தவிர, மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டின் விலையை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளோம். அதாவது 1000 ரூபாய் டிக்கெட்டின் விலை, 400 ரூபாயாக குறைக்கப்படும்.
எங்களுடைய முக்கிய நோக்கம், அனைத்து மக்களையும் போட்டிகளை காணச் செய்வது தான். மற்றபடி இந்த உலக கோப்பை தொடர் மூலம் நாங்கள் லாபம் எதிர்பார்க்கவில்லை. தவிர, "ரேடியோ' நிகழ்ச்சிகளில் போட்டிகளை அறிவித்து, அதன்மூலமும் ரசிகர்களை மைதானத்துக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம்.
இவ்வாறு சுராஜ் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி *வீழ்ந்தது ஜிம்பாப்வே

ஆமதாபாத்: உலக கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி அசத்தலாக துவக்கியது. தனது முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வேயை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இதில் "ஏ' பிரிவில் நேற்று நடந்த லீக் போட்டியில் "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வேயை சந்தித்தது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாண்டிங், பேட்டிங் தேர்வுசெய்தார்.
நிதான ஆட்டம்:
ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன், ஹாடின் துவக்கம் தந்தனர். போட்டியின் இரண்டாவது ஓவரில் இருந்தே சுழற்பந்து வீச்சை கையில் எடுத்தார் சிகும்புரா. இதனால் முதல் 10 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் மட்டும் எடுத்தது. சற்று சுதாரித்த வாட்சன், ஹாடின் இருவரும் மபோபு ஓவரில் தலா 2 பவுண்டரிகள் அடித்தனர். இந்நிலையில் 66 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த ஹாடின் அவுட்டானார்.
வாட்சன் அரைசதம்:
வாட்சனுடன், கேப்டன் பாண்டிங் இணைந்தார். பிரண்டன் டெய்லர் பந்தில் பவுண்டரி அடித்த வாட்சன், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 20வது அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய இவர் கிரீமரின் பந்தில் "சூப்பர்' சிக்சர் அடித்தார். பின் இவரிடமே வாட்சன் (79) வீழ்ந்தார். 28 ரன்கள் எடுத்திருந்த பாண்டிங், மபோபுவின் அருமையான "த்ரோவில்' ரன் அவுட்டானார்.
கிளார்க் அபாரம்:
ஜிம்பாப்வே வீரர்களில் சுழற்பந்து வீச்சில் கிளார்க், காமிரான் ஒயிட் தொடர்ந்து ரன் சேர்க்க திணறினர். ஒயிட் 22 ரன்களில் மபோபு பந்தில் போல்டானார். பின் சற்று அதிரடி காட்டிய டேவிட் ஹசி (14) நிலைக்கவில்லை. மறு முனையில் கிளார்க், 46வது அரைசதம் அடித்தார். பிரைஸ் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் அடித்து மிரட்டிய ஸ்டீபன் ஸ்மித் (11) விரைவில் வெளியேறினார்.
ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 262 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே சார்பில் மபோபு 2, பிரைஸ், உட்செயா, கிரீமர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சரிந்த "டாப் ஆர்டர்':
எட்டிவிடும் இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு கவன்ட்ரி, பிரண்டன் டெய்லர் துவக்கம் தந்தனர். பிரட் லீயின் வேகப்பந்து வீச்சை எளிதாக சமாளித்து தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த கவன்ட்ரி (14), அவரிடமே சிக்கினார். அனுபவ தைபு (7), பிரண்டன் டெய்லர் (16) நிலைக்கவில்லை. ஜான்சன் பந்தில் எர்வினும் "டக்' அவுட்டாக, ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
ஜிம்பாப்வே தோல்வி:
அடுத்து கேப்டன் சிகும்புரா, வில்லியம்ஸ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். இருப்பினும், சிகும்புரா (14), வில்லியம்ஸ் (28), சகபவா (6) அடுத்தடுத்து வெளியேற ஜிம்பாப்வே அணியின் தோல்வி உறுதியானது. பின் வரிசையில் உட்செயா (24), கிரீமர் (37) சற்று போராடினர். கடைசியில் மபோபுவும் (2) கைவிட, ஜிம்பாப்வே அணி 46.2 ஓவரில் 171 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா சார்பில் ஜான்சன் 4, கிரெஜ்ஜா, டெய்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை வாட்சன் தட்டிச் சென்றார்.

பாண்டிங் சாதனை
உலக கோப்பை கிரிக்கெட்டில், அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் முதலிடம் (40) பிடித்தார். இரண்டாவது இடத்தில் மெக்ராத் (39) உள்ளார்.
* ஒருநாள் போட்டிகளில் அதிக முறை ரன் அவுட்டான ஆஸ்திரேலிய வீரர்கள் வரிசையில், பாண்டிங் (30) இரண்டாவது இடத்தை பிடித்தார். முதலிடத்தில் மார்க் வாக் (32) உள்ளார்.

23வது வெற்றி
கடந்த 2003, 2007 உலக கோப்பை தொடர்களில், ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 22 போட்டிகளில் வெற்றி பெற்று வந்தது. நேற்று ஜிம்பாப்வேயை வீழ்த்தியதன் மூலம் 23வது வெற்றியை பதிவு செய்தது.

திணறியது ஏன்?
"உலக சாம்பியன்' ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் நேற்று எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. அதிரடியாக பேட் செய்து "மெகா' ஸ்கோரை எட்ட தவறியது. தவிர, பந்துவீச்சிலும் ஏமாற்றியது. ஜிம்பாப்வேயை விரைவாக சுருட்ட முடியவில்லை.

ஸ்கோர்போர்டு
ஆஸ்திரேலியா
வாட்சன்-எல்.பி.டபிள்யு.,(ப)கிரீமர் 79(92)
ஹாடின்-எல்.பி.டபிள்யு.,(ப)உட்செயா 29(66)
பாண்டிங்-ரன் அவுட்(மபோபு) 28(36)
கிளார்க்--அவுட் இல்லை- 58(55)
ஒயிட்(ப)மபோபு 22(36)
ஹசி(ப)பிரைஸ் 14(8)
ஸ்மித்(கே)சகபவா(ப)மபோபு 11(4)
ஜான்சன்-அவுட் இல்லை- 7(3)
உதிரிகள் 14
மொத்தம் (50 ஓவரில் 6 விக்.,) 262
விக்கெட் வீழ்ச்சி: 1-61(ஹாடின்), 2-140(வாட்சன்), 3-144(பாண்டிங்), 4-207(ஒயிட்), 5-241(ஹசி), 6-254(ஸ்மித்).
பந்து வீச்சு: மபோபு 9-0-58-2, பிரைஸ் 10-0-43-1, உட்செயா 10-2-43-1, கிரீமர் 10-0-41-1, பிரண்டன் டெய்லர் 3-0-23-0, சிகும்புரா 2-0-18-0, வில்லியம்ஸ் 6-0-29-0.
ஜிம்பாப்வே
டெய்லர்(ப)டெய்ட் 16(24)
கவன்ட்ரி(கே)+(ப)பிரட் லீ 14(24)
தைபு(கே)வாட்சன்(ப)ஜான்சன் 7(17)
எர்வின்-எல்.பி.டபிள்யு.,(ப)ஜான்சன் 0(6)
சிகும்புரா(கே)ஹாடின்(ப)கிரெஜ்ஜா 14(25)
வில்லியம்ஸ்(கே)வாட்சன்(ப)டெய்ட் 28(40)
சகபவா-எல்.பி.டபிள்யு.,(ப)கிரெஜ்ஜா 6(18)
உட்செயா(கே)பாண்டிங்(ப)ஹசி 24(45)
கிரீமர்(கே)ஹாடின்(ப)ஜான்சன் 37(51)
பிரைஸ்-அவுட் இல்லை- 5(19)
மபோபு(கே)ஹாடின்(ப)ஜான்சன் 2(11)
உதிரிகள் 18
மொத்தம் (46.2 ஓவரில் ஆல் அவுட்) 171
விக்கெட் வீழ்ச்சி: 1-22(கவன்ட்ரி), 2-40(தைபு), 3-40(டெய்லர்), 4-44(எர்வின்), 5-88(சிகும்புரா), 6-96(வில்லியம்ஸ்), 7-104(சகபவா), 8-153(உட்செயா), 9-167(கிரீமர்), 10-171(மபோபு).
பந்து வீச்சு: டெய்ட் 9-1-34-2, பிரட் லீ 8-1-34-1, ஜான்சன் 9.2-1-19-4, கிரெஜ்ஜா 8-0-28-2, வாட்சன் 3-0-7-0, ஸ்மித் 5-0-24-0, டேவிட் ஹசி 4-1-12-1.

Sunday, February 20, 2011

ஆஸி., வேட்டை ஆரம்பம்!: இன்று ஜிம்பாப்வேயுடன் மோதல்

ஆமதாபாத்: உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி, தனது வெற்றிப் பயணத்தை இன்று துவக்குகிறது. லீக் போட்டியில் பலவீனமான ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது.
இந்திய துணைக்கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் "ஏ' பிரிவில் இன்று நடக்கும் லீக் போட்டியில், "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது.
கடந்த மூன்று தொடர்களில் தொடர்ந்து கோப்பை வென்று "ஹாட்ரிக்' பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, சமீபகாலமாக திணறி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை மட்டும், 6-1 என்ற கணக்கில் வென்றது.
இம்முறை உலக கோப்பை பயற்சி போட்டிகளில், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணியிடம் மோசமாக தோற்றது. இதனை இன்றைய லீக் போட்டியில் அசத்தல் வெற்றி பெற காத்திருக்கிறது. கேப்டன் பாண்டிங், மைக்கேல் கிளார்க் தவிர, வாட்சன், டேவிட் ஹசி, காமிரான் ஒயிட், பிராட் ஹாடின் என பேட்ஸ்மேன்கள் எழுச்சி பெறலாம். பவுலிங்கில் பிரட் லீ, டெய்ட், கிரெஜ்ஜா, ஸ்டீவன் ஸ்மித் ஆகிய வீரர்கள் இருப்பதால், குறைந்த ஸ்கோருக்கு சுருட்ட முயற்சிக்கலாம்.
ஜிம்பாப்வே சமாளிக்குமா?
சமீப காலமாக ஜிம்பாப்வே அணியில் இருந்து விலகிச்சென்ற வீரர்கள் பயிற்சியாளர்கள்,தேர்வாளர்கள் என மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது உற்சாகமான செய்திதான். கேப்டன் சிகும்புரா, கவன்ட்ரி, கிரீமர், எர்வின், ரே பிரைஸ், மசகட்சா போன்ற வீரர்கள் கைகொடுக்க முயற்சிக்கலாம். அனுபவ தைபு, சீன் வில்லியம்ஸ் ஆகியோரும் அசத்தலாம்.
இன்றைய போட்டி குறித்து ஜிம்பாப்வே வீரர் உட்செயா கூறுகையில்,"" ஆஸ்திரேலிய அணி பலமான அணி என்பது எங்களுக்குத் தெரியும். இருப்பினும், எங்களது பலம் சுழற் பந்து வீச்சு. இதைக்கொண்டு அவர்களை குறைந்த ஸ்கோருக்கு கட்டுப்படுத்த முயற்சிப்போம்,'' என்றார்.
23வது வெற்றி?
உலக கோப்பை தொடரில் 2003, 2007 தொடரில் தொடர்ந்து 22 போட்டிகளில் தோல்வியடையாமல் வலம் வருகிறது ஆஸ்திரேலிய அணி. இன்று ஜிம்பாப்வேயை வீழ்த்தி 23 வது வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸி., அதிகம்
ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் 25 போட்டிகளில் ஆஸ்திரேலியா, ஒரு போட்டியில் ஜிம்பாப்வே வென்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவில்லை.
* உலக கோப்பை தொடரில் இரு அணிகள் சந்தித்த 8 போட்டிகளில் 7ல் ஆஸ்திரேலியா, ஒன்றில் ஜிம்பாப்வே வென்றுள்ளது.
சாதனை நோக்கி பாண்டிங்
உலக கோப்பை கிரிக்கெட் அரங்கில், அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், மெக்ராத் முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் இருவரும் தலா 39 போட்டியில் பங்கேற்றுள்ளனர். இம்முறை மெக்ராத் இல்லாததால், இன்றைய போட்டியில் விளையாட உள்ள பாண்டிங், அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறுகிறார்.
இப்பட்டியலில் "டாப்-5' வீரர்கள்:
வீரர் போட்டி
மெக்ராத் (ஆஸி.,) 39
பாண்டிங் (ஆஸி.,) 39
ஜெயசூர்யா (இலங்கை) 38
அக்ரம் (பாக்.,) 38
சச்சின் (இந்தியா) 37
அதிர்ச்சி அளிப்போம்
கடந்த 1983ல் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, அதிர்ச்சி கொடுத்தது. இதே போல் இம்முறையும் அசத்த வாய்ப்பு இருப்பதாக ஜிம்பாப்வே பயிற்சியாளர் ஆலன் புட்சர் தெரிவித்தார். இது குறித்து இவர் கூறுகையில்,""ஆஸ்திரேலிய அணியில் நான்கு "வேகங்கள்' உள்ளனர். இவர்கள் பந்துவீசும் முறை பற்றி நன்கு தெரியும். எங்கள் தரப்பில் "ஸ்பின்னர்களை' அதிகம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். அணி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திக் காட்டலாம்,''என்றார்.
ஜிம்பாப்வே எல்டன் கேப்டன் சிகும்பரா கூறுகையில்,""கடந்த ஐந்து வாரங்களாக சிறப்பான பயிற்சி மேற்கொண்டுள்ளோம். அணி வீரர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் <உள்ளனர். ஒவ்வொரு வீரரும் தனக்கு அளிக்கப்பட்ட பணியை கச்சிதமாக செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்,''என்றார்.
மீண்டும் சாதிப்போம்
ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் கூறுகையில்,""ஜிம்பாப்வேயை வீழ்த்தி, உலக கோப்பை தொடரை வெற்றிகரமாக துவக்குவோம். அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களிடமும், கோப்பை கைப்பற்ற தேவையான திறமை உள்ளது. மீண்டும் ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்று சாதிப்போம். 1999, 2003ல் நாங்கள் தான் கோப்பை வெல்வோம் என கணித்தார்கள். ஆனால், 2007ல் அவ்வாறு கருதவில்லை. ஆனாலும், சாதித்துக் காட்டினோம். எனவே, கோப்பை வெல்லக்கூடிய அணியாக எங்களை கருதுகிறார்களா என்பது பற்றி எல்லாம் கவலை இல்லை. காயத்தில் இருந்து பிரட் லீ மீண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அனுபவ இவர் தான் அணியின் பந்துவீச்சை வழிநடத்திச் செல்ல உள்ளார்,''என்றார்.

இலங்கை அசத்தல் வெற்றி: ஜெயவர்தனா சதம்

அம்பாந்தோட்டை: உலக கோப்பை தொடரை இலங்கை அணி "மெகா' வெற்றியுடன் துவக்கியுள்ளது. "கத்துக்குட்டி' கனடாவை 210 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் நேற்று, அம்பாந்தோட்டையில் உள்ள ராஜபக்ஷே மைதானத்தில் நடந்த "ஏ' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) இலங்கை, கனடா அணிகள் மோதின. "டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா, பேட்டிங் தேர்வு செய்தார்.
தில்ஷன் அரைசதம்:
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு உபுல் தரங்கா, தில்ஷன் ஜோடி சுமாரான துவக்கம் அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த போது, தரங்கா (19) "ரன்-அவுட்' ஆனார். பின்னர் எழுச்சி கண்ட தில்ஷன் (50) ஆறுதல் அளித்தார்.
சூப்பர் ஜோடி:
பின்னர் சங்ககரா, மகிலா ஜெயவர்தனா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. பொறுப்பாக ஆடிய சங்ககரா, ஒருநாள் அரங்கில் தனது 60வது அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 179 ரன்கள் சேர்த்த நிலையில், சங்ககரா (92) சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார்.
ஜெயவர்தனா சதம்:
அபாரமாக ஆடிய ஜெயவர்தனா, ஒருநாள் அரங்கில் தனது 13வது சதம் அடித்தார். இவர் 81 பந்தில் 100 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் களமிறங்கிய மாத்யூஸ் (21), சமரவீரா (18*), பெரேரா (11) ஓரளவு ரன் சேர்க்க, இலங்கை அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 332 ரன்கள் எடுத்தது. கனடா சார்பில் ஹர்விர் பெய்த்வான், ஜான் டேவிசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அபார பந்துவீச்சு:
கடின இலக்கை விரட்டிய கனடா அணியை இலங்கை வேகப்பந்துவீச்சாளர்கள் போட்டுத் தாக்கினர். பெரேரா வேகத்தில் டேவிசன் (0), சர்காரி (6) அவுட்டானார்கள். துவக்க வீரர் குணசேகரா (1), குலசேகரா பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த ஹன்சரா(9), சமரவீரா சுழலில் "ஸ்டெம்பிங்' ஆனார். இதனால் கனடா அணி 4 விக்கெட்டுக்கு 42 ரன்கள் எடுத்து திணறியது. பின்னர் இணைந்த கேப்டன் பகாய் (22), ரிஜ்வான் (37) ஆறுதல் அளித்தனர். மற்ற வீரர்கள் ஏமாற்ற கனடா அணி 36.5 ஓவரில் 122 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை சார்பில் பெரேரா, குலசேகரா தலா 3, முரளிதரன் 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது இலங்கை வீரர் மகிலா ஜெயவர்தனாவுக்கு வழங்கப்பட்டது.
தில்ஷன் "5000'
நேற்று அரைசதம் கடந்த இலங்கை வீரர் தில்ஷன், 44வது ரன்னை கடந்த போது, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 5000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை அடைந்தார். இதன்மூலம் இச்சாதனை படைத்த 8வது இலங்கை வீரர் மற்றும் 59வது சர்வதேச வீரர் என்ற பெருமை பெற்றார்.
"அதிவேக' ஜெயவர்தனா
அதிரடியாக ஆடிய மகிலா ஜெயவர்தனா, 80 பந்தில் சதம் அடித்தார். இது உலக கோப்பை அரங்கில் பதிவு செய்யப்பட்ட ஐந்தாவது அதிவேக சதம். இலங்கை சார்பில் பதிவு செய்யப்பட்ட மூன்றாவது அதிவேக சதம். முன்னதாக ஜெயசூர்யா (86 பந்து), அரவிந்த டிசில்வா (92 பந்து) உள்ளிட்ட இலங்கை வீரர்கள் இச்சாதனை படைத்திருந்தனர்.
இவ்வரிசையில் "டாப்-5' வீரர்கள்:
வீரர் பந்து ரன் எதிரணி ஆண்டு
ஹைடன் (ஆஸி.,) 66 101 தெ.ஆ., 2007
டேவிசன் (கனடா) 67 111 வெ.இ., 2003
கபில்தேவ் (இந்தியா) 72 175* ஜிம்., 1983
கில்கிறிஸ்ட் (ஆஸி.,) 72 149 இலங்கை 2007
ஜெயவர்தனா (இலங்கை) 80 100 கனடா 2011
ஆறாவது முறை
கனடா அணிக்கு எதிராக 7 விக்கெட்டுக்கு 332 ரன்கள் குவித்த இலங்கை அணி, உலக கோப்பை அரங்கில் ஆறாவது முறையாக 300 ரன்களுக்கு மேல் எடுத்தது. இது உலக கோப்பை தொடரில் இலங்கை அணியின் இரண்டாவது அதிக பட்ச ஸ்கோர். முன்னதாக கடந்த 1996ல் கென்யாவுக்கு எதிராக 5 விக்கெட்டுக்கு 398 ரன்கள் எடுத்திருந்தது.
இலங்கை அணியின் அதிக பட்ச ஸ்கோர்:
ரன்கள் எதிரணி ஆண்டு
398/5 கென்யா 1996
332/7 கனடா 2011
321/6 பெர்முடா 2007
318/4 வங்கதேசம் 2007
313/7 ஜிம்பாப்வே 1992
303/5 வெ.இண்டீஸ் 2007
பிரமாண்ட வெற்றி
கனடா அணியை 210 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி, உலக கோப்பை அரங்கில் தனது 2வது சிறந்த வெற்றியை பதிவு செய்தது. கடந்த 2007ல் பெர்முடாவுக்கு எதிரான போட்டியில் 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது உலக கோப்பை தொடரில் 7வது பிரமாண்ட வெற்றி.
இவ்வரிசையில் "டாப்-9' அணிகள்
அணி ரன்கள் எதிரணி ஆண்டு
இந்தியா 257 பெர்முடா 2007
ஆஸி., 256 நமீபியா 2003
இலங்கை 243 பெர்முடா 2007
ஆஸி., 229 நெதர்லாந்து 2007
தெ.ஆ., 221 நெதர்லாந்து 2007
ஆஸி., 215 நியூசி., 2007
இலங்கை 210 கனடா 2011
ஆஸி., 203 ஸ்காட்லாந்து 2007
இங்கிலாந்து 202 இந்தியா 1975
அக்ரம் சாதனை சமன்
நேற்று இரண்டு விக்கெட் வீழ்த்திய இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், உலக கோப்பை அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை, முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரமுடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் தலா 55 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். முதலிடத்தில் முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் (71 விக்.,) உள்ளார்.
இவ்வரிசையில் "டாப்-5' பவுலர்கள்:
வீரர் போட்டி விக்கெட்
மெக்ராத் (ஆஸி.,) 39 71
முரளிதரன் (இலங்கை) 32 55
அக்ரம் (பாக்.,) 38 55
வாஸ் (இலங்கை) 31 49
ஸ்ரீநாத் (இந்தியா) 34 44
ஸ்கோர் போர்டு
இலங்கை
தரங்கா -ரன் அவுட்-(குணசேகரா/பகாய்) 19(31)
தில்ஷன் (கே)டேவிசன் (ப)ரிஜ்வான் 50(59)
சங்ககரா (கே)+(ப)டேவிசன் 92(87)
ஜெயவர்தனா (கே)பாலாஜி (ப)டேவிசன் 100(81)
பெரேரா -ரன் அவுட்-(சர்காரி/பகாய்) 11(11)
மாத்யூஸ் (கே)+(ப)பைத்வான் 21(16)
கபுகேதரா (கே)சப்-நிடிஸ் (ப)பைத்வான் 2(3)
சமரவீரா -அவுட் இல்லை- 18(10)
குலசேகரா -அவுட் இல்லை- 7(3)
உதிரிகள் 12
மொத்தம் (50 ஓவரில், 7 விக்.,) 332
விக்கெட் வீழ்ச்சி: 1-63(தரங்கா), 2-88(தில்ஷன்), 3-267(சங்ககரா), 4-276(ஜெயவர்தனா), 5-284(பெரேரா), 6-295(கபுகேதரா), 7-314(மாத்யூஸ்).
பந்துவீச்சு: கோகன் 8-0-62-0, ஒசின்டே 2.1-0-10-0, பைத்வான் 8.5-0-59-2, ஹன்ஸ்ரா 9-0-47-0, ரிஜ்வான் 7-0-47-1, பாலாஜி 7-0-48-0, டேவிசன் 8-0-56-2.
கனடா
குணசேகரா (கே)தில்ஷன் (ப)குலசேகரா 1(10)
டேவிசன் (ப)பெரேரா 0(1)
சர்காரி எல்.பி.டபிள்யு.,(ப)பெரேரா 6(10)
ஹன்ஸ்ரா (ஸ்டெம்)சங்ககரா (ப)சமரவீரா 9(49)
பகாய் (கே)சங்ககரா (ப)பெரேரா 22(47)
ரிஜ்வான் (கே)ஜெயவர்தனா (ப)முரளிதரன் 37(35)
கோர்டன் (கே)சங்ககரா (ப)குலசேகரா 4(10)
கோகன் (கே)சங்ககரா (ப)குலசேகரா 4(8)
பைத்வான் -அவுட் இல்லை- 16(35)
பாலாஜி (கே)தரங்கா (ப)முரளிதரன் 6(7)
ஒசின்டே (ப)மெண்டிஸ் 4(10)
உதிரிகள் 13
மொத்தம் (36.5 ஓவரில் "ஆல்-அவுட்') 122
விக்கெட் வீழ்ச்சி: 1-0(டேவிசன்), 2-8(குணசேகரா), 3-12(சர்காரி), 4-42(ஹன்ஸ்ரா), 5-53(பகாய்), 6-68(கோர்டன்), 7-74(கோகன்), 8-103(ரிஜ்வான்), 9-111(பாலாஜி), 10-122(ஒசின்டே).
பந்துவீச்சு: குலசேகரா 6-2-16-3, பெரேரா 7-0-24-3, மெண்டிஸ் 7.5-3-18-1, முரளிதரன் 9-0-38-2, தில்ஷன் 5-0-14-0, சமரவீரா 2-0-4-1.

நியூசி.,யிடம் தூசியானது கென்யா!: 69 ரன்களில் சுருண்டது

சென்னை: சென்னையில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சில் அதிர்ந்த கென்ய அணி 69 ரன்களுக்கு சுருண்டது. பின் சுலப இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலக கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இந்தியா, வங்கதேசம், இலங்கை நாடுகளில் நடக்கின்றன. "ஏ' பிரிவில் நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில், நியூசிலாந்து, கென்யா அணிகள் மோதின. "டாஸ்' வென்ற கென்ய அணி கேப்டன் கமன்டே, "பேட்டிங்' தேர்வு செய்தார்.
மோசமான துவக்கம்:
நியூசிலாந்து "வேகங்கள்' போட்டுத் தாக்க கென்ய அணியின் விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. சவுத்தி பந்தில் ஒபாண்டா (6) வீழ்ந்தார். வாட்டர்ஸ் 16 ரன்களில் வெளியேறினார். பென்னட்டின் ஒரே ஓவரில் டிகாலோ (2), ஒபுயா (14) அவுட்டாகினர். மோரிசும் (1) நிலைக்கவில்லை.
சுருண்டது கென்யா:
ஜேக்கப் ஓரம் பந்துவீச்சில் கமாண்டே (2), தாமஸ் ஒடாயோ (2) பெவிலியன் திரும்பினர். மறுமுனையில் நேகேமையா, ஷேம் நிகோகே இருவரும் சவுத்தியின் 6 ஓவரில் 5, 6வது பந்தில் அடுத்தடுத்த பந்தில் "டக்' அவுட்டாகினர். ஒடியனோ, ஒரம் பந்தில் "டக்' அவுட்டானார்.
இறுதியில் கென்ய அணி 23.5 ஓவரில் 69 ரன்னுக்கு சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் பென்னட் 4, டிம் சவுத்தி, ஜேக்கப் ஓரம் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
எளிய வெற்றி:
மிக எளிதான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு நாதன் மெக்கலம், கப்டில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒடியனோ பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த கப்டில், தாமஸ் ஒடாயோவையும் விட்டு வைக்கவில்லை. இவர்களது ஓவரில் தலா ஒரு சிக்சர் அடித்தார். நாதன் மெக்கலம், கமாண்டே ஓவரில் 3 பவுண்டரி அடிக்க, நியூசிலாந்து அணி 8 ஓவரில் 72 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கப்டில் (39), நாதன் மெக்கலம் (26) அவுட்டாகாமல் இருந்தனர்.
நியூசிலாந்து அணி தனது இரண்டாவது லீக் போட்டியில், வரும் 25ம் தேதி ஆஸ்திரேலியாவை நாக்பூரில் சந்திக்கிறது.
ஐந்தாவது குறைந்த ஸ்கோர்
நேற்று 69 ரன்களுக்கு சுருண்ட கென்ய அணி, உலக கோப்பை வரலாற்றில், ஐந்தாவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. "டாப்-5' குறைந்த ஸ்கோர் வருமாறு:
அணி எடுத்த ரன்கள் எதிரணி
1. கனடா 36 இலங்கை (2003)
2. கனடா 45 இங்கிலாந்து (1979)
3. நமீபியா 45 ஆஸ்திரேலியா (2003)
4. ஸ்காட்லாந்து 68 வெஸ்ட் இண்டீஸ் (1999)
5. கென்யா 69 நியூசிலாந்து (2011)
சிறந்த வெற்றி
நேற்று அபாரமாக ஆடிய நியூசிலாந்து அணி, உலக கோப்பை வரலாற்றில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எட்டாவது அணி என்ற பெருமை பெற்றது. 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் விபரம்:
அணி எதிரணி ஆண்டு
இந்தியா கிழக்கு ஆப்ரிக்கா 1975
வெ.இ., ஜிம்பாப்வே 1983
வெ.இ., பாக்., 1992
தெ.ஆ., கென்யா 2003
இலங்கை வங்கதேசம் 2003
தெ.ஆ., வங்கதேசம் 2003
ஆஸி., வங்கதேசம் 2007
நியூசி., கென்யா 2011
பென்னட் அபாரம்
கென்யாவுக்கு எதிராக, 16 ரன்களுக்கு 4 விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்தின் ஹமிஷ் பென்னட், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக 46 ரன்களுக்கு 4 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாக இருந்தது.
* இதன்மூலம் உலக கோப்பை அரங்கில் அறிமுக போட்டியில் நான்கு அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய முதல் நியூசிலாந்து வீரர் மற்றும் 16வது சர்வதேச வீரர் என்ற சாதனை படைத்தார்.
ஸ்கோர்போர்டு
கென்யா
ஒபாண்டா-எல்.பி.டபிள்யு.,(ப)சவுத்தி 6(19)
வாட்டர்ஸ்-எல்.பி.டபிள்யு.,(ப)பென்னட் 16(42)
ஒபுயா-எல்.பி.டபிள்யு.,(ப)பென்னட் 14(19)
டிகாலோ(ப)பென்னட் 2(2)
மவுரிஸ்-எல்.பி.டபிள்யு.,(ப)பென்னட் 1(6)
ராகேப்-அவுட் இல்லை- 16(23)
கமன்டே(ப)பிரண்டன் மெக்கலம்(ப)ஓரம் 2(16)
ஒடாயோ(கே)ரைடர்(ப)ஓரம் 2(6)
நெகேமையா(ப)சவுத்தி 0(6)
நிகோகே-எல்.பி.டபிள்யு.,(ப)சவுத்தி 0(1)
ஒடியனோ(கே)ஸ்டைரிஸ்(ப)ஓரம் 0(4)
உதிரிகள் 10
மொத்தம் (23.5 ஓவரில் ஆல் அவுட்) 69
விக்கெட் வீழ்ச்சி: 1-14(ஒபாண்டா), 2-40(வாட்டர்ஸ்), 3-42(டிகாலோ), 4-44(ஒபுயா), 5-49(மவுரிஸ்), 6-59(கமன்டே), 7-63(ஒடாயோ), 8-68(நெகேமையா), 9-68(நிகோகே), 10-69(ஒடியனோ).
பந்து வீச்சு: சவுத்தி 6-0-13-3, நாதன் மெக்கலம் 4-0-15-0, பென்னட் 5-0-16-4, வெட்டோரி 6-1-16-0, ஜேக்கப் ஓரம் 2.5-1-2-3.
நியூசிலாந்து
கப்டில்-அவுட் இல்லை- 39(32)
பிரண்டன் மெக்கலம்-அவுட் இல்லை- 26(17)
உதிரிகள் 7
மொத்தம் (8 ஓவரில் விக்கெட் இழப்பின்றி) 72
பந்து வீச்சு: ஒடாயோ 3-0-25-0, ஒடியனோ 2-0-18-0, கமன்டே 2-0-21-0, நெகேமையா 1-0-5-0.

உலககோப்பை கிரிக்கெட்: இலங்கை அபார வெற்றி

அம்பாந்தோட்டை : "ஏ' பிரிவில் இன்று நடக்கும் உலக கோப்பை லீக் போட்டியில், பலம் வாய்ந்த இலங்கை அணி, கனடாவை சந்திக்கிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணி 50ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்தது. ஜெயவர்த்தனா 100 ரன்களுக்கு அவுட்டானார். இதன் பின்னர் களமிறங்கியுள்ள கனடா அணி 36.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இலங்கை 210 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியின் சார்பில் குல‌சேகரா மற்றும் பெரேரா தலா 3 விக்கெட்டுகளும், முரளிதரன் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். 2003ல் நடந்த உலக கோப்பை போட்டியில் கனடாவை 36 ரன்களுக்கு சுருளச் செய்து, இலங்கை சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை கிரிக்கெட் : கென்யாவை வீழ்த்தி நியூசி., வெற்றி

சென்னை : இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் இணைந்து உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் "ஏ' பிரிவு லீக் போட்டியில் அனுபவ நியூசிலாந்து அணி, கென்யாவுடன் விளை‌யாடின. நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி பெற்றது. முதலில் டாஸ் வென்று, முதலில் பேட்டிங் தேர்வு செய்த கென்யா, 23.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆரம்பம் முதலே நியூசி., பவுலர்களின் பந்துவீச்சில் திணறிய கென்ய வீரர்கள் மளமளவென் அவுட் ஆனார்கள். அடுத்து களமிறங்கிய நியூசி அணி, 7.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி கண்டது.

Saturday, February 19, 2011

ஹர்பஜன் சிறந்த பவுலர்: கிரெஜ்ஜா

மெல்போர்ன்: ""உலகின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் இந்தியாவின் ஹர்பஜன் சிங்,'' என, ஆஸ்திரேலியாவின் ஜாசன் கிரெஜ்ஜா தெரிவித்துள்ளார்.
இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் குறித்து, உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள ஜாசன் கிரெஜ்ஜா கூறியதாவது: இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கை, உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளராக கருதுகிறேன். இவரது பந்துவீசும் முறை எளிதல்ல. ஒவ்வொரு முறையும் இவரது பந்துவீச்சை தீவிரமாக கவனித்து வருகிறேன். இவரிடம் இருந்து சுழற்பந்துவீச்சு குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். இதன்மூலம் தற்போது எனது பவுலிங்கில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளேன். இவர் பந்துவீசும் பொழுது, சக வீரர்களை பீல்டிங் செய்யும் விதம் சிறப்பாக உள்ளது. ஐ.பி.எல்., தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட விரும்புகிறேன். இதன்மூலம் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நீண்டநேரம் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு கிரெஜ்ஜா கூறினார்.

அக்தருக்கு அபராதம்

தாகா: உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் அக்தருக்கு, அணி நிர்வாகம் அபராதம் விதித்தது.
இந்திய துணைக்கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள் சோயப் அக்தர் (35), விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் (29), உமர் குல் (26) ஆகியோருக்கு ஐ.சி.சி., சார்பில் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.
இதனிடையே நேற்று முன்தினம் "டின்னருக்கு' சென்ற அக்தர், வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு தாமதமாக வந்துள்ளார். இதையடுத்து அக்தர் மற்றும் அவருடன் இணைந்து சென்ற வகாப் ரியாசுக்கு, பாகிஸ்தான் அணி நிர்வாகம் தலா சூ 2000 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து பி.சி.பி., யின் பவத் ஆலம் கூறுகையில்,"" அணியின் விதிக்கு அனைத்து வீரர்களும் கட்டுப்பட வேண்டும். அதனால் தான் தாமதமாக வந்த அவர்களுக்கு, அபராதம் விதித்தோம். எதிர்காலத்தில் இதுபோல நடக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளோம்,'' என்றார்.

ஐ.சி.சி., புதிய அறிவிப்பு

தாகா: "உலக கோப்பை தொடரை நடத்தும் நாடுகள் காலிறுதிக்கு முன்னேறினால், அந்த போட்டிகளை தங்கள் சொந்த மண்ணில் விளையாடலாம்,' என, ஐ.சி.சி., அறிவித்துள்ளது.
உலக கோப்பை தொடரின் காலிறுதி போட்டிகள் வங்கதேசத்தில் 2, இந்தியா, இலங்கையில் தலா ஒன்று என்று நடக்க இருந்தன. இதன்படி இந்திய அணி இடம் பெற்றுள்ள "பி' பிரிவில், புள்ளிப்பட்டியலில் 3வது இடம் பிடித்தால் தான், ஆமதாபாத்தில் விளையாட முடியும். மாறாக முதலிடம் பெற்றால் கொழும்புவிலும், 2, 4வது இடம் பெற்றால் வங்கதேசத்திலும் சென்று, காலிறுதி போட்டியை விளையாட வேண்டியது வரும்.
இதற்கு தீர்வு காணும் வகையில் ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹாருன் லார்கட் கூறியது:
ஒருநாள் கிரிக்கெட் என்பது அதிக திறமையுடன் விளையாட வேண்டிய போட்டி. இது சிறந்த அணிகளுக்குத் தான் பொருந்தும். இதனால் அடுத்த உலக கோப்பை தொடரில் தற்போது டெஸ்ட் விளையாடாத கென்யா, நெதர்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட அணிகள் நீக்கப்பட்டு, "டாப்-10' அணிகள் மட்டும் பங்கேற்கும். "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் 12 அணிகளுக்குப் பதிலாக, 16 அணிகள் பங்கேற்கும்.
இந்த தொடரில் போட்டியை நடத்தும் நாடுகள் காலிறுதிக்கு முன்னேறினால், அந்த அணிகளின் சொந்த மண்ணில் விளையாட அனுமதிக்கப்படும். ஒருவேளை, இந்தியா-இலங்கை, வங்கதேசம்-இலங்கை என, இந்த அணிகளுக்குள் விளையாடும் நிலை ஏற்பட்டால், லீக் போட்டியில் பெற்ற வெற்றியின் அடிப்படையில், முடிவு செய்யப்படும்.
இவ்வாறு லார்கட் கூறினார்.

வான்கடேவுக்கு மீண்டும் சிக்கல்

மும்பை: மும்பை வான்கடே மைதானத்துக்கு தீயணைப்புத் துறை சான்றிதழ் பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
உலக கோப்பை தொடருக்காக, வான்கடே மைதானம் கடந்த 2008 முதல் புதுப்பிக்கப்பட்டு வந்தது. இங்கு வரும் மார்ச் 13, 18ல் லீக் போட்டிகள் நடக்கவுள்ளது. தவிர, ஏப். 2ம் தேதி பைனலும் நடக்கிறது. இதற்கான அனுமதியை ஐ.சி.சி., வழங்கிய போதும், மும்பை மாநகராட்சியிடம் இருந்து இன்னும் தீயணைப்பு சான்றிதழ் வரவில்லை.
இதுகுறித்து உயர் தீயணைப்பு அதிகாரி உதய் தாக்கரே கூறுகையில்,"" வான்கடே மைதானத்தில், தீயணைப்பு விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை. தீ தடுப்புக் கருவிகளை வைப்பதில், கட்டாயம் விதிகளை கடைபிடிக்க வேண்டும். இரண்டு முறை ஆய்வு நடத்தியும், இன்னும் சரிசெய்யவில்லை. இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு (எம்.சி.ஏ.,) கடிதம் எழுதியுள்ளோம். இதை சரிசெய்த பின், மீண்டும் ஆய்வு நடத்துவோம்,'' என்றார்.
இதுபற்றி எம்.சி.ஏ., செயலர் லால்சந்த் ராஜ்புட் கூறுகையில்,"" தீயணைப்பு துறையில் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை,'' என்றார்.

கோலாகல கலைநிகழ்ச்சிகளுடன் உலககோப்பை துவக்கவிழா

தாகா: பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தாகாவில் கோலாகலமாக துவங்கியது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து பத்தாவது உலக கோப்பை தொடரை நடத்துகின்றன. போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் துவங்குகின்றன. இதன் துவக்கவிழா இன்று வங்கதேசத்தின் பங்கபந்து தேசிய விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. 135 நிமிடங்கள் நடந்த துவக்கவிழா நிகழ்ச்சிகள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பிரபல பாடகர் பிரயான் ஆடம்ஸ், இந்திய பாடகர் சோனு நிகாம் போன்றவர்கள் பங்கேற்றனர். முன்னதாக எட்டு முன்னணி வங்கதேச பாடகர்கள் பங்கேற்ற 50 நிமிட நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபல இசைக் கலைஞர்கள் ருனா லைலா, சபீனா யாஷ்மின், கிராமிய பாடகர் மும்தாஜ் பேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்குப்பின் 14 நாடுகள் பங்கேற்கும் 43 நாட்கள் நடக்கும் கிரிக்கெட் தொடரை வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, முறைப்படி அறிவித்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட ரிக்ஷாவில், 14 அணியின் கேப்டன்களும், மைதானத்துக்குள் அழைத்து வரப்பட்டனர். அடுத்து வங்கதேச நிதியமைச்சர் முகித், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆசாத் அலி சர்கார் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஆக்ரோஷமாக விளையாடுங்கள் தோனி! கபில் "அட்வைஸ்"

புதுடில்லி: ""உலக கோப்பை தொடரில் பழைய தோனியை பார்க்க விரும்புகிறேன். முன்பு மாதிரி அதிரடியாக "பேட்' செய்ய வேண்டும். தவிர, ஆக்ரோஷமான கேப்டனாக செயல்பட வேண்டும்,'' என, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 1983ல் இந்திய அணிக்கு உலக கோப்பை பெற்று தந்தார் கபில் தேவ். இதற்கு பின் நம்மவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. வரும் 19ம் தேதி துவங்கும் உலக கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதற்கு, தோனியிடம் நிறைய மாற்றம் ஏற்பட வேண்டுமென கபில் தேவ் விரும்புகிறார். இது குறித்து கபில் அளித்த பேட்டி:
சமீப காலமாக பேட்டிங்கில், தோனியின் அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது. இவர், கிரிக்கெட்டில் நுழைந்த காலத்தில் அதிரடியாக பேட் செய்தார். கொஞ்சம் கூட கருணை காட்டாமல் எதிரணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். தற்போது பந்தை அங்கும் இங்கும் தட்டி விட்டு ரன் எடுக்கிறார். காலப் போக்கில் வீரர்களின் பேட்டிங் "ஸ்டைல்' மாறும். ஆனாலும் படுவேகமாக ரன் எடுக்கும் முறையை தக்க வைக்க வேண்டும். எனவே, உலக கோப்பை தொடரின் போது தோனி அதிரடியாக ஆட வேண்டும்.
கேப்டன் என்ற முறையில் தலைமை பண்புக்கு தேவையான அனைத்து விஷயங்களும் தோனியிடம் உண்டு. மிகவும் துணிச்சலாக செயல்படுகிறார். இக்கட்டான தருணங்களை திறம்பட கையாள்கிறார். ஆனால் "மிஸ்டர் கூல்' என்று இவரை அழைப்பதை விரும்பவில்லை. ஏனென்றால், கேப்டன் என்பவர் இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக மிகுந்த மன வலிமையுடன் திகழவேண்டும். நெருக்கடியான தருணங்கள் மற்றும் "மீடியா'விடம் "கூலாக' இருக்கலாம். ஆனால், வீரர்களின் "டிரஸ்சிங் ரூம்' மற்றும் களத்தில் தோனி மிகவும் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும்.
தற்போதைய உலக கோப்பை தொடரில் கூடுதலாக ஒரு விக்கெட் கீப்பர் இடம் பெறாததது கவலை அளிக்கிறது. தோனிக்கு காயம் ஏற்பட்டால் என்ன செய்வார்கள்? கடந்த 1983ல் யஷ்பால் சர்மா மற்றும் சமீப காலமாக டிராவிட் பகுதி நேர கீப்பராக திறம்பட செயல்பட்டனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பேட்டிங் பலம்:
இந்திய அணியின் பலம் பேட்டிங் தான். யூசுப் பதான், தோனி, சேவக் போன்றவர்கள் போட்டியின் போக்கை மாற்றக் கூடியவர்கள். இவர்களுக்கு பக்கபலமாக விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா போன்ற இளம் வீரர்கள் உள்ளனர். தவிர, அணியின் முதுகெலும்பாக சச்சின் இருக்கிறார். 6 பேட்ஸ்மேன்கள் இருப்பதால், எதிரணியின் பந்துவீச்சை எளிதில் துவம்சம் செய்யலாம். பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் சற்று பலவீனமாக இருந்தாலும், அதனை வலிமையான பேட்டிங் இருப்பதால் சமாளித்து விடலாம். ஏனென்றால், ஒரு நாள் போட்டி என்பது பேட்ஸ்மேன்களுக்கானது தான்.
பந்துவீச்சில் நமது அணியில் பிரட் லீ அல்லது டேல் ஸ்டைன் போன்ற வேகங்கள் இல்லை. ஆனாலும், உலக கோப்பையில் ஆடிய அனுபவம் வாய்ந்த பவுலர்கள் இருப்பது நல்லது. பேட்டிங்கிலும் அசத்தக் கூடிய இரண்டு "ஸ்பின்னர்'கள் இருக்கின்றனர்.
இந்திய அணி கோப்பை வெல்லும் என்று என் இதயம் சொல்கிறது. ஆனால், இது எளிதான காரியம் அல்ல என்று மனம் சொல்கிறது. வெற்றிக்காக வீரர்கள் கடினமாக உழைக்க வேண்டும். சொந்த மண்ணில் நடப்பதால், கோப்பை வெல்ல வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆடுகளம் மற்றும் சூழ்நிலையை நமது வீரர்கள் நன்கு அறிந்து இருப்பர். இதனால் 6 பேட்ஸ்மேன்களில் மூன்று பேர் சிறப்பாக விளையாடினால் கூட 300 ரன்களை எளிதில் எட்டி விடலாம். இத்தகைய "ஸ்கோர்', இந்திய துணை கண்டத்தில் சாதிக்க போதுமானது.
கடந்த 1983ல் எங்கள் மீது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. இதனால் மிகுந்த ஆர்வத்துடன் விளையாடினோம். அனைவரும் தங்களது பங்களிப்பை நூறு சதவீதம் அளிக்க, கோப்பை வென்றோம். தற்போதைய வீரர்களும் நாட்டுக்காக விளையாடுவதை பெருமையாக கருதுகின்றனர். இவர்களிடம் ஆர்வமும் உள்ளது. கோப்பை வென்றால் இவர்களது வாழ்க்கை மாறும்.
சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணிக்கு நெருக்கடி இல்லை. தொழில்ரீதியான வீரர்கள் என்பதால், நெருக்கடியை எவ்வாறு கையாள வேண்டும் என்பது நன்கு தெரியும். நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக விளையாடும் அணிக்கே உலக கோப்பை வசப்படும்.
இவ்வாறு கபில் கூறினார்.

10 வினாடிக்கு ரூ. 24 லட்சம்! உலக கோப்பை விளம்பர கட்டணம்

புதுடில்லி: உலக கோப்பை தொடருக்கான விளம்பர கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்படுகிறது. இந்திய அணி "நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், 10 வினாடிகளுக்கு ரூ. 24 லட்சம் வசூலிக்க, ஈ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ் "சேனல்' அதிரடியாக திட்டமிட்டுள்ளது.
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசத்தில், உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்.,19 முதல் ஏப்., 2 வரை நடக்க உள்ளது. இதில், மொத்தம் 49 போட்டிகள் நடக்கின்றன. இதற்கான ஒளிபரப்பு உரிமையை ஈ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ் "சேனல்' ரூ. 9 ஆயிரத்து 126 கோடி கொடுத்து பெற்றுள்ளது. லீக் போட்டிகளின் இடையில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களுக்கு 10 வினாடிகளுக்கு சுமார் ரூ. 4 லட்சம் கட்டணமாக வசூலிக்க முடிவு செய்துள்ளது.
பன்மடங்கு அதிகரிப்பு:
இந்திய அணி லீக் சுற்றை கடந்து, "நாக்-அவுட்' முறையிலான காலிறுதியை எட்டும்பட்சத்தில், உள்ளூர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அப்போது விளம்பர கட்டணத்தை 6 மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இதன்படி 10 வினாடிகளுக்கு ரூ. 24 லட்சம் வரை வசூலிக்கப்பட உள்ளது.
இது குறித்து ஈ.எஸ்.பி.என்., விளம்பர பிரிவு துணை தலைவர் சஞ்சய் கைலாஷ் கூறுகையில்,""உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாட்டை பொறுத்து விளம்பர கட்டணம் நிர்ணயிக்கப்படும். "நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறினால், விளம்பரங்கள் கொடுக்க முன்னணி நிறுவனங்கள் இடையே கடும் போட்டி ஏற்படும். அந்த நேரத்தில், தற்போது வசூலிக்கும் கட்டணத்தில் இருந்து 5 முதல் 6 மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்படும்,''என்றார்.
தூர்தர்ஷன் ஒப்பந்தம்:
ஈ.எஸ்.பி.என் சேனலுடன் சேர்ந்து தூர்தர்ஷனும்("டிடி') உலக கோப்பை போட்டியை ஒளிபரப்ப உள்ளது. ஹீரோ ஹோண்டா, பார்லே, ஜெய்பி சிமென்ட், ரிலையன்ஸ் மொபைல், பெப்சி, டாடா மோட்டார்ஸ், போன்றவை தூர்தர்ஷனுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து ரூ. 75 கோடி வரை ஈ.எஸ்.பி.என்., சேனலுக்கு வழங்கப்பட உள்ளது.
வருமானம் உயரும்:
பிரபல "ஜெனித் ஆப்டிமீடியா' விளம்பர நிறுவனத்தின் துணை தலைவர் நவீன் கேம்கா கூறுகையில்,""உலக கோப்பை தொடரில் இம்முறை இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறினால், புதிய நிறுவனங்கள் விளம்பரம் கொடுக்க முன்வரும். அப்போது "டிமாண்ட்' அதிகரிக்கும். இதனை முழுமையாக பயன்படுத்தி, தனது விளம்பர வருவாயை ஈ.எஸ்,பி.என்., சேனல் அதிகரித்துக் கொள்ளும்,''என்றார்.

வெஸ்ட் இண்டீசுக்கு "முதல்' கோப்பை

ஐந்து நாட்கள் ஜவ்வாக இழுக்கும் டெஸ்ட் போட்டிக்கு மாற்றாக தான் ஒரு நாள் போட்டிகள் உருவாகின. இதில், உடனுக்குடன் "ரிசல்ட்' தெரிந்து விட, ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இவ்வகை போட்டிகளுக்கு மவுசு அதிகரிக்க, உலக கோப்பை தொடர் அறிமுகமானது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலக கோப்பை தொடர், முதன் முதலில் 1975ல் இங்கிலாந்தில் நடந்தது. போட்டிகள் 60 ஓவர்கள் கொண்டதாக நடந்தன. பாரம்பரிய வெள்ளை நிற உடையில் வீரர்கள் பங்கேற்றனர். சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்பட்டன. அனைத்தும் பகல் ஆட்டங்களாக நடந்தன.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, ஈஸ்ட் ஆப்ரிக்கா ஆகிய 8 அணிகள் பங்கேற்றன. இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதியில் மோதின.
இந்திய அணி, தனது முதலாவது போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில், இரண்டு விஷயங்களை மறக்க முடியாது. ஒன்று டெனிஸ் அமிஸ் அடித்த சதம். இது தான் உலக கோப்பை வரலாற்றின் முதல் சதம். அடுத்து இந்தியாவின் கவாஸ்கரின் ஆமை வேக ஆட்டம். இப்போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி டெனிஸ் அமிஸ் சதம்(137) அடிக்க, 60 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 334 ரன்கள் குவித்தது.
"ஆமை வேக' கவாஸ்கர்:
பின் களமிறங்கிய இந்திய அணியின் ஆட்டம் வேடிக்கையாக இருந்தது. டெஸ்ட் போட்டி போல படுமந்தமாக ஆடிய துவக்க வீரர் கவாஸ்கர் 174 பந்துகளில் 36 ரன்கள்(1 பவுண்டரி) மட்டும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி 60 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து, 202 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. "ஏ' பிரிவில் இந்தியா 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பெற்றதால், அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
முதல் கோப்பை:
பரபரப்பான பைனலில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 60 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 291 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, கெய்த் பாய்ஸ் "வேகத்தில்' அதிர்ந்தது. 58.4 ஓவரில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலாவது உலக கோப்பையை தட்டிச் சென்றது.
------------
லார்ட்ஸ் "கிங்' லாய்டு
வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பை கைப்பற்ற கேப்டன் கிளைவ் லாய்டு முக்கிய காரணம். லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த பைனலில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்த இவர் 85 பந்துகளில் அதிரடியாக சதம்(102 ரன், 12 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். பின் வேகப்பந்துவீச்சிலும் அசத்திய இவர், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரரான டக் வால்டர்ஸ் விக்கெட்டை வீழ்த்தி, அணியின் வெற்றி நாயகனாக ஜொலித்தார்.

வங்கத்தை துவம்சம் செய்த சேவக்!: இந்தியா அபார ‌வெற்றி!

மிர்புர்: உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றிகரமாக துவக்கியது. நேற்றைய லீக் போட்டியில் வங்கதேச பந்துவீச்சை அடித்து நொறுக்கிய சேவக் அதிரடியாக சதம்(175 ரன்) கடந்தார். இவருக்கு பக்கபலமாக ஆடிய விராத் கோஹ்லியும் சதம் (100) விளாச, இந்திய அணி, வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் "சூப்பராக' வீழ்த்தியது.
பத்தாவது உலக கோப்பை தொடர் இந்திய துணை கண்டத்தில் நடக்கிறது. நேற்று மிர்புரில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில்(பகலிரவு) இந்தியா, வங்கதேச அணிகள் மோதின.
ரெய்னா இல்லை:
இந்திய அணியில் முதுகு வலி காரணமாக நெஹ்ரா இடம் பெறவில்லை. சுரேஷ் ரெய்னா, அஷ்வினும் வாய்ப்பு பெற இயலவில்லை. வங்கதேச அணியில் அனுபவ அஷ்ரபுல் வாய்ப்பு பெறாதது ஆச்சரியமாக இருந்தது. "டாஸ்' வென்ற வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசன், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
அதிரடி துவக்கம்:
இந்திய அணிக்கு சச்சின், சேவக் இணைந்து அதிரடி துவக்கம் தந்தனர். ஷபியுல் இஸ்லாம் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு பறக்க விட்டார் சேவக். இதே ஓவரில் இன்னொரு பவுண்டரி அடித்த இவர், 12 ரன்கள் விளாசினார். பின் ஷபியுல் வீசிய இரண்டாவது ஓவரில் சச்சின் தன் பங்குக்கு இரண்டு பவுண்டரி அடித்தார். இவர்கள் வேகப்பந்துவீச்சை வெளுத்து வாங்க, சுழல் வீரரான அப்துர் ரசாக்கை அழைத்தார் கேப்டன் சாகிப்.
சச்சின் பாவம்:
ரசாக் பந்தை தட்டி விட்ட சச்சின் ஒரு ரன்னுக்காக ஓடினார். மறுமுனையில் சேவக் மறுத்தார். இதையடுத்து சச்சின்(28) பரிதாபமாக ரன் அவுட்டானார். அடுத்து வந்த காம்பிர் "கம்பெனி' கொடுக்க சேவக் தனது அதிரடியை தொடர்ந்தார். அப்துர் ரசாக் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்து அரைசதம் எட்டினார். காம்பிர் 39 ரன்களுக்கு அவுட்டானார். பின் மகமதுல்லா பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட சேவக் 94 பந்துகளில் 100 ரன்களை எட்டினார். இது உலக கோப்பை அரங்கில் இவரது 2வது சதம். ஒரு நாள் அரங்கில் 14வது சதமாக அமைந்தது. மறுமுனையில், இவருக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்த விராத் கோஹ்லியும் அசத்தலாக ஆடினார். நயீம் இஸ்லாம் வீசிய போட்டியின் 33வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். சதம் கடந்த பின் தசைப்பிடிப்பால் சேவக் அவதிப்பட்டார். இதையடுத்து இவருக்கு "ரன்னராக' காம்பிர் செயல்பட்டார்.
சேவக் 175 ரன்:
கொஞ்சம் கூட கருணை காட்டாமல் வங்கதேச பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சேவக், அப்துர் ரசாக் வீசிய போட்டியின் 37வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு இமாலய சிக்சர் விளாசினார். இவர் 175 ரன்களுக்கு ( 14 பவுண்டரி, 5 சிக்சர்) சாகிப் அல் ஹசன் பந்தில் போல்டானார்.
அறிமுக சதம்:
தனது அறிமுக உலக கோப்பை தொடரில் அசத்திய விராத் கோஹ்லி, கடைசி ஓவரில் சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு நாள் அரங்கில் இவரது 5வது சதம். யூசுப் பதான் 8 ரன்களுக்கு வெளியேறினார். இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 370 ரன்கள் எடுத்தது. கோஹ்லி(100) அவுட்டாகாமல் இருந்தார்.
முனாப் மிரட்டல்:
கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணி முனாப் வேகத்தில் திணறியது. ஸ்ரீசாந்த் தயவில், துவக்கத்தில் மட்டும் அதிவிரைவாக ரன் சேர்த்தது. பின் முனாப் பந்தில் இம்ருல் கைஸ்(34) வெளியேறியதும், ரன் வேகம் குறைந்தது. சித்திக்(37) தாக்குப்பிடிக்கவில்லை. சொந்த மண்ணில், துணிச்சலாக போராடிய தமிம் இக்பால் அரைசதம் கடந்தார். இவர் 70 ரன்களுக்கு முனாப் பந்தில் வீழ்ந்தார். கேப்டன் சாகிப் அல் ஹசன் 55 ரன்கள் எடுத்தார். முஷ்பிகுர்(25) ஏமாற்றினார். வங்கதேச அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 283 ரன்கள் மட்டும் எடுத்து, தோல்வி அடைந்தது.
அபாரமாக பந்துவீசிய முனாப் 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை இந்திய வீரர் சேவக் தட்டிச் சென்றார்.
வரும் 27ல் பெங்களூருவில் நடக்கும் இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
தப்பினார் யூசுப்
நேற்று 9வது ஓவரை முனாப் வீசினார். 3வது பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்தார் ஜுனாய்த் சித்திக். இதனை பிடிக்க ஓடிய யூசுப் பதான், பவுண்டரி பகுதியில் இருந்த விளம்பர பலகையில் மோதி கீழே விழுந்தார். அப்போது வலது காலில் அடிபட வலியால் துடித்தார். நல்லவேளை ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. இதிலிருந்து விரைவாக மீண்ட, இவர் மீண்டும்"பீல்டிங்' செய்ய களமிறங்கினார்.
பழிதீர்த்தது
கடந்த 2007ல் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்திடம் வீழ்ந்தது. இதற்கு, நேற்றைய வெற்றியின் மூலம் இந்தியா பழிதீர்த்தது.
முதன் முறையாக...
உலக கோப்பை இம்முறை முதன் முதலில்...
முதல் டாஸ் வென்றவர் வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசன்.
* முதல் பந்தை சபியுல் இஸ்லாம் வீச, இந்தியாவின் சேவக் எதிர்கொண்டார்.
* முதல் பவுண்டரி, முதல் சிக்சர், முதல் அரை சதம், சதம் அடித்தவர் என்ற சாதனையை இந்தியாவின் சேவக் தட்டிச் சென்றார்.
* முதல் உதிரி ரன், ரூபல் ஹொசைனின் "வைடு' மூலம் கிடைத்தது.
* முதல் ரன் அவுட்டாக சச்சினின் "அவுட்' அமைந்தது.
* வங்கதேச விக்கெட் கீப்பர் முஜிபுர் ரகிம், முதல் "கேட்ச்' (யூசுப் பதான்) செய்தார்.
* உலககோப்பை தொடரில் முதன் முறையாக அம்பயர் மறுபரிசீலனை முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்ரீசாந்த் பந்தில் தமிம் இக்பாலுக்கு எல்.பி.டபிள்யு., "அவுட்' தரமறுத்தார் அம்பயர் தர்மசேனா (இலங்கை). இதை எதிர்த்து தோனி, முதன் முறையாக அப்பீல் செய்தார். ஆனால் இது தவறானது.
* இந்தியா சார்பில் முதல் ஓவரின் முதல் பந்தை ஸ்ரீசாந்த் வீசினார்.
* முதல் விக்கெட்டை இந்தியா சார்பில் முனாப் படேல் கைப்பற்றினார்.
கபில் சாதனை சமன்
வங்கதேச அணிக்கு எதிராக 140 பந்தில் 175 ரன்கள் எடுத்த இந்திய அதிரடி துவக்க வீரர் சேவக், முன்னாள் இந்திய ஜாம்பவான் கபில்தேவ் சாதனையை சமன் செய்தார். கடந்த 1983ல் நடந்த உலக கோப்பை தொடரில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில், கபில்தேவ் 138 பந்தில் 175 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் சேவக், உலக கோப்பை அரங்கில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ஐந்தாவது இடம் பிடித்தார்.
இவ்வரிசையில் "டாப்-5' வீரர்கள்:
வீரர் ரன் எதிரணி ஆண்டு
கிறிஸ்டன் (தெ.ஆ.,) 188* யு.ஏ.இ., 1996
கங்குலி (இந்தியா) 183 இலங்கை 1999
ரிச்சர்ட்ஸ் (வெ.இ.,) 181 இலங்கை 1987
கபில்தேவ் (இந்தியா) 175* ஜிம்பாப்வே 1983
சேவக் (இந்தியா) 175 வங்கதேசம் 2011
மூன்றாவது அதிகபட்சம்
வங்கதேச அணிக்கு எதிராக 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 370 ரன்கள் குவித்த இந்திய அணி, உலக கோப்பை அரங்கில் தனது மூன்றாவது சிறந்த அதிகபட்ச ரன்களை பதிவு செய்தது. முன்னதாக 413/5 (2007, எதிர்-பெர்முடா), 373/6 (1999, எதிர்-இலங்கை) ரன்கள் எடுத்திருந்தது. இது உலக கோப்பை அரங்கில் பதிவு செய்யப்பட்ட ஐந்தாவது சிறந்த அதிகபட்ச ரன்கள்.
இவ்வரிசையில் "டாப்-5' அதிகபட்சம்:
அணி ரன் எதிரணி ஆண்டு
இந்தியா 413/5 பெர்முடா 2007
இலங்கை 398/5 கென்யா 1996
ஆஸ்திரேலியா 377/6 தென் ஆப்ரிக்கா 2007
இந்தியா 373/6 இலங்கை 1999
இந்தியா 370/4 வங்கதேசம் 2011
முதல் போட்டியில் அதிகம்
வங்கதேச அணிக்கு எதிராக 4 விக்கெட்டுக்கு 370 ரன்கள் குவித்த இந்திய அணி, உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற பெருமை பெற்றது. முன்னதாக கடந்த 1975ல் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
முதல் இந்தியர்
நேற்றைய போட்டியில் சதம் கடந்த இளம் வீரர் விராத் கோஹ்லி, உலக கோப்பை அரங்கில் அறிமுக போட்டியில் சதம் கடந்த முதல் இந்தியர் என்ற புதிய வரலாறு படைத்தார். தவிர, சர்வதேச அளவில் இச்சாதனை படைத்த 13வது வீரர் ஆனார்.
* இப்போட்டியில் 83 பந்தில் சதம் கடந்த இவர், உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் கடந்த மூன்றாவது இந்தியர் மற்றும் 8வது சர்வதேச வீரர் என்ற பெருமை பெற்றார்.
ஐந்தாவது முறை
நேற்று, சேவக்-கோஹ்லி ஜோடி 3வது விக்கெட்டுக்கு 203 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் உலக கோப்பை அரங்கில் 5வது முறையாக இந்திய ஜோடிகள் 200 ரன்களுக்கு மேல் சேர்த்தது. முன்னதாக கங்குலி-டிராவிட் (318 ரன்கள்), சச்சின்-கங்குலி (244 ரன்கள்), டிராவிட்-சச்சின் (237 ரன்கள்), கங்குலி-சேவக் (202 ரன்கள்) உள்ளிட்ட இந்திய ஜோடிகள் 200 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர்.
ஸ்ரீசாந்த் சொதப்பல்
நேற்று இந்தியாவின் ஸ்ரீசாந்த் படுமேசாமாக பந்துவீசினார். போட்டியின் 5வது ஓவரை வீசிய இவர், மூன்று பவுண்டரி, ஒரு "நோ-பால்', ஒரு "வைடு' (பவுண்டரி) உட்பட 23 ரன்களை வாரி வழங்கினார்.
ஸ்கோர்போர்டு
இந்தியா
சேவக்(ப)சாகிப் 175(140)
சச்சின்-ரன் அவுட் (சாகிப்/முஷ்பிகுர்) 28(29)
காம்பிர்(ப)மகமதுல்லா 39(39)
கோஹ்லி-அவுட் இல்லை- 100(83)
யூசுப்(கே)முஷ்பிகுர்(ப)ஷபியுல் 8(10)
உதிரிகள் 20
மொத்தம் (50 ஓவரில் 4 விக்.,) 370
விக்கெட் வீழ்ச்சி: 1-69(சச்சின்), 2-152(காம்பிர்), 3-355(சேவக்), 4-370(யூசுப்).
பந்து வீச்சு: ஷபியுல் இஸ்லாம் 7-0-69-1, ரூபல் ஹொசைன் 10-0-60-0, அப்துர் ரசாக் 9-0-74-0, சாகிப் அல் ஹசன் 10-0-61-1, நயீம் இஸ்லாம் 7-0-54-0, மகமதுல்லா 7-0-49-1.
வங்கதேசம்
இக்பால்(கே)யுவராஜ்(ப)முனாப் 70(86)
இம்ருல்(ப)முனாப் 34(29)
சித்திக்(ஸ்டம்)தோனி(ப)ஹர்பஜன் 37(52)
சாகிப்(கே)ஹர்பஜன்(ப)முனாப் 55(50)
முஷ்பிகுர்(கே)சப்ஸ்(ரெய்னா)(ப) ஜாகிர் 25(30)
ரகிபுல்-அவுட் இல்லை- 28(28)
மகமதுல்லா(ப)முனாப் 6(6)
நயீம் இஸ்லாம் எல்.பி.டபிள்யு.,(ப)முனாப் 2(8)
அப்துர் ரசாக் எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 1(5)
ஷபியுல் இஸ்லாம் -ரன் அவுட்-(ஹர்பஜன்) 0(1)
ருபெல் ஹொசைன் -அவுட் இல்லை- 1(6)
உதிரிகள் 24
மொத்தம் (50 ஓவர், 9 விக்.,) 283
விக்கெட் வீழ்ச்சி: 1-56(இம்ருல்), 2-129(சித்திக்), 3-188(தமிம் இக்பால்), 4-234(சாகிப்), 5-248(முஷ்பிகுர்), 6-261(மகமதுல்லா), 7-275(நயீம் இஸ்லாம்), 8-279(அப்துர் ரசாக்), 9-280(ஷபியுல் இஸ்லாம்).
பந்து வீச்சு: ஸ்ரீசாந்த் 5-0-53-0, ஜாகிர் கான் 10-0-40-2, முனாப் 10-0-48-4, ஹர்பஜன் 10-0-41-1, யூசுப் பதான் 8-0-49-1, யுவராஜ் 7-0-42-0.

அசத்தல் வெற்றி பெறுமா நியூசிலாந்து!: சென்னையில் இன்று கென்யாவுடன் மோதல்

சென்னை: உலக கோப்பை தொடரில் இன்று சென்னையில் நடக்கும் லீக் போட்டியில், நியூசிலாந்து அணி, கென்யாவை சந்திக்கிறது. இதில் நியூசிலாந்து முதல் அசத்தல் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் இணைந்து உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் "ஏ' பிரிவு லீக் போட்டியில் அனுபவ நியூசிலாந்து அணி, கென்யாவை சந்திக்கிறது.
பயிற்சி ஏமாற்றம்:
நியூசிலாந்து அணி சமீபத்திய ஒரு நாள் போட்டிகளில் பெரிதாக எந்த வெற்றியும் பெறவில்லை. வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான மோசமான தோல்வியால் துவண்டு கிடக்கிறது. உலக கோப்பை பயிற்சி போட்டியிலும், அயர்லாந்தை மட்டும் வென்ற இந்த அணி, இந்தியாவிடம் மோசமாக தோற்றது.
இருப்பினும், அணியின் முன்னணி வீரர் கப்டில், ரைடர், ரோஸ் டெய்லர், பிராங்ளின் ஆகிய "டாப் ஆர்டர்' வீரர்கள் நல்ல "பார்மில்' உள்ளனர். இவர்களுடன் பிரண்டன் மெக்கலம், நாதன் மெக்கலமும் ரன் சேர்க்க முயற்சிக்கலாம்.
வருவாரா வெட்டோரி:
வேகப்பந்து வீச்சில் மில்ஸ், பென்னட், டிம் சவுத்தி கைகொடுக்கலாம். "ஆல்- ரவுண்டர்கள்' ஜேக்கப் ஓரம், ஸ்காட் ஸ்டைரிஸ் போன்றவர்களும் எதிரணியின் ரன்குவிப்புக்கு அணையிடலாம். பயிற்சி போட்டிகளில் களமிறங்காத வெட்டோரி இன்று களமிறங்குவார் என தெரிகிறது.
அதிர்ச்சி தருமா?
கடந்த 2003 உலக கோப்பை தொடரில் அதிர்ச்சி மேல், அதிர்ச்சிகளை தந்து அரையிறுதிக்கு முன்னேறியது கென்யா. இதனால் இவர்களை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. இதற்கேற்ப, நான்கு உலக கோப்பை பயிற்சி ஆட்டங்களில் 2ல் வென்றுள்ளது, இவர்களது பலத்தை காட்டுகிறது. இதில் ஸ்டீவ் டிகாலோ, வாட்டர்ஸ் இருவரும் சதம் அடித்துள்ளனர். ராகேப் படேல், காலின்ஸ் ஒபுயா, ஜாய்ஸ் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர்.
பவுலிங்கில் ஜிம்மி கமான்டே, ஜேம்ஸ் நிகோகே, நெகேமையா, தாமஸ் ஒடாயோ போன்றவர்கள் பயிற்சி ஆட்டங்களில் அசத்தியுள்ளனர். இருப்பினும் அணியில் இடம் பெற்றுள்ள 7 பேர் புதுமுகம் என்பதால், நியூசிலாந்தை சமாளிப்பது மிகவும் கடினம்.

இலங்கை-கனடா மோதல்

அம்பாந்தோட்டை: "ஏ' பிரிவில் இன்று நடக்கும் உலக கோப்பை லீக் போட்டியில், பலம் வாய்ந்த இலங்கை அணி, கனடாவை சந்திக்கிறது. இதில், இலங்கை அணி எளிதாக வெற்றி பெறலாம். 2003ல் கனடாவை 36 ரன்களுக்கு சுருளச் செய்து, சாதனை படைத்துள்ளது. கோப்பை வெல்லும் பந்தயத்தில் முன்னணியில் உள்ள இலங்கை அணிக்கு தில்ஷன், ஜெயவர்தனா, தரங்கா, கபுகேதரா, சமரவீரா, சமரசில்வா ஆகியோர் கைகொடுக்கலாம்.
பவுலிங்கில் "யார்க்கர்' புகழ் மலிங்கா, சுழல் ஜாம்பவான் முரளிதரன் உள்ளிட்டவர்கள் இருப்பது பலம்.
கனடா மோசம்:
நான்காவது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் கனடா அணி, இதுவரை 12 போட்டிகளில் பங்கேற்று ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. 11 போட்டிகளில் தோற்றுள்ளது. இம்முறை பயிற்சியில் நெதர்லாந்தை வென்ற நம்பிக்கையுடன் உள்ளது. இந்த அணிக்கு 2003 தொடரில், 67 பந்துகளில் சதம் அடித்த டேவிட்சன், குணசேகரா, கேப்டன் பகாய் கைகொடுக்கலாம்.